பொது
சீனர்களின் அதிஷ்டத்தின் பின்னணி
by nirujah on Jan.26, 2012, under அனுபவங்கள், பொது
நான் பார்த்த அளவில், சீனர்கள் அதிகளவு அதிஷ்டத்தை நம்புகிறவர்களாக இருக்கின்றார்கள். அதில் உள்ள உண்மைத் தன்மை, ஐதீகம் என்பவற்றுக்கு அப்பால், அவை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா, இலங்கை வாழுகின்ற மக்களாலும் பின்பற்றப்பட ஆரம்பித்துவிட்டது எனபது ஆச்சரியமான உணமையாகும்.
குறிப்பாக, நம் அநேகரின் வீடுகளிலும் தற்போது பல அளவுகளில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நமது கிருபாநதவாரியா போன்ற உருவம் கொண்ட அதிஷ்டப் பொம்மையைக் கூறலாம். இது தவிர, வீட்டு வாசல்களில் தொங்கவிடப்படக்கூடிய பொருட்கள், அதிஷ்டமான மீன், அதிஷ்டமான தாவரங்கள் என பல வகையான அதிஷ்டப்பொருட்கள் தற்போது விற்பனையில் உண்டு. இவை அனைந்த்தும் சீனாவின் தாக்கத்தால் எம்மிடையே புளக்கத்தில் வந்திருப்பவையே.
இவை தவிர, இன்னும் சில விடயங்களையும் கடந்த சில வாரங்களாக என்னால் பார்க்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, இது சீனர்களுடைய புத்தாண்டுக்காலமாகையால் அவர்களின் அதிஷ்டம் குறித்த நம்பிக்கைகளும் சற்று வித்தியாசமாகவே இருந்தன.

Honey Orange எனப்படும் ஒருவகைத் தோடம்பழங்களை மக்கள் அதிகமாக வாங்கி உரித்துச் சாப்பிட்டார்கள். நம்மூரில் கிடைப்பது போன்ற தோடம்பழங்களே இவை என்றாலும் பெயருக்கு ஏற்றால் போல் இதன் சுவையோ மிகவும் இனிமையாக இருக்கும். இதனை இவர்கள் சீனப்புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் வாங்கி அன்பளிப்பாக பிறருக்கு கொடுக்கவும் தாங்களே உண்ணவும் செய்கின்றார்கள். அதிக அளவான தோடம்பழங்களை தாங்கள் உண்பதால் பிறக்கப்போகும் புத்தாண்டானது மிகவும் அதிஷ்டகரமானதாக இருக்கும் என்று இவர்கள் நம்புகின்றார்கள்.

Yusheng அல்லடு ஜீ சங் எனப்படும் ஒரு உணவு வழக்கமாகும். ஜீ சங் என்றால் சமைக்கப்படாத மீன் (raw fish). இதன் போது மீனானது சமைக்கப்படாமல் ஏனைய உணவு வகைகளுடன் சேர்த்து பரிமாறப்படும். சீனப்புத்தாண்டு பிறந்து முதல் 15 நாட்களுக்குள் இம்மாதிரியான மீனை உண்ணும் பழக்கத்தை சீனர்கள் கொண்டிருக்கிறாகள். இதன் மூலமும் தமக்கு அதிஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த மீனோடு சேர்த்து முறுக்கு போன்ற உணவுப்பொருட்கள், பொரிகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் சுவையூட்டிகள் எல்லாவற்றையும் சேர்த்து இவர்கள் உண்கின்றார்கள்.
மாநகர குப்பை வண்டிகளே…
by nirujah on Jun.22, 2011, under அனுபவங்கள், பதிவுலகம், பொது
நமது அன்றாட வாழ்க்கையில் சுமூகமான ஓட்டத்துக்கு பலரும் பல வழிகளில் உதவுகின்றார்கள். நாம் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும், முப்பாட்டன் காலத்திலிருந்து பரம்பரைக் கோடீஸ்வரர்களாக இருந்தாலும், எனக்காக தனியாக ஒரு பள்ளிக்கூடம் கட்டி அதில் நாம் மட்டுமே படிக்க முடியாது. அப்படியே படித்தாலும், சாதாரண ஒரு மாணவனாக ஒரு பாடசாலையில் 50 பேர் கொண்ட வகுப்பில் அடிக்கும் லூட்டிகளும் தேடிப்பார்த்தாலும் கிடைக்காது. அது போல தான், போரூந்துகள், தொடரூர்ந்துகள், சாலை திருத்துவோர், அரிசி, காய்கறிகள் மற்றும் எவையாக இருந்தாலும் நாம் பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டும்.

அதே போல தான் நகர் பகுதிகளில் தினமும் அல்லது ஒன்று விட்ட ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள குப்பைவண்டிகளும் தொழிளாலர்களும். அவர்கள் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டாலோ, அல்லது வேலைப்பகிஸ்கரிப்பு செய்தாலோ நாம் படும் அவலங்களும் கஷ்டங்களும் நாம் உணர்ந்ததே.
ஆனால் இதையே ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு இத்தொழிலாளர்கள் செய்யும் அட்டகாசமோ அளவுக்கு அதிகம். மற்ற இடங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது. நான் கொழும்புக்கு வந்ததில் இருந்து பல இடங்களில் வசித்தாலும், அவை அனைத்தும் தெகிவளை மாநகராட்சி சபைக்கு உட்பட்ட பிரதேசத்துக்குள்ளேயே இருந்துள்ளேன். எல்லாப் பகுதிகளிலும், குப்பை சேகரிக்கவருபவர்கள் மக்களிடையே வலுக்கட்டாயமாக ஒரு தொகைப்பணத்தை மாதாமாதம் அறவிடுகின்றர்கள்.
இவ்வாறாக, குப்பை சேகரிக்கச் செல்லும் போது மக்களிடம் பலாத்காரமாக பணம் வாங்குதல் நகராட்சி சட்டத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ சட்டமாக இருக்கிறதோ எனக்குத் தெரியாது. மனிதாபிமான அடிப்படையில், இவர்கள் குப்பை சேகரிக்கப்போகும் இடத்தில் இருக்கின்ற மக்கள் அவர்களாக அன்பளிப்பு அடிப்படையில் பணம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இப்படி அன்பளிப்பு அடிப்படையில் உருவான கலாச்சாரம் தான் இப்போது இப்படி கட்டாய பணவசூலாக மாறியிருக்கிறதோ தெரியாது. எனினும் கண்டிப்பாக இவ்வளவு பணம் தர வேண்டும் அல்லது அடுத்தமுறை குப்பை எடுக்க வரமாட்டோம் என்று மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
குறிப்பாக, இரு வருடங்களுக்கு முதல், நான் தெகிவளை லியனகே வீதியில் வசித்தபோது, அந்த தெருவில் எல்லாத்தரப்பான மக்களும் வாழ்கின்றார்கள். ஒரு சிலரால் மாதம் 100 ரூபாவோ 150 ரூபாவோ கொடுக்கமுடியாமல் இருந்திருக்கலாம் போலும். இதனைக் காரணமாகக் காட்டி, அந்தத் தெருவுக்கே குப்பை எடுக்க வருவதில்லை. அந்தக்காலத்தில் தெருவோரங்களில் குப்பை போடுதல் சட்டவிரோதமாக இல்லாமல் இருந்த காரணத்தால் எம் தெருவில் உள்ள அனைவரும் தினமும் காலிவீதிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு குப்பை மேட்டுக்கே எமது குப்பைகளை கொண்டு சென்று வீசி இருந்தோம். ஏன் நான் இப்போது இருக்கும் பகுதியில் கூட மாத முடிவில் கண்டிப்பாக அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய பணம் வசூலிக்கப்பட்ட பின்னரே, குப்பைகளை அப்புறப்படுத்துக்கின்றார்கள்.
எனக்கு இப்போது இருக்கும் சந்தேகம் எல்லாம், ஒரு ஜனநாயக நாட்டிலே, அரச தொழிலாளர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலேயே சம்பளம் வழங்கப்படுகின்ற போதிலும், அதையும் தாண்டி, சாதாரண மக்களிடமும் இப்படி பலவந்தமாக காசு வாங்குகிறார்களே இதை மேலதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லையா. அல்லது இத் தொழிலாளர்களின் இந்த பொறுப்பில்லாத செயல்களுக்கு மேலதிகாரிகளும் உடந்தையா?
பிச்சை புகினும் கற்கை நன்றே…
by nirujah on May.26, 2011, under பொது
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – ஔவைப்பாட்டி
பிச்சைகாரர்கள்: நான் இந்தச் சொல்லைக் பயன்படுத்துவது சரியோ எனக்குத் தெரியாது; இருந்தாலும் வேறு கௌரவமான சொல் எனக்கு கிடைக்கவில்லை. முன்பெல்லாம் நாம் வாழுகின்ற இந்த வறிய நாடுகளிலோ அல்லது வளர்ந்து வரும் நாடுகளிலோ தான் பிச்சைக்காரர்கள் இருக்கின்றார்கள் என நினைத்திருந்தேன். பின்னர், சற்று வெளியே செல்ல நேர்ந்த போது தான், ஐக்கிய இரச்சியம், அமெரிக்கா, கனடா போன்ற அதிவளர்ச்சி பெற்ற நாடுகளிலும் இவர்கள் இருக்கின்றார்கள் என அறிந்து கொண்டேன். ஆனால் என்ன, அந்தந்த நாடுகளுக்கேற்ப அவர்களின் வாழ்கைத்தரமும் தமது தொழிலுக்கு பயன்படுத்தும் யுக்திகளும் வேறுபடுகின்றன.
இலங்கையில் உள்ள பிச்சைக்காரர்களை எடுத்துக்கொண்டால், அவர்களில் பலவகை உண்டு. உண்மையாகவே உடல் ஊணமுற்றவர்களாக வேறு தொழில் செய்ய முடியாதவர்கள், உடல் வலு நிறையவே இருந்தும் பிச்சை எடுப்பவர்கள், உடல் வலும் மற்றும் கல்வி வளம் இருந்தும் பிச்சை எடுப்பவர்கள், இயற்கை அனர்த்தம் காரணமாக பிச்சை எடுப்பவர்கள் என்று வகைப்படுத்திக்கொண்டே போகலாம்.
பிச்சை எடுப்பவர்களில் எனக்கு அதிக பரிதாபத்தையும், அதிக எரிச்சலையும் தருபவர்கள் சிறுவர்கள். சிறுவர்கள் எனும் போது, கதைக்கத் முடிந்தவர்கள், பயம், வெட்கம், சமூக அந்தஸ்து, அவர்களின் எதிர்காலம் என எதைப் பற்றியும் எண்ணிப்பார்க்க முடியாதவர்கள். இவர்கள் தமது குடும்ப சூழ்நிலையாலோ அல்லது அனாதரவாக்கப்பட்டதாலோ தான் பிச்சை எடுக்கின்றார்கள் என்றாலும், அவர்களின் எதிர்காலத்தை நினைக்கும் போது நான் சற்றே மனம் வருந்தியதுண்டு. இன்னும் எவ்வளவு காலம் தான் இவர்கள் இப்படியே இருக்கப் போகின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சில வேளைகளில், இவர்கள் வீதியால் செல்லும் எமது கையைப் பிடித்துக்கொண்டு, கண்டிப்பாக ஏதாவது தரவேண்டும் என்பது போன்ற ஒரு மிரட்டும் தொனியில் பேசுவார்கள். பொதுவாக இத்தகைய சிறுவர்களுக்கு நான் ஒரு போதும் காசு போட்டது இல்லை. இது போன்ற சிறுவர்களுக்கு காசு குடுப்பதன் மூலம் இவர்களை நாம் பிச்சை எடுப்பதற்கு இன்னும் ஊக்குவிப்பது போன்று உணர்வதோடு மட்டுமல்லாமல், பிச்சை எடுத்து பிழைக்க முடியாமல் போனால் ஏதாவது ஒரு வேலைக்காவது போய் வாழ முனைவார்கள் என்ற நப்பாசையும் தான்.

பிச்சைஎடுப்பவர்களைப் பற்றிப் பேசும் போது, கண்டிப்பாக கணவன் மனைவியாக இருவருமே பிச்சை எடுத்து வாழ்வதோடு தமக்கு என்று குழந்தைகளையும் பெற்றுக் கொள்பவர்களை கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இப்படியான தரப்பினரை நான் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். இவர்களைப் பார்க்கும் போது கண்டம் துண்டமாக வெட்டியெறியவேண்டும் என்னும் அளவுக்கு கோபம் தான் வருகிறது. இவர்களுக்கு உடல் வலு இருக்கிறது. இருந்தும், சோம்பேறித்தனமாக பிச்சை எடுக்கின்றார்கள். அவர்கள் தான் அப்படி வாழ்கின்றார்கள் என்றால், வருடத்துக்கு ஒன்றாக நான்கு ஐந்து என்று குழந்தைகளையும் பெற்று தெருவில், நடுத்தெருவில் பிச்சை எடுக்க விடுகின்றார்கள். கேவலம் இருவரின் உடல் சுகத்தினால் வருகின்ற ஒரு ஜீவன் நாளை எவ்வளவு வருந்தப்போகின்றது என்பதைப் பற்றி இவர்களால் ஏன் தான் சிந்திக்க முடியாமல் இருக்கின்றதோ!!! இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பல இருந்தாலும், தெகிவளை சந்தியில் உள்ள பிரபல ஆடை விற்பனைக்கடையை அண்டிய பகுதியில் உள்ள ஒரு தம்பதிப் பிச்சைக்காரர்கள் சிறந்த உதாரணம். இவர்களை நான் குறைந்தது 2004ல் இருந்து பார்க்கின்றேன். அவர்களும் மாறுவதாக இல்லை. குழந்தைகள் பிறப்பதும் நிற்பதாக இல்லை.
அடுத்த வகையினர் பேரூந்து போன்ற பொது வாகனங்களில் ஏறி பிச்சை எடுப்பவர்கள். சில வேளைகளில் கணக்கு போட்டு பார்த்தால் நாமெல்லேம் இவர்கள் மேல் பொறாமைப்படவேண்டும். குறிப்பாக ஒருவர் ஒரு பேரூந்தில் ஏறி இறங்கினால் 20 ரூபாவில் இருந்து 40 ரூபா வரை இவருக்கு கிடைக்கும். சராசரியாக 25 ரூபாய் என்று கணக்கு வைத்துக்கொண்டு சிறிய கணக்கீடு ஒன்றைப் பார்ப்போம்:
- ஒருவருக்கு, ஒரு பேரூந்தில் செலவழியும் நேரம் 10 நிமிடங்கள்
- ஒரு மணித்தியாலத்துக்கு குறைந்தது 5 பேரூந்துகளில் ஏறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
- எனவே அவர் ஒரு மணித்தியாலத்தில் 5×25 = 125 ரூபாய் கிடைக்கப் பெறுகிறார்.
- ஒரு நாளைக்கு, காலை எட்டு மணிக்கு ஆரம்பித்தால் இரவு 9 மணிவரை கண்டிப்பாக மேலே கூறிய கணக்கின்படி அண்ணளவு வருமானம் இருக்கும்.
- ஆக, உணவு வேளை, இடைவேளை போன்றவற்றுக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கினாலும் இவர் நாளொன்றுக்கு 12மணிநேரம் பிச்சை எடுக்கலாம்.
- ஆகவே 125×12 = 1500 ரூபாய் நாள் வருமானம்.
- அவருக்கு அந்த குறிப்பிட்ட நாளில் இரண்டு நேர சாப்பாடாவது தானமாக கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்.
- ஆக, அவருக்கு ஒரு வேளைச் சாப்பாட்டுக்கான செலவும் மற்றும் நானாவித செலவுமாக கூடியது 300 ரூபாய் செலவு செய்தால், ஒரு நாளைக்கு அவர் 1200 ரூபாய் சேமிக்கலாம்.
- இவ்வாறாக, மாதத்துக்கு, 1200×30 = 36000 ரூபாய் சேமிக்கலாம்.
- தவிர, இவர்களுக்கு வீடு கிடையாது. எனவே மின்கட்டணம், நீர்க்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வருமான வரி என்று எதுவுமே கிடையாது. எனவே, சேமிப்பு அப்படியே இருக்கும்.
- ஒரு மாதத்தில் 36000 என்றால் ஒரு ஆண்டில் 4,32,000 ரூபாயும் ஐந்து வருடங்களில் 21,60,000 ரூபாயும் சேமிக்க முடியும்.
இனிமேல் பேரூந்தில் யாராவது பிச்சை எடுக்க வந்தால், அவரை மில்லியனரை உபசரிப்பது போல் மரியாதை குடுங்கள்.
சில வாரங்களுக்கு முன்னர் பேரூந்தில் நடந்த சம்பவம் ஒன்று. ஒருவர் பேரூந்திலே பிச்சை எடுக்கும் போது, பிரயாணி ஒருவர் தன்னிடம் இருந்த ஒரு ரூபாவை அவருடைய அந்த மத்தளம் போல் தட்டும் கருவிக்குள் போட்டார். அந்த பிச்சைக்காரனோ, அந்த ஒரு ரூபாவை மீண்டும் அவரிடமே திருப்பிக்குடுத்து அவரையே வைத்திருக்கச் சொன்னான். ஒரு வேளை நான் போட்ட கணக்குக்கு ஏற்ப வாழ்பவரோ என்னவோ?
இதைவிட, கட்புலன் குறைந்தவர், அங்கவீனர்கள், மருத்துவ உதவி தேவைப்படுவோர் என பலரும் பலவழிகளில் பிச்சை எடுக்கின்றனர். என்ன இருந்தாலும், நாளாந்தம் தமது உணவுத்தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத பல குடும்பங்கள் நம்மிடையே பல இருக்கின்றன. அதே போல், பிச்சை எடுத்து தண்ணி அடிப்பவர்களும் இதே சமுதாயத்தில் தான் வாழ்கின்றார்கள்.
பாத்திரம் அறிந்து பிச்சையிடு
