அனுபவங்கள்
ஃபக்கோடா [04-02-11]
by nirujah on Feb.04, 2011, under அனுபவங்கள், ஈழம், பதிவுலகம்
என்னடா இவன் புதுசா ஃபக்கோடாவோட ஆரபிச்சிருக்கிறானே எண்டு யாரும் திட்டாதீங்க. அப்பப்ப போடுற பதிவுகளுக்கு ஏதாவது தலைப்பு வைக்க வேணும் என்டு கன நாலா யோசிச்சு கொண்டு இருந்தனான். நூடுல்ஸ், பர்கர், பாஸ்ட்டா என்டு எல்லா பெயரும் போய்விட, கடைசியில் கடந்த பதிவர் சந்திப்பில் பிரபலமான ஃபக்கோடா தான் மிஞ்சியது. சரி, ஒருத்தரும் அதற்கு இதுவரை சொந்தம் கொண்டாடாதபடியால் இனி அப்பப்ப ஃபக்கோடா வரும். பல நாட்களாக எழுத நினைத்தும், அதற்கும் அதிகமாக ஆணிபுடுங்க வேண்டியிருந்ததால் எழுத முடியவில்லை.
#tnfisherman
இந்த விடயம் பற்றி நான் கீச்சுவில் ஏற்கனவே சொல்லியிருந்ததால், இது பற்றி நிகழ்ந்த எந்தவிதமான விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. தனிப்பதிவும் போடவில்லை.
- இலங்கை மீனவர்களின் வளம் சுரண்டப்படுகின்றது.
- இந்திய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி உள்ளேவருகின்றார்கள்.
- பாரிய ரோலர்களில் வருகின்றவர்களினால் இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுகின்றன.
- இலங்கைக் கடற்படை பலவேளைகளில் இந்திய மீனவர்களைக் கைது செய்தும், சிலவேளைகளில் அவர்களைக் கொலைசெய்தும் கொண்டிருக்கின்றது.
- கொல்லப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் வெறும் படகுகளில் வந்து தம் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிப்பவர்கள்.
- இதற்கெல்லாம் முடிவு கச்சதீவை திரும்பப் பெறுவது மட்டும் தான்
- நிருபமாராவ் வருகை.
- தமிழருக்கு பிரச்சனை வரும்போது எப்போதும் ஒரு மலையாளியே இலங்கைக்கு அனுப்பப்படுகின்றார்
இப்படியாக பல கருத்துக்கள் உலாவின. சற்று முன்னர் நான் கேட்ட ஒரு செய்திக்குறிப்பில் வடபகுதி மீனவர்களுக்கு இன்னமும் கடலில் மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படாதவிடத்து, தென்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் வடபகுதிக் கடல்களில் மீன் பிடிக்கிறார்கள் என்பது தான்.
இப்படிப் பல விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில், #tnfisherman என்று இணையத்தில் ஏற்பட்டுள்ள ஒரு அலையைப் பற்றி சிலர், அது ஒரு கண்துடைப்பு, தமிழகத்தின் அரசியல் பின்புலத்தில் உருவானது என்று பல்வேறு வகையாக விமர்சிக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, இந்தப்பிரச்சனையிலாவது இணையத்தில் ஒரு அலை உருவாகியிருக்கின்றது. இதற்கு பின் என்ன நடக்கின்றது என்பதை ஆராய்கின்ற சந்தர்ப்பத்தில், அதன் வலிமை வரவேற்கப்படவேண்டியது. ஒரு விடயம் கவனித்தீர்களா, இதுவரை சுமார் 500 வரையான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்திய(தமிழக), இலங்கைப் பத்திரிகைகளில் இது ஒரு செய்தியாக போடப்பட்டது. ஒரு கட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள் தொடர்ந்து தொழிலுக்கு போகாமல் பகிஷ்கரிப்பும் உண்ணாவிரதமும் இருந்தார்கள். 2003 – 2004 பகுதியில் சன் தொலைக்காட்சி இதை பூதாகாரப்படுத்தியது. இருந்தும் அன்று, இப்போது நாம் விவாதிப்பது போல் நம் இலங்கை மீனவர்களைப் பற்றி பேசவே இல்லை.
ஆக, #tnfisherman என்ற அலை, பலவிடயங்களைப் பற்றி எம்மைப் பேசத்தூண்டி இருக்கின்றது. நாமும் நமது மீனவர்களைப் பற்றி கொஞ்சமாவது பேச முற்பட்டிருக்கின்றோம். இது வெறும் காலமாற்றத்தால் உருவானதாகக்கூட இருக்கலாம். இதனை ஆதரிப்பதோ விமர்சிப்பதோ அவரவர் புரிந்துணர்தலுக்கு இயல்பானது.
சுதந்திர தினம்
இன்று இலங்கைக்கு சுதந்திர தினமாம். நல்லது. அதுவும் 63வது சுதந்திரதினமாம். அது மட்டுமல்ல, 2வது சுதந்திர தினமும் கூடவாம். கடந்த வருடம் சுதந்திர தினம் கண்டியில் கொண்டாடப்பட்டதாம். இம்முறை கதிர்காமம் என்று அழைக்கப்பட்ட கதரகமவில் கொண்டாடப்படுகின்றதாம். ஏனென்றால் இது ஒரு அனைத்து மக்களுக்கும் பொதுவான(?) வழிபாட்டுத் தலமாம்.
இயற்கை
மீண்டும் கிழக்கில் மழையும் குளிர்காலநிலையும் அதிகரித்து விட்டன. கிழக்கின் நீரேந்து பிரதேசங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மீண்டும் மக்கள் அவலங்களை எதிர்நேக்கத் தொடங்கி விட்டார்கள். இன்று காலையில் தான் மன்னர் தனது உரையில், துரித கதியில் முழு அளவில் மக்களுக்கு உதவுவோம் என்று. பாப்பம்.
இது இப்படி என்றால், ஒஸ்ரேலியாவின் குயின்ஸ்லாட் பகுதியை தாக்க ஆரம்பித்த, யாசி என்று பெயர்வைக்கப்பட்ட சூறாவளி இதுவரை பல கோடி மதிப்பான பொருட்சேதத்தை ஏற்படுத்தி உள்ளதோடு இது வரை ஒருவர் இறந்தும் இருவர் காணாமலும் போயுள்ளனர். யாசி தற்போது தொடர்ந்து ஒஸ்ரேலியாவின் குறுக்காக பயனித்துக்கொண்டிருக்கிறது. இது குயின்ஸ்டான்டை தாக்கும் போது, மணிக்கு சுமார் 290 கிமீ வேகத்தில் இருந்தது. இதன் குறுக்களவானது மிகவும் பெரியதாக கிட்டத்தட்ட முழு ஐக்கியராட்ச்சியத்தையே அதற்குள் கொள்ளும் அழவு பெரிதாக உள்ளது.
அனுராதபுரத்தின் தமிழ் எச்சங்கள்
by nirujah on Jan.11, 2011, under அனுபவங்கள், பதிவுலகம்
நீண்ட நாட்களாக எழுத நினைத்து இருந்த ஒரு விடயம் இது. கடந்த வருடம் தீபாவளிக்கு முதல் நாள், எனது உறவினர் ஒருவருடன் அனுராதபுரம் செல்ல நேர்ந்தது. அவர் பிறந்தது முதல் திருமணம் முடிக்கும் வரை, கிட்டத்தட்ட சுமார் 25 வருடங்களுக்கு மேல் அனுராதபுரத்திலேயே வாழ்ந்தவர். அது நாள் வரைக்கும் அனுராதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற கதையே எனக்கு தெரியாது. வேண்டுமென்றால் யாராவது ஓரிரு குடும்பகங்கள் தொழில் நிமிர்த்தமாக அங்கு வாழ்ந்திருக்கலாம் என்றே எண்ணியிருந்தேன்.
ஆனால் அங்கே எனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதல் அதிர்ச்சி, அங்கே இருந்த இரு இந்து ஆலயங்கள். ஒன்று முருகன் ஆலயம். இன்னொன்று பிள்ளையார் கோவில். முருகன், பிள்ளையார் போன்ற இந்துக் கடவுள்களை அனுராதபுரத்தில் செறிந்து வாழும் சிங்கள் மக்களும் வணங்குவது பொதுவான ஒன்று எண்டு வைத்துக்கொண்டாலும், அதை விட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருந்தது. அங்கே பெரிய தமிழ் பாடசாலை ஒன்றும் உள்ளது. விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயம் என்பது இதன் பெயர். அது மட்டுமல்லாமல், விவேகானந்த சொசைட்டி போன்ற பல நிறுவனங்களும் இருந்துள்ளன; இருக்கின்றன.

1950 களின் இறுதிக்கால கட்டத்தில் இருந்து விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களே கல்வி கற்று வந்துள்ளனர். இந்த பாடசாலை அனுராதபுர நகரின் மையப்பகுதியில் இருந்து வெறும் 1கிலோ மீற்றர் சுற்றுவட்டத்துக்குள்ளேயே இருக்கிறது. 1970களின் இறுதிக் காலப்பகுதியில் நடைபெற்ற இனக்கலவரங்களால், இங்கு வாழ்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் அன்றைய காலகட்டத்திலேயே வெளியேறிவிட்டனர். தற்போதும் இந்த பாடசாலை இங்கு செயற்படுகின்றது. ஆனால் தற்போது அதிகமாக முஸ்லிம் சமூகத்தவர்களே கல்வி கற்கின்றனர்.
இதைவிடக் கொடுமையான விடயம், அங்கு இருந்த ஆலயங்களில், கதிரேசன் கோவில் என அழைக்கப்படும் முருகன் ஆலயம் இந்த விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்துக்கே சொந்தமானதாம். ஆனால் 1985க்கும் பின்னர் இந்த ஆலயம் முற்றாக மூடப்பட்டிருந்ததாக அறியப்பெற்றேன். 2000ம் ஆண்டுக்கு பின்னர், ஓய்வுபெற்ற ஒரு வான்படை உத்தியோகத்தரும், பிறப்பிலே தமிழ் சைவரும் மற்றும் சிறுவயதிலிருந்தே அவர் அனுராதபுரத்திலே வசித்து வந்த ஒருவரின் ஊக்கத்தினால் மீண்டும் இக்கோயில் திறக்கப்பட்டு, பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் ஆலயமும் இவராலேயே தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதை விட, இன்னும் நகருக்கு வெளியே ஓர் அம்மன் கோவில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் போக அவகாசம் கிடைக்கவில்லை. இது தவிர, நகருக்குள்ளே பல தமிழ்க்கடைகள் தமிழ்ப் பெயர்பலகையுடன் இருந்ததையும் நான் ஆச்சரியத்துடன் பார்க்கத் தவறவில்லை.
இவை அனைத்தும் வரலாறுகள். ஒரு புராதன நகரிலே, அதுவும் இந்த நாடு விடுதலை அடைந்த பின்னர், இங்கே ஒரு தமிழ் பள்ளிகூடம் அமைக்க வேண்டிய அளவுக்கு இங்கே தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். தற்போது நாம் கொழும்பில் வெள்ளவத்தையிலோ, கொட்டகெனாவிலோ அல்லது சொய்சா புரவிலோ வாழ்ந்து கொண்டிருப்பது போன்று சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்திருக்க சாத்தியங்கள் குறைவு. ஆகவே, தற்போது, வவுனியாவின் ஜோசப் காம்ப்க்கு அருகாமைசார்ந்த கற்குழியின் எல்லையுடனான பகுதியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசம் கண்டிபாக அனுராதபுரம் வரை ஓர் தொடர்பினை கொண்டிருந்திருக்க வேண்டும். இது தவிர, நான் அங்கு சிலருடன் கதைத்த வேளை, இப்போதும் பல தமிழ்க்குடிகள் அனுராதபுரத்திலிருந்து, மிகிந்தலை வரையான பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தமது அடையாழத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினார்கள். அது தவிர, நகருக்குள் இருந்த பல வீடுகளை காண்பித்து, இவை அந்த நாட்களில் தமிழ்ர்களுக்கு சொந்தமாக இருந்ததாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நான் அதிகம் வரலாறு சார்ந்த புத்தகங்களை வாசிக்க தவறியதால் எனக்கு இவை தெரியாமல் போனதோ, அல்லது புத்தகங்களிலும் இவை இல்லையோ நான் அறியேன். ஆனால், இவை முடிந்த வரலாறுகளாக பார்க்க முடியாது. இது ஓர் தொடர்ச்சி. இடையே ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் இது சற்றே மந்த கதியில் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது மீண்டும் வரலாறு வளைக்கப்பட முயலப்படுகின்றது. என்ன செய்ய, எனது உணர்வுகள் பலகாலமாகவே விரல் நுனிக்கும், தட்டச்சு விசைகளுக்கும் இடையே தற்கொலையுறுகின்றன.
2010 ஏ புறப்படு
by nirujah on Dec.31, 2010, under அனுபவங்கள், பதிவுலகம்
மில்லேனியம் தனது முதல் தசத்தை இனிதே இன்று நிறைவு செய்கின்றது. தனிப்பட்ட முறையில் இவ்வாண்டு பல்வேறுபட்ட பரந்த அனுபவங்களை எனக்கு கொடுத்திருந்தது. இந்த தசாப்ப்ததின் இறுதிப் பதிவை எனது முகப்புத்தகதில் நான் போட்ட நிலைகளுள் சிலவற்றை மீண்டு முடிக்கின்றேன்.
டேய்…! யார்ரா அங்க… 2 நாளைக்கு லண்டன்ல மழை பெய்யபோகுது…! கொட எல்லாம் வெளியில எடுத்து தூச கீச தட்டி வைங்கடா…! அண்ண நாளைக்கு தோட்டத்துக்கு போகணும்..! மொக்கை
மறுபடியும் பசிக்குதே…! இது வரை முகப்புத்தகத்தில் இறுதியாக உள்ள நிலை.
முகப்புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வபோது கவிதை என்ற பெயரில் போட்டவை:
என் உணவு வேளைகளின்
புரையேறும் நிமிடங்களைக் கேட்டுப்பார்…!
உன் நினைவலைகள் என்னைத்
தாக்கட்டுமே என்று நீர் அருந்துவதே இல்லை…!
இத்தனை தென்னைமரங்களும்
காத்துத்தவம் கிடந்தும்….
அருகே வருவதாய் வந்து,
எட்டி மட்டும் பார்த்துச்செல்கிறாயே…..???
கடலலையே….!!!
நீயும் பெண்ணின் அம்சமோ…
தெளிந்த வானமாய் ஓர் மனம் வேண்டும்….!
அதில் ஒரே சூரியனாய் நீ வேண்டும்.
உன்னொளி பெற்று நான் மதியாக வேண்டும்…!
பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே.மட்டுமல்ல
காதலின் பொழுது போக்கும் கூட…
It’s really hard for me to accept….!
You were with me when I was stressed…!
When I needed some one…!
When I wanted to pass my time…!
But…. Things has to change…!
And you cant be with me any more….!
நம்முடைய முதல் சந்திப்பு
என்னுடைய முதல் தோல்வியின்
பரிசாய்க் கிடைத்தது..! அன்று முதல்,
நம் முதல் ஸ்பரிசம்,
என் உதடுகளில் நம்முடைய முதல் முத்தம்..!
அந்த நறுமணம்..!
எனக்குத் தெரியும்..;
நம் ஒவ்வொரு சந்திப்புகளிலும் எனக்காக நீ மரணித்தாய் என்று..!
காற்றுடன் கலந்த அந்த கடற்கரைப் பொழுதுகள்…
கல்லூரியின் பின் புறம்…!
சாரலாய் பெய்த மழையின்
மண்வாசத்தோடு சேர்ந்த உன் அருகாமை;
எப்படித்தான் முடியுமோ உன்னைவிட்டு நீங்க என்னால்..!
என் 10ம் வயதில் திருட்டுத்தனமாய் செய்ய முயன்றாலும்…!
இருபதின் ஆரம்பத்தில் என் கன்னி கழித்தவள் நீ தான்….!
அன்று முதல் எத்தனை பேர்…! விதம் விதமாய்…!
நீயாய்…, உன் தோழிகளாய்…, சகோதரிகளாய்…,
உள்நாடு… வெளிநாடு… என எத்தனை வகைகளாய்…!
கையில் ஒன்றுமே இல்லாத போது நன்பர்களிடன்
கடனாய் என… நீ ஏதாவது ஒரு உருவத்தில் தினம் கலந்துகொண்டே இருந்தாய்…!
அன்புள்ள அத்தை மகளே…! அழகே நினைவிருக்கா…!
உன் அத்தான் சீமை சென்று ஆறு மாசம் ஓடிபோச்சே…!
இத்தனை நாள் பிரிந்திருந்தும்
கழுதை உன்னை மறக்கலையே…!
இரண்டு நாள் கதைக்காட்டி நீயாரென்று கேக்கிறியே…!
பாத்தவுடன் சோழி செய்ய காத்திருடி கண்ணழகே…!
வாழ்க்கை வெறுக்குதடி…
சாகத் தோணுதடி…
சுற்றம் சலிக்குதடி…
மெத்தப் புளிக்குதடி
என்றும் நீ சொல்வது போல்…
எல்லாம் போலியடி…
போலிக்குள் ஒருவனாக…
வாழ மன ஒக்கவில்லை…
எல்லோர்க்கும் நானொருவன்…
வெறும் துருப்புச் சீடாய் பேனேனடி…
தம் வேலை முடிந்தவுடன்…
தூக்கி எறியும் உலகமடி…
அமேசனின் நீரேந்து பிரதேசங்களின்
மழைபோல் முத்தங்கள் கிடைக்கின்ற நாட்டில்…,
சகாராவின் சாரல் கூட
கிடைக்க முடியாதபடி செய்தவளே…
அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இரயில் பயணத்தில் ஓர் கிளிநொச்சி அனுபவம்
by nirujah on Dec.15, 2010, under அனுபவங்கள், ஈழம்
இது வரை நான் எழுதிய பதிவுகளில் இது சற்றே வித்தியாசமானது. தற்போது 15ம் திகதி, மார்கழி மாதம் 2010, அதிகாலை 2:42. கொழும்பிலிருந்து வவுனியா மற்றும் தாண்டிக்குளம் நோக்கிச் செல்லும் இரவுத் தபால் தொடரூர்ந்தில் மூன்றாம் வகுப்பு இருக்கை ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன். என்னைச் சூழ சுமார் பத்து பயணிகள் இருக்கின்றார்கள். இவர்களுள் இரு முதியவர்கள் தனித் தனியே வந்தவர்கள். ஐந்து பெண்களும் ஒரு ஆண்ணுமாக இன்னொரு அறுவர் கொண்ட குழு தனியே பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த அறுவரிடமும் நான் பேசியதையே இந்த பதிவில் தரலாம் என இருக்கின்றேன்.
புரட்டிப் போட்ட தொலைபேசி அழைப்பு
by nirujah on Oct.25, 2010, under அனுபவங்கள்
வாழ்க்கை எப்போதுமே இன்பமும் துன்பமும் கலந்தது தான். அதை நான் எப்போதுமே விந்தையாக நோக்கியதில்லை. இத்தனை வருடங்களில் பல ஏற்றங்களும் இறக்கங்களுமாகத்தான் எனது வாழ்க்கை இருந்தது. எத்தனை இறக்கங்கள் வந்த போதும் அவை என்னை பெரிதாக கலங்கவைத்திருக்கவில்லை.
கடந்த சனிக்கிழமை காலை நண்பர்களுடன், அதுவும் பதிவுலகத்திம் மூலம் அறியக்கிடைத்த சிலருடன் விளையாடிவிட்டு அலுவலகத்தில் சில ஆணிபிடுங்கும் வேலைகள் இருந்ததால், பேரூந்தில் அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தேன். வெள்ளவத்தையை தாண்டி பயணித்துக்கொண்டிருந்த வேளை வீட்டிலிருந்து அந்த தொலைபேசி அழைப்பு. எதிர்முனையில் அம்மா. குரலில் வழமையான கம்பீரம் இருக்கவில்லை.
“அப்பன், இப்பதான் தம்பி கதைச்சவன். ரொக்ஸிக்கு முன்னால ரோட்டை குறொஸ் பண்ணேக்க, ஒரு அக்சிடண்டாம்…..!”
….
….
“யார் உங்களுக்கு சொன்னது?”
“தம்பிதான் போன் பண்ணினவன்; பெரிசா ஒண்டும் இல்லையாம். இப்ப களுபோவில ஆஸ்பத்திரியில இருக்கிறானாம்…! நான் வெளிக்கிட்டு கொண்டு நிக்கிறன். நீ எங்க ஒபிசிலையோ…? உனக்கு வரஏலுமோ?”
“ம்…, நீங்கள் ஆஸ்பத்திரிக்கு போங்கோ.. நானும் வாறன்.”
அழைப்பு துண்டிக்கப்பட்டது. கண்டிப்பாக முடிக்கவேண்டிய வேலைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு, இடைவழியிலேயே பேரூந்திலிருந்து குதித்தேன். வீதியைக் கடக்கும் நேரத்தில், மனதில் பலவிடயங்கள் வந்து மறைந்தன. தம்பிக்கு பெரியாக என்ன, ‘பெயர் என்ன?’ என்று கேட்டால் கூட சொல்லும் அளவுக்கு சிங்களம் தெரியாது. வைத்தியசாலைக்கு கொண்டுசென்றிருக்கிறார்கள் என்றால் விடயம் கொஞ்சம் பெரிதாகத்தான் இருக்க வேண்டும். அம்மா பயந்துவிடுவார் என்பதற்காக தான் பெரிசா ஒண்டும் இல்லை எண்டு சொல்லியிருப்பான் ஆனால் என்ன நடந்திருக்குமோ என்று நினைக்க சற்றே மனம் பயந்தது.
தம்பி வீட்டில் கடைசி பிள்ளை. அனேகமான கடைசிப்பிள்ளைகளைப் போல் எப்போதும் அம்மாவின் சேலைக்குள்ளே வளர்ந்தவன் என்று சொன்னால் மிகையாகாது. சிறிதாய் ஒரு பொருளை எடுத்து தரச்சொன்னால் கூட நாலு கதை சொல்லாமல், அலுத்துக்கொள்ளாமல் எடுத்துத் தரமாட்டான். அந்த அளவுக்கு அவனுக்கு செல்லம்.
சரி என்ன நடந்ததோ தெரியாது எவ்வளவு வேகமாக வைத்தியசாலைக்கு செல்லமுடியுமோ அவ்வளவு வேகமாக செல்வோம் என நினைத்துக்கொண்டு ஒரு முச்சக்கரவண்டியை பிடிப்போம் என்றால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒன்றையும் காணவில்லை. எனது நண்பன் ஒருவனுடன் தொடர்புகொண்டேன். அவன் அதிகமாக வெள்ளவத்தை பகுதியில் தான் தனது காரில் ஏதாவது வேலையாக இருப்பவன். அவனும் ஏதோ அலுவலாக இருப்பதாக சொல்ல விசயம் இது தான் என்று சொல்லிவிட்டு, ஒரு முச்சக்கரவண்டி பிடித்து வைத்தியசாலைக்கு சென்றேன். அதற்குள் எனது நண்பன், வைத்தியரான தனது மனைவியுடனும், தம்பியின் நண்பர் ஒருவரும் வந்திருந்தனர்.
நான் என்ன நடந்தது என்று அறிய முற்பட, ஒரு சகோதர இனத்தவர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தனது தம்பி தான் காரை ஓட்டி வந்ததாகவும் ரொக்ஸிக்கு முன்னால் வீதி திருத்தப்பணிகள் நடப்பதால் மற்றை பக்க வீதியை இரண்டாக பிரித்து அதில் இரு பக்கமாகவும் வாகனங்கள் விடப்பட்டதாகவும், எனது தம்பி ஒரு பக்கத்தை பார்த்துக்கொண்டு வீதியைக் கடக்கும் போது மற்றைய பக்கத்தால் வந்த இவர்களது வாகனத்தில் தட்டுப்பட்டதாகவும், நடந்த விடயத்தையிட்டு தான் மிகவும் வருந்துவதாகவும் சொன்னார். அதற்குள் தம்பி உள்ளே இருந்து கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் காயங்களுடன் அடுத்த சிகிச்சைக்காக வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அவனை அந்த நிலையில் பார்க்க மனம் சற்றே கலங்கியது. ஒருவாறு நிலமையை உணர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டியதைப் பற்றி நினைக்கையில் அம்மாவும் வந்து சேர்ந்தார். அதற்குள் நண்பனின் மனைவி உள்ளே சென்று அனைத்து நிலவரங்களையும் அறிந்து வர நிலமை கட்டுக்குள் வந்தது.
x-கதிர் சோதனையில், எழும்பு முறிவுகள் எதுவும் இல்லை எனவும், ஆனால் தம்பி 10 நிமிடங்களுக்கு மேலாக சுயநினைவு அற்று இருந்ததால் தலையில் ஏதாவது பலமாக அடிபட்டிருக்கலாம் எனவும் அதற்கு C.T சோதனை செய்யவேண்டும் எனவும் சொன்னார்கள். அதை விட மற்றையவை எல்லாம் வெட்டுக்காயங்களும் வீதியில் விழுந்ததால் உண்டான உராய்ப்புக் காயங்களும் தான். பின்னர் C.T பரிசோதனைக்காக கொழும்பு வைத்திய சாலைக்கு தம்பியை மருத்துவ ஊர்தியில் கொண்டு சென்றார்கள்.
அங்கே தம்பிக்கு C.T பரிசோதனை செய்யப்பட்டு நரம்பியல் நிபுணர்களால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லப்பட்டு விட்டது. இருந்தாலும், அங்கு நான் கண்ட காட்சிகள், புத்தர் நோய்வாய்ப்பட்டோரை முதல் முதலில் பார்க்கும் போது எப்படிப்பட்ட ஒரு மனநிலையை அடைந்திருப்பார் என உணர்ந்துகொண்டேன். நான் சென்றதோ விபத்து அவசரசிகிச்சை பிரிவு. பார்க்கும் இடமெல்லாம் வெட்டுக்காயங்களும், அழுகைக்குரல்களும் முனகல் ஒலிகளும். இதுவே இப்படி இருக்கின்றதென்றால் இறுதிக்கட்டத்தில் வன்னிப்போர்க்களம் எப்படி இருந்திருக்கும்.
எப்படியோ, தம்பி சற்றே குணமடைந்து வீட்டுக்கும் வந்துவிட்டான். ஆனால் இன்னும், வைத்தியசாலைக் காட்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்தனைக்கும் நான் ஒன்றும் பிணங்களையோ, இரத்தத்தையோ கண்டு அஞ்சுபவன் அல்ல. சிறிய வயதில் வவுனியாவில் நான் வாழ்ந்ததே வைத்தியசாலை பிண அறைக்கு அருகாமையில் தான். சின்ன வயதில் குடியிருப்பில்(வைத்தியசாலைக்கு பின்சுற்றுவீதி பகுதி பிரதேசத்தின் பெயர்) இருந்த காலத்தில் யாருக்கும் தெரியாமல், பிரேத பரிசோதனை செய்வதை எல்லாம் நான் நேரிலே பார்த்திருக்கின்றேன். இல்லையில்லை. இரசித்திருக்கின்றேன். பிரேதத்துக்கும், உயிருள்ள மனிதர்களின் துன்பத்துக்கும் நிறைய வேறுபாடுண்டுதான். ஆனாலும், கடந்த இரு தினங்களாக நான் கண்ட காட்சிகள் எல்லாம் வாழ்க்கையின் அர்த்தங்களை நிறம்பிரித்துக்காட்டுவது என்னவோ உண்மைதான்.

