செவ்வானச் சிதறல்கள்…

அனுபவங்கள்

சீனர்களின் அதிஷ்டத்தின் பின்னணி

by on Jan.26, 2012, under அனுபவங்கள், பொது

நான் பார்த்த அளவில், சீனர்கள் அதிகளவு அதிஷ்டத்தை நம்புகிறவர்களாக இருக்கின்றார்கள். அதில் உள்ள உண்மைத் தன்மை, ஐதீகம் என்பவற்றுக்கு அப்பால், அவை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா, இலங்கை வாழுகின்ற மக்களாலும் பின்பற்றப்பட ஆரம்பித்துவிட்டது எனபது ஆச்சரியமான உணமையாகும்.

குறிப்பாக, நம் அநேகரின் வீடுகளிலும் தற்போது பல அளவுகளில்  நீங்கா இடம் பிடித்திருக்கும் நமது கிருபாநதவாரியா போன்ற உருவம் கொண்ட அதிஷ்டப் பொம்மையைக் கூறலாம். இது தவிர, வீட்டு வாசல்களில் தொங்கவிடப்படக்கூடிய பொருட்கள், அதிஷ்டமான மீன், அதிஷ்டமான தாவரங்கள் என பல வகையான அதிஷ்டப்பொருட்கள் தற்போது விற்பனையில் உண்டு. இவை அனைந்த்தும் சீனாவின் தாக்கத்தால் எம்மிடையே புளக்கத்தில் வந்திருப்பவையே.

இவை தவிர, இன்னும் சில விடயங்களையும் கடந்த சில வாரங்களாக என்னால் பார்க்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, இது சீனர்களுடைய புத்தாண்டுக்காலமாகையால் அவர்களின் அதிஷ்டம் குறித்த நம்பிக்கைகளும் சற்று வித்தியாசமாகவே இருந்தன.

Honey Orange எனப்படும் ஒருவகைத் தோடம்பழங்களை மக்கள் அதிகமாக வாங்கி உரித்துச் சாப்பிட்டார்கள். நம்மூரில் கிடைப்பது போன்ற தோடம்பழங்களே இவை என்றாலும் பெயருக்கு ஏற்றால் போல் இதன் சுவையோ மிகவும் இனிமையாக இருக்கும். இதனை இவர்கள் சீனப்புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் வாங்கி அன்பளிப்பாக பிறருக்கு கொடுக்கவும் தாங்களே உண்ணவும் செய்கின்றார்கள். அதிக அளவான தோடம்பழங்களை தாங்கள் உண்பதால் பிறக்கப்போகும் புத்தாண்டானது மிகவும் அதிஷ்டகரமானதாக இருக்கும் என்று இவர்கள் நம்புகின்றார்கள்.

Yusheng அல்லடு ஜீ சங் எனப்படும் ஒரு உணவு வழக்கமாகும். ஜீ சங் என்றால் சமைக்கப்படாத மீன் (raw fish). இதன் போது மீனானது சமைக்கப்படாமல் ஏனைய உணவு வகைகளுடன் சேர்த்து பரிமாறப்படும். சீனப்புத்தாண்டு பிறந்து முதல் 15 நாட்களுக்குள் இம்மாதிரியான மீனை உண்ணும் பழக்கத்தை சீனர்கள் கொண்டிருக்கிறாகள். இதன் மூலமும் தமக்கு அதிஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த மீனோடு சேர்த்து முறுக்கு போன்ற உணவுப்பொருட்கள், பொரிகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் சுவையூட்டிகள் எல்லாவற்றையும் சேர்த்து இவர்கள் உண்கின்றார்கள்.

1 Comment :, , , , , more...

கௌபியும் திருவிழாக்களும்

by on Nov.20, 2011, under அனுபவங்கள், ஈழம்

கௌபிகௌபி – இது தான் இதன் சரியான எழுத்துக்கூடலாக இருக்க முடியும். இன்று நீண்ட காலத்துக்கு பிறகு வீட்டிலே கௌபி சாப்பிடச் சந்தர்ப்பம் கிடைத்தது. நீண்டகாலம் என்றால் ஒன்று இரண்டு வருடம் இல்லை; குறைந்தது ஒரு 10 வருடமாவது இருக்கும் நான் இரச்சிச்சு கௌபி சாப்பிட்டு.

இன்று கௌபி சாப்பிட்டு இதைப்பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று இணையத்தை துலாவினால் ஒன்றுமே அகப்படவில்லை. தமிழ், தெரிந்த ஆங்கில பதங்கள் எல்லாம் போட்டு தேடிக்களைத்துப் போய் இருந்தேன். பின்னர் எமது பச்சிளம் பாலகர் வந்தியின் உதவியுடன் அது கௌபிக்கு ஆங்கிலத்திலும் Cowpea தான் பெயர் என்றும் அது அப்படியே தமிழிலும் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிந்து கொண்டேன்.

இன்னும் நினைவிருக்கிறது. பறாளாய் விநாயகர் அல்லது முருகன் திருவிழாக்களிலும் கம்பனை அம்மன் கோவிலின் செவ்வாய் மற்றும் வெள்ளி மாலைப்பூசைக்கு பின்னரும் வெறும் 7, 8 வயதே நிரம்பிய அந்த பிஞ்சுக் கரங்களால் கொட்டாமல் கௌபி வாங்கி சாப்பிட்டது. பின்னர் வவுனியாவில் பாடசாலை சரஸ்வதி பூசை, மார்கழி மாதத்து அதிகாலையில் குளக்கட்டு பிள்ளையார் கோவிலின் திருவெம்பாவை பூசைகள், வைத்தியசாலைப் பிள்ளையார் என ஒரு வயது வரைக்கும் அடிபட்டு பிரசாதம் வாங்கும் வன்முறைக்கலாச்சாரம் எனக்குள்ளேயும் இருந்தது. கடவுளைப் பார்க்க ஒருகாலமும் கோவிலுக்கு போகாவிட்டாலும், குறைந்த பட்சம் பிரசாதத்துக்கும் அதிகபட்சம் எமது வகுப்பு தோழிகளின் சமூகம் கண்டிப்பாக கோவில்களில் இருந்ததாலும் தவறாது போனோம்.

சின்னவெங்காயத்தை மிகவும் சின்னதாக வெட்டி, அதனுடன் பெருஞ்சீரகம், நற்சிரகம், கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு எண்ணையில் வதக்கி, குறைந்தது ஒரு அரைமணிநேரமாவது தண்ணீரில் ஊறவைத்து பின்னர் அளவாக உப்புச்சேர்த்து அவித்த கௌபியை அந்த வதங்கலுக்குள் போட்டு நன்றாக தாழித்து எடுத்தால் எழுகின்ற கமகம வாசனை வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. இதை கோவிலில் வெறும் ஒரு கைப்பிடியளவு மட்டுமே வாங்கி சப்புக்கொட்டி சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்று வருகின்ற அந்த உள்ளுணர்வுக்காகவே தினமும் கோவிலுக்கு போகலாம்.

அட, கௌபியைப் பற்றி சொல்லவந்து கடைசியில் சமயல் குறிப்புதான் எழுத முடிஞ்சது. சின்னஞ்சிறு வயதில் இதுபோன்ற நிகழ்வுகளை அனுபவிக்காதவர்கள் உண்மையிலேயே அபாக்கியசாலிகள் தான்.

கௌபி, ஆசிய, ஆபிரிக்க மற்றும் சில ஆபிரிக்க நாடுகளிலும் விளைகின்றது. அதிகமாக மனிதர்களும் மிருகங்களும் இதனை உணவாகக் கொள்கின்றனர். எங்கள் ஊரில் கௌபியில் தேங்காய்ப் பால் விட்டு குழம்பு மாதிரி ஒரு உணவு வகையும் பிரபலம்.

3 Comments :, , , , , , , , , more...

கனாக்காலம்

by on Jul.26, 2011, under அனுபவங்கள், ஈழம், விளையாட்டு

அப்போது காலை ஏழு எழரை இருக்கும். நான் பொட்டிக்கோவில் மூலைக் குந்தில் இருந்து சோம்பல் முறித்துக்கொண்டிருந்தேன். தம்பியும் தங்கையும் இன்னும் எழும்பவில்லை என நினைக்கிறேன்.   அம்மா காலைச் சாப்பாட்டுக்காக குசினியில் சமைத்துக்கொண்டிருந்தார்.  முத்ததில் இருந்த பூக்கண்டுகளுக்கு அப்பா தண்ணி விட்டுக்கொண்டிருதார்.

படலயைத் திறந்து கொண்டு ஊர் பெரியவர் இருவரும் கூடவே நான்கு இளம் பெடியளும் வந்தார்கள்.  வாளியும் கையுமாக நிண்ட அப்பாவிடம் ஏதோ கதைத்து விட்டு போனார்கள். இது நடக்கும் போது எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும். என்ன கதைத்தார்கள் என்றெல்லாம் தெரியாது. அது ஒரு பள்ளி விடுமுறைப் பருவம். அதிகமாக சித்திரை விடுமுறையாகவோ அல்லது ஆடி விடுமுறையாகவோ இருந்திருக்க வேண்டும்.

ரண்டு நாளுக்கு பிறகு, என்னையும் தம்பி, தங்கச்சியையும் ஊருக்கு புறத்தே உள்ள வயல் வெளிக்கு கூட்டிக்கொண்டு போனார். அங்க பாத்த காட்சி எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்தது. எங்கட ஊரில உள்ள ஏல்லா சின்னஞ்சிறுசுகளும் அங்கை நிண்டுச்சினம்.

எல்லாத்துக்கும் முதல் ஒன்டைச் சொல்லவேணும். எங்கட அம்மா அப்பா எங்களை வெளியால பெரிசா கூட்டிக்கொண்டு போறேல்ல. அது சின்ன வயசு என்டதாலயோ தெரியாது. நாட்டுப் பிரச்சனை தொடங்கும் வரைக்கும் பள்ளிக்கூடத்துக்கு காரில போனாங்கள். பிறகு, மாட்டுவண்டில்ல எண்டு, வீட்டில இருந்து போனா பள்ளிகூடம். வந்தா வீடு. அதால எங்கட ஊரில இருந்த ஆக்களோட பெரிசா கதைக்கவோ விளையாடவோ சந்தர்ப்பம் கிடைக்கேல்ல. போதாக்குறைக்கு, எங்களை ஊர் பள்ளிக்குடத்திலயும் விட்டு படிப்பிக்கேல. சுழிபுரத்தில இருந்ந்து வட்டுக்கோட்டை யாழ்பாணக்கல்லூரிக்கு அனுப்பி படிப்பிச்சவை.

காரநகர் வீதியில போகேக்க, சங்கானை, சித்தங்கேணி தாண்டி போக வடக்கம்பரை அம்மன் கோயில் வரும். அதையும்  தாண்டி போனா விக்டோரியா கல்லூரி என்டு ஒரு பள்ளிக்கூடம் இருக்கு. அதுக்கு பக்கத்தில இருக்கிற குச்சொழுங்கைக்கால போகேக்க இருக்கிற ஊர் தான் சுழிபுரம். அதிலையும் பறாளாய் கோயிலுக்கு போற பாதை எல்லாம் தாண்டிப்போக கல்லை வேம்படி என்டு ஒரு குக்கிராமம் இருக்கு. அது தான் எங்கட ஊர்.

அப்ப, அண்டைக்கு எனக்கெண்டா பெரிய சந்தோசம். கோயில்களிலையும், ரோட்டில போகேக்க வரேக்கையும் பாத்த என்ட வயச ஒத்த சின்ன பிள்ளைகள் எல்லாம் அந்த வயலில நிக்கினம். அப்ப தான் அப்பா சொன்னார், ஊரில உள்ள எல்லாரும்  சேந்து வருசம் வருசம் விளையாட்டுப் போட்டி எல்லாம் வைக்கிறவையாம்.

எங்கள் எல்லாரையும் 5 குழுவா பிரிச்சு விளையாட்டு எல்லாம் பழக்கிச்சினம். முதல் ஒரு கிழமைக்கு எல்லாம் பயிற்சி தான். நான் ஊராக்களோட சேந்து திரிஞ்சு பழகாததால எனக்கு எல்லாமே புதிசாப் பட்டிச்சு. கிளித்தட்டு, ஓட்டப்போட்டி, கபடி மாதிரி ஒரு விளையாட்டு ( பெயர் ஞாபகத்தில இல்லை.  கபடியில நீள் சதுரமா இருக்கிற இடத்துக்கு பதிலா இங்க வட்டமா இருக்கும். பிடிக்கிற ஆக்கள் உள்ள நிப்பினம்) இப்பிடி எல்லாத்துக்கும் பயிற்சி குடுத்து கடைசியா ஒரு நாள் போட்டி நடந்திச்சு.

போட்டி பறாளாய் கோயில் சுற்று வட்டத்தில தான் நடந்தது. அதில சின்ன பிள்ளையள் எங்களுக்கு மட்டுமில்ல பெரியாக்களுக்கு மெதுவா சைக்கிள் ஓடுற போட்டி, விநேத உடைப் போட்டி எல்லாம் நடந்திச்சு. இது எல்லாமே நான் முதல் முறையா பாத்ததால எல்லாமே புதுசா இருந்திச்சு. இன்னொரு பெருமை என்னெண்டா, போட்டி நடக்கேக்க எங்கட அப்பாவும் ஒரு நடுவர். அவருக்கும் பெரிசா நிறைய கலரில ஒரு பட்ச் எல்லாம் குத்த குடுத்திருந்திச்சினம்.

அடுத்த வருசமும் இப்பிடி ஒரு நிகழ்வு நடந்ததா ஞாபகம். ஆனா பிறகு அதுக்கு அடுத்த அடுத்த வருசங்கள் நடக்கேல்ல. ஆமிக்காரன் மாதகல்ல இருந்து அடிக்கடி செல் அடிக்கிறதால நிப்பாட்டிப் போட்டினம். பிறகு நான் இடம்பெயர்ந்து வந்திட்டன். அதுக்கு பிறகு நடந்திச்சோ தெரியேல்ல.

3 Comments :, , , , , , , , more...

கரப்பான் பூச்சிக் கொத்து

by on Jun.29, 2011, under அனுபவங்கள், பதிவுலகம்

இந்த சமுதாயத்தில் பலவகையான மனிதர்களைச் சந்திக்கிறோம். பலர் மிகவும் நல்லவர்களாக இருக்கின்றார்கள். சிலர் கெட்டவர்களாக இருக்கின்றார்கள். சிலர் நல்லவர்களாகத் தெரிவார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள். சிலர் கொடூரமாகத் தெரிந்தாலும் யதார்த்தத்தில் நல்லாவர்களாக இருப்பார்கள். நான் இப்போது சொல்ல வந்த விடயம் சற்றே வித்தியாசமானது.

இன்றைய இயந்திர உலகில் ஹோட்டலில் சென்று சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நட்ச்சத்திர ஹோட்டல்களாக இருந்தாலும் சரி, சிறிய கையேந்திபவன்களான தெருவோரக்கடைகளாக இருந்தாலும் சரி நாம் சுத்தமான உணவை உண்ணவே விரும்புகின்றோம். நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்பவர்கள் ஆடம்பரம், ரம்யமான சூழல், சமூக அந்தஸ்து என்பவற்றைத் தாண்டி சுகாதாரமான உணவை உண்பதற்காகவும் செல்கின்றார்கள்.

அதிகமானவ நேரங்களில் எமக்கு சிறந்த உணவு கிடைக்கின்றது. எப்போதாவது சில சந்தர்பங்களில், சமையல்காரரின் கவலையீனத்தாலோ அல்லது அவதானக் குறைவாலோ உணவுக்குள் தலைமுடி போன்றன வரவும் தவறுவதில்லை. சிலவேளைகளில் களஞ்சியப்படுத்தலில் உள்ள குறைபாடுகளால் கரப்பான் பூச்சிகள் போன்றவை கூட வருவதாக கேள்விப்படுகின்றோம். உணவு உண்ணும் சந்தர்பத்திலோ அல்லது பரிமாறப்படும் போதோ முடியோ அல்லது அழுக்குகள் காணப்படும் இடத்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டால், தவறை அவர்களே பொறுப்பேற்று புதிய உணவு வகை மட்டுமல்லாது, எம்மைக் குஷிப்படுத்த இலவசமாக இன்னும் சிலவற்றை தருவதும் உண்டு. இல்லாவிட்டால் வாடிக்கையாளர் நீதிமன்றம் வரைக்கும் கொண்டு சென்று விடுவார்கள் என்ற பயம் தான் இதற்கு முக்கிய காரணம்.

ஒரு முறை டுப்ளிகேஷன் வீதியில் உள்ள  Coffe Bar ல் நண்பர் ஒருவருடன் உணவு உண்ணும் போது, ஒரு சிறிய முடி ஒன்று இருந்து விட்டது. அதன் அளவு வெறும் ஒரு அங்குலத்தை விடக்குறைவு. வீட்டில் நாம் சாப்பிடும்போதோ, அல்லது ஒரு உறவினர் வீட்டில் சாப்பிடும் போதோ அதை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிட்டிருப்போம். ஆனால் என்னுடன் வந்த நண்பரோ அங்கிருந்த உணவு பரிமாறுபவரை அழைத்து அவருடன் மல்லுக்கட்டினார். இறுதியில் மீண்டும் நமக்கு அதே உணவு புதிதாகக் கிடைத்தது மட்டுமல்லாது அன்றைய முழு உணவுக்கான செலவும் எங்களிடம் அறவிடப்படவில்லை. அந்தக்கடையின் வாடிக்கையாளரான நான், அதன் பின் மூன்று நான்கு வருடங்களாகியும் போனது இல்லை. ஒரு குற்ற உணர்வு தான்.

அதன் பின்னர் ஒரு நாள் எனது பல்கலைகழக நண்பர்களுடன் MCயோடு உள்ள KFCயில் சாப்பிட போயிருந்தோம். அங்கே நாம் வாங்கிய கோழிப் பொரியலுடன் ஒரு கோழியின் இறகு ஒட்டியிருந்தது. எம்முடன் இலண்டனில் படித்திவிட்டு வந்திருந்த ஒரு நண்பர் அந்தச் சிறிய இறகை எடுத்துக்கொண்டு KFC மேலாளரிடம் ஏதோ பேசி, இலவசமாக மேலும் சில கோழிப்பொரியல்களுடன் வந்தார். இப்படியான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்களின் முறையீடும் அதற்கு அந்த ஹோட்டல்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் நியாயப்படுத்தக்கூடியவையும் வேடிக்கையானவையும் தான்.

இதே போல் தான் தெகிவளை, காலி வீதிக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில் வேடிக்கையான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருவர் ஆட்டுக்குடல் (பாபத் என்று அழைப்பார்களாம்) போட்டு ஒரு கொத்து ஒன்று பொதியாகக் கட்டி வீட்டுக்கு எடுத்துப் போயிருக்கிறார். ஒரு மணிநேரம் கழித்து, முக்கால் வாசிக்கும் மேலான கொத்து உண்ணப்பட்டநிலையில், அதனுள் கரப்பான் பூச்சி இருந்ததாக மீண்டும் அந்த உணவுப் பொதியைக் கொண்டுவந்திருந்தார். அந்த உணவக ஊழியகள் அதைத் திறந்து பார்த்தபோது, அதனுள் ஒரு கரப்பான் பூச்சி ஒன்று குற்றுயிரும் குலையுயிருமாக துடித்தவண்ணம் இருந்தது. பாபத் போட்டு கொத்திய கொத்தில் எப்படி கால்கள் இயங்கிய வண்ணம் கரப்பான் பூச்சி இருந்தது என்று அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். குறித்த அந்த நபரே பாதிக்கு மேற்பட்ட கொத்தை சாப்பிட்டு விட்டு, ஒரு கரப்பானை அடித்து போட்டுக்கொண்டு வந்ததாக ஊழியர்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். எது எப்படி இருந்தாலும், அவருக்கு மீண்டும் ஒரு புது பாபத் கொத்து போட்டு கொடுக்கப்பட்டது.

நாளை பாம்பு ஒன்றை அடித்து போட்டுகொண்டு குறித்த நபர் வருவார் என அந்த ஊழியர்கள் தமக்குள் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார்கள். ம்ஹ்…! இப்படியும் இவ்வுலகில் ஆட்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

3 Comments :, , , more...

மாநகர குப்பை வண்டிகளே…

by on Jun.22, 2011, under அனுபவங்கள், பதிவுலகம், பொது

நமது அன்றாட வாழ்க்கையில் சுமூகமான ஓட்டத்துக்கு பலரும் பல வழிகளில் உதவுகின்றார்கள். நாம் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும், முப்பாட்டன் காலத்திலிருந்து பரம்பரைக் கோடீஸ்வரர்களாக இருந்தாலும், எனக்காக தனியாக ஒரு பள்ளிக்கூடம் கட்டி அதில் நாம் மட்டுமே படிக்க முடியாது. அப்படியே படித்தாலும், சாதாரண ஒரு மாணவனாக ஒரு பாடசாலையில் 50 பேர் கொண்ட வகுப்பில் அடிக்கும் லூட்டிகளும் தேடிப்பார்த்தாலும் கிடைக்காது. அது போல தான், போரூந்துகள், தொடரூர்ந்துகள், சாலை திருத்துவோர், அரிசி, காய்கறிகள் மற்றும் எவையாக இருந்தாலும் நாம் பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டும்.

அதே போல தான் நகர் பகுதிகளில் தினமும் அல்லது ஒன்று விட்ட ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள குப்பைவண்டிகளும் தொழிளாலர்களும். அவர்கள் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டாலோ, அல்லது வேலைப்பகிஸ்கரிப்பு செய்தாலோ நாம் படும் அவலங்களும் கஷ்டங்களும் நாம் உணர்ந்ததே.

ஆனால் இதையே ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு இத்தொழிலாளர்கள் செய்யும் அட்டகாசமோ அளவுக்கு அதிகம். மற்ற இடங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது. நான் கொழும்புக்கு வந்ததில் இருந்து பல இடங்களில் வசித்தாலும், அவை அனைத்தும் தெகிவளை மாநகராட்சி சபைக்கு உட்பட்ட பிரதேசத்துக்குள்ளேயே இருந்துள்ளேன். எல்லாப் பகுதிகளிலும், குப்பை சேகரிக்கவருபவர்கள் மக்களிடையே வலுக்கட்டாயமாக ஒரு தொகைப்பணத்தை மாதாமாதம் அறவிடுகின்றர்கள்.

இவ்வாறாக, குப்பை சேகரிக்கச் செல்லும் போது மக்களிடம் பலாத்காரமாக பணம் வாங்குதல் நகராட்சி சட்டத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ சட்டமாக இருக்கிறதோ எனக்குத் தெரியாது. மனிதாபிமான அடிப்படையில், இவர்கள் குப்பை சேகரிக்கப்போகும் இடத்தில் இருக்கின்ற மக்கள் அவர்களாக அன்பளிப்பு அடிப்படையில் பணம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இப்படி அன்பளிப்பு அடிப்படையில் உருவான கலாச்சாரம் தான் இப்போது இப்படி கட்டாய பணவசூலாக மாறியிருக்கிறதோ தெரியாது. எனினும் கண்டிப்பாக இவ்வளவு பணம் தர வேண்டும் அல்லது அடுத்தமுறை குப்பை எடுக்க வரமாட்டோம் என்று மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

குறிப்பாக, இரு வருடங்களுக்கு முதல், நான் தெகிவளை லியனகே வீதியில் வசித்தபோது, அந்த தெருவில் எல்லாத்தரப்பான மக்களும் வாழ்கின்றார்கள். ஒரு சிலரால் மாதம் 100 ரூபாவோ 150 ரூபாவோ கொடுக்கமுடியாமல் இருந்திருக்கலாம் போலும். இதனைக் காரணமாகக் காட்டி, அந்தத் தெருவுக்கே குப்பை எடுக்க வருவதில்லை. அந்தக்காலத்தில் தெருவோரங்களில் குப்பை போடுதல் சட்டவிரோதமாக இல்லாமல் இருந்த காரணத்தால் எம் தெருவில் உள்ள அனைவரும் தினமும் காலிவீதிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு குப்பை மேட்டுக்கே எமது குப்பைகளை கொண்டு சென்று வீசி இருந்தோம். ஏன் நான் இப்போது இருக்கும் பகுதியில் கூட மாத முடிவில் கண்டிப்பாக அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய பணம் வசூலிக்கப்பட்ட பின்னரே, குப்பைகளை அப்புறப்படுத்துக்கின்றார்கள்.

எனக்கு இப்போது இருக்கும் சந்தேகம் எல்லாம், ஒரு ஜனநாயக நாட்டிலே, அரச தொழிலாளர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலேயே சம்பளம் வழங்கப்படுகின்ற போதிலும், அதையும் தாண்டி, சாதாரண மக்களிடமும் இப்படி பலவந்தமாக காசு வாங்குகிறார்களே இதை மேலதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லையா. அல்லது இத் தொழிலாளர்களின் இந்த பொறுப்பில்லாத செயல்களுக்கு மேலதிகாரிகளும் உடந்தையா?

3 Comments :, , , , , , , more...

வந்தவர்கள்

free counters