கவிதைகள்
அதிசயத் திருமணம்
by nirujah on Feb.18, 2011, under கவிதைகள்
மூன்றடி இடைவெளியி
தூண்களாய் இரு தென்னைகள்;
ஓலைக் கண்ணறை
தொலைவானைப் படம்பிடித்தது.
செம்மஞ்சள் நிறத்திலோர்
அற்புதக் கிரகம்;
இடையிடையே திருஷ்டிப் பொட்டாய்
மழைமேகங்கள்;
மொத்ததில் அவனில்
புதுமாப்பிளைப் பிரகாசம்.
ஆம்…
இது ஓர் அதிசய,
அற்புத திருமணம்.
மாப்பிள்ளையாய் கதிரவன்
மணப்பெண்ணாய்ப் பூமி;
திருமணத்தின் விருந்தினராய்
பூமியின் சீவராசிகள்;
காலைப் பண்பலையின் மங்களம்
முழங்க – வீதிக்கோலத்தின்
குறுனல் அட்சதையாய்;
சிங்காரச் சிட்டுகளின் குறுகுறுப்பு
சிறு மந்திரமாய்.
தமிழ்ப் பெண்கள் எல்லாம்
குடங்குடமாய் பன்னீர் தெளிக்க
விருந்தினரை கிளிகள் பறந்து
பறந்து உபசரிக்க.
கதிரவண் தன் ஒளிகரங்களால்
பூமிக்கு வண்ணமடித்து
தாலிகட்ட – ஓர்
அதிசயத் திருமணம்
குறிப்பு: இது நான் திருச்சி (தமிழ்நாடு)ல் கல்விகற்றுக்கொண்டிருந்த 2001/2002 காலப்பகுதியில், காவேரித் தண்ணிக்காக குடங்களுடன் பொதுக்குழாயின் முன் நீண்டவரிசையில் நின்றபோது உண்டான கற்பனை
சுயவிமர்சனம்
by nirujah on Jan.07, 2011, under கவிதைகள்
இது ஒரு சுய விமர்சனம். முன்னொரு காலத்தில், கிட்டத்தட்ட ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் கவிதை என்கின்ற பெயரில ஏதாவது எழுதி, யாரிடமாவது காட்டி, அவங்களுக்கு வாசிக்க தெரியாட்டியும் வாசிச்சு காட்டி, கவிதை எப்பிடி என்டு கேட்டு அவங்க காதில இரத்தம் வர வைக்கிறது என்டா ஒரு அலாதிப் பிரியம். அப்பிடி கிட்டத்தட்ட ஒரு பத்து வருசத்துக்கு முதல் எனது நண்பன் ஒருவனுக்கு எழுதின ஒரு நீண்ட கவிதைக் கடிதம். அப்ப எனக்கு மின்னஞ்சல் இருக்கேல்ல. கையால தான் எழுதினனான். நேற்று மீண்டும் மின்னஞ்சலில வந்தது.
இப்ப வாசிக்க சில இடங்களில சிரிப்புத் தான் வருது. இது எழுதிய கால கட்டத்தில், அதிகமாக வைரமுத்துவையும் பா. விஜய் ஐயும் வாசித்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அந்த சாயல் அப்படியே பல இடங்களில் எனக்கே தெரிகிறது. இது எனது நன்பன் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது அவர் வாழ்வில் நடந்த சம்பவம். காதல் எத்தனை பேரை கிழித்துபோடுகின்றது என்பதற்கு இது ஒரு சாட்சி.
இன்று ஒருவரைக் காதலித்து விட்டு நாளை இன்னொருவரை காதலிக்கும் எத்தனையோ ஆண்/பெண்களைப் பார்த்த எனக்கு இவனது காதல் இப்போதும் விசித்திரமாகப்படுகின்றது. அவனுடன் அவனது இக்காதலைப்பற்றை பேசும் போதெல்லாம் அவனைத் திட்டித் தீர்த்தாலும் அவன் மேல் எனக்கு அளவு கடந்த அன்பும் மதிப்பும் உள்ளது. ஆனால் அவன் தான் நெஞ்சில் அவளது பெயரைப் பச்சைகுத்திக்கொண்டு இன்னமும் வாழ்கின்றான். இப்போதும் அதைப்பற்றை ஏதாவது பேச விளைந்தாலே அவனது குரல் தளதளப்பதையும், கண்கள் கசிவதையும் நான் அவதானிக்க தவறியதில்லை. ஆனால், அந்த பெண் தான் சந்தர்ப்ப சூழ்நிலையாலோ என்னவோ தற்போது வேறு ஒருவரை மணந்து விட்டாள்.

இனி கவிதை ( ரெம்பவே கஷ்டப்பட்டு மீண்டும் தட்டச்சு செய்தது)
தென்னங்கீற்று இடையழகே…!
by nirujah on Dec.02, 2010, under கவிதைகள்
மலைகளெல்லாம்
எழுந்து நின்று;
மழை முகிலை
ஒன்று கூட்ட…!
மலர்வாசம்
பிழிந்தெடுத்து; - நறு
மணத்தென்றல்
உருவாக…!
தென்றலதன்
மென்மை கண்டு;
தேம்பி முகில்
கண்கசிய…!
தென்றலவள்
வருகைக்காய்;
தெருமுனையில்
காத்திருந்தேன்…!
தென்றலென
அழைத்தாலும்;
கூடிச் சண்டை
பிடித்தாலும்…!
தென்னங்கீற்று
இடையழகே;
நீயெனக்கு
உயிரம்மா…!
உன் மேனி
நிறை ஓவியமெலாம்;
ஒன்றையொன்று
உயர்த்தி நிற்கும்…!
எத்துணை தான்
அழகாக உன்;
மேனியெலாம்
மிளிர்ந்தாலும்…!
உன் செவ்விதழில்
பூத்திருக்கும்;
புன்னகைக்கு
நிகருமுண்டோ…!
கறுப்பு வெள்ளை
by nirujah on Jun.12, 2010, under கவிதைகள்

ஏனோ தெரியவில்லை…
சிலகாலமாக தொடுவதில் எல்லாம்
வர்ணங்கள் வற்றிப்போகின்றன…
காலைச் சூரியன் கூட
கறுப்பு வெள்ளையாகவே
கடந்து மறைகின்றான்…!
தோட்டத்து பூக்களின்
தேனுக்கு பதில் வெறும்
பாலே வடிந்து தொலைக்கின்றது…!
வருடிச் செல்லும்
தென்றலின் நறுமணம்
தொலைத்து பலகாலம்…!
இப்போதெல்லாம் பகல்கள்
இரவாகின்றன;
இரவுகள் கனவாகின்றன…!
என்று முளைக்கும்
தேன்வீசும் ரோஜா…?
எப்படி நான் இரவிக்கு
வண்ணமடிப்பது…?
என் இரவுகள் தொலைத்து
தண்நிலா தேடுகின்றேன்…
கால்கள் தேய்ந்து ஓய்ந்தது
தான் மிச்சம்…
ஆனால்…
காற்றைப் பிடித்து
தண்மை சேர்த்து
காரியம் ஆற்றும்
வண்மை உண்டு…!
தேன்னிலா கொய்து
தோட்டத்தில் கட்டி
இருட்டைப் போக்கும்
இயலுமை உண்டு…!
எனக்கும் ஒருநாள்
காலம் வரும்…!
பொறுத்திரு கனவே
தொலைந்துவிடாதே…!
நீ…. நான்…. அது….!
by nirujah on Feb.13, 2010, under கவிதைகள்
நீ நினைத்திருக்கலாம்
நான்
அதுபற்றி கதைக்காமலே
இருந்திருக்கலாம் என்று…!
ஒரு வகையில் நீ
நினைப்பது சரியாகப்
பட்டாலும்…!
ஒருவகையில் நான்
பேசியதும் சரியாகத்தான்
படுகின்றது….!
ஒருவகையில் அது
விழிச் சந்திப்புகளில்
வெளிப்பட்டிருக்கலாம்…!

அது புனிதமானது
புனிதத்தின் நிழலைக்கூட
தீண்டும் தகுதி எனக்கில்லை
நீ….
இத்துணை ஆண்டுகளில்
நான் கண்டெடுத்த அழகு
பொக்கிசம்…!
நானாக நினைத்தாலும்
உன்னை இழக்கும்
சக்தி…
எனக்கில்லை…!
இருந்தாலும்…
விளக்கைக் காதலித்து
அதன்நூடே மரணிக்கும்
ஈசல் வாழ்க்கை
என்னுடையது….!
கடலைப் பார்த்திருப்பய்…!
எத்துணை முயன்றாலும்
கரைகடக்க முடிவதில்லை அதனால்
அலை கரை கடக்கும்
வரையுமே
அதனை இரசிக்க
ஒண்ணும்…
கரைகடந்த
அலை – ஆழிப்பேரலை
நீயும் நானும்
சுற்றமும் சேர்ந்து
காணாமல் போய்விடுவோம்.
சிறு தென்றலாய்….
மர ஸ்பரிசங்களை
வருடிச்செல்லத்தான்
உரிமை உண்டு
எனக்கு – அதன் கனிகளை
திருடிச்செல்ல அல்ல…!
ஆக…,
நாளை மரணிக்கும்
ஈசல் எங்கே…?
நாளும் ஒளிதரும்
வெண்ணிலா
நீ எங்கே..?
நீயும் நானும் அதுவும்
சுற்றிக்கொண்டிருப்போம்
அது…
அதுவாகவே இருக்கும்
நீயும் நானும் தான்
மாற வேண்டும்…!!!
மாறுதல் மாற்றமாக
மட்டுமல்ல
புரட்சியாகவும்
இருக்கலாம்….!
