ஈழம்
உழுத்துப்போன உழுந்து/உளுந்து
by nirujah on Jan.16, 2012, under ஈழம், தமிழ்
“அம்மாவின் இனிப்பான சர்க்கரைப் பொங்கலும், உழுந்து வடையும் இந்தஆண்டு பொங்கலின் மிகப்பெரிய இழப்பு எனக்கு!” என்று இன்று காலை எனது மனதில் இருந்ததை டுவிட்டினேன்.
உண்மையில், இனிப்புப் அதிகம் விரும்பி உண்ணும் எனக்கு, சர்க்கரைப் பொங்கலும், உழுந்து வடையும் என்றால் அலாதிப் பிரியம். இந்த முறை பொங்கலில் ஒரு சிறு கவளம் அரிசி கூட உண்ணக் கிடைக்கவில்லை. சிங்கையின் சிலிர்ப்பில், நூடுல்சும் பாண்ணும் தான் அன்றைய உணவாகப் போனது.
இதற்கிடையில், இந்த டுவிட்டைப் பார்த்த ஒரு தமிழக நண்பி என்ன உளுந்தா?? என்று கேட்க, உழுந்து/உளுந்து சம்பந்தமாக ஓர் தேடலில் இறங்கினேன். தேடுகின்ற போது, வியப்பளிக்கும் வகையில், ழுகரமும் ளுகரமும் சம அளவில் பயன்படுத்தப் பட்டிருந்தது. கூகுளில் எந்தவித வடிகட்டுதலும் இல்லாமல் தேடியபோது கட்டுரைகள் ஆக்கங்கள் பலவற்றில் இரண்டும் பரவலாக பயன்படுத்தப்பட்டிருந்தன. படங்களை மாத்திரம் என்று வடி கட்டியபோது, இரண்டிலும் ஏராளமான படங்கள் வந்தாலும் உழுந்து சார்ந்த படங்கள் மிக மிக அதிகமாக ளுகரம் பயன்படுத்தப்பட்டே வந்திருந்தது.
இவ்விடயமாக பேஸ்புக்கில் நண்பர்களுடன் பின்னர் நடாந்த கருத்தாடலை இங்கே தர விரும்புகின்றேன். அதில் வெறும் உழுந்துடம் மாத்திரம் நின்றுவிடாது மேலும் பல சொற்கள் பற்றியும் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.
Gopikrishna Kanagalingam http://www.tamilvu.org/
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு //
Gopikrishna Kanagalingam http://ta.wikipedia.org/
இரண்டும் சரி என்றவாறு தமிழ் விக்கி சொல்கிறது
ஆகவே “உளுந்து” என்பதற்கான ஆதாரம் தான் தேவை.
நியாபகம், ஞாபகம் இரண்டும் சரியானவை என்ற முடிவை எடுக்கத் தயாரா?
Kaa Sethu கருப்பு – கறுப்பு பற்றிய இராம.கி. விளக்கங்கள் தெளிவானவை. http://
valavu.blogspot.com
//
கருத்தல் = தானாகக் கருமை நிறம் பெறுதல்;
கறுத்தல் = பிறவினையால் கருமை நிறம் பெறுதல்; அதாவது கருக்க வைத்தல்.
வெய்யிலில் தோல் கருத்தது
வெய்யிலால் தோல் கறுத்தது
இருத்தல் = தானாக ஓரிடத்தில் அமர்தல்
இறுத்தல் = பிறவினையால் ஓரிடத்தில் இருக்க வைத்தல்.
நாளாவட்டத்தில், கருத்தலில் இருந்து எழுந்த பெயர்ச்சொல்லான கருப்பிற்கும், கறுத்தலில் இருந்து எழுந்த பெயர்ச்சொல்லான கறுப்பிற்கும் பொருள் மயக்கம் ஏற்படலாம்; பலருக்கும் ஏற்படுகிறது. கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் சரி செய்துவிடலாம். அதேபோலத் தான் இருப்பும், இறுப்பும். இன்னும் பல காட்டுக்களைச் சொல்ல முடியும்.
//
கௌபியும் திருவிழாக்களும்
by nirujah on Nov.20, 2011, under அனுபவங்கள், ஈழம்
கௌபி – இது தான் இதன் சரியான எழுத்துக்கூடலாக இருக்க முடியும். இன்று நீண்ட காலத்துக்கு பிறகு வீட்டிலே கௌபி சாப்பிடச் சந்தர்ப்பம் கிடைத்தது. நீண்டகாலம் என்றால் ஒன்று இரண்டு வருடம் இல்லை; குறைந்தது ஒரு 10 வருடமாவது இருக்கும் நான் இரச்சிச்சு கௌபி சாப்பிட்டு.
இன்று கௌபி சாப்பிட்டு இதைப்பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று இணையத்தை துலாவினால் ஒன்றுமே அகப்படவில்லை. தமிழ், தெரிந்த ஆங்கில பதங்கள் எல்லாம் போட்டு தேடிக்களைத்துப் போய் இருந்தேன். பின்னர் எமது பச்சிளம் பாலகர் வந்தியின் உதவியுடன் அது கௌபிக்கு ஆங்கிலத்திலும் Cowpea தான் பெயர் என்றும் அது அப்படியே தமிழிலும் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிந்து கொண்டேன்.
இன்னும் நினைவிருக்கிறது. பறாளாய் விநாயகர் அல்லது முருகன் திருவிழாக்களிலும் கம்பனை அம்மன் கோவிலின் செவ்வாய் மற்றும் வெள்ளி மாலைப்பூசைக்கு பின்னரும் வெறும் 7, 8 வயதே நிரம்பிய அந்த பிஞ்சுக் கரங்களால் கொட்டாமல் கௌபி வாங்கி சாப்பிட்டது. பின்னர் வவுனியாவில் பாடசாலை சரஸ்வதி பூசை, மார்கழி மாதத்து அதிகாலையில் குளக்கட்டு பிள்ளையார் கோவிலின் திருவெம்பாவை பூசைகள், வைத்தியசாலைப் பிள்ளையார் என ஒரு வயது வரைக்கும் அடிபட்டு பிரசாதம் வாங்கும் வன்முறைக்கலாச்சாரம் எனக்குள்ளேயும் இருந்தது. கடவுளைப் பார்க்க ஒருகாலமும் கோவிலுக்கு போகாவிட்டாலும், குறைந்த பட்சம் பிரசாதத்துக்கும் அதிகபட்சம் எமது வகுப்பு தோழிகளின் சமூகம் கண்டிப்பாக கோவில்களில் இருந்ததாலும் தவறாது போனோம்.

சின்னவெங்காயத்தை மிகவும் சின்னதாக வெட்டி, அதனுடன் பெருஞ்சீரகம், நற்சிரகம், கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு எண்ணையில் வதக்கி, குறைந்தது ஒரு அரைமணிநேரமாவது தண்ணீரில் ஊறவைத்து பின்னர் அளவாக உப்புச்சேர்த்து அவித்த கௌபியை அந்த வதங்கலுக்குள் போட்டு நன்றாக தாழித்து எடுத்தால் எழுகின்ற கமகம வாசனை வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. இதை கோவிலில் வெறும் ஒரு கைப்பிடியளவு மட்டுமே வாங்கி சப்புக்கொட்டி சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்று வருகின்ற அந்த உள்ளுணர்வுக்காகவே தினமும் கோவிலுக்கு போகலாம்.
அட, கௌபியைப் பற்றி சொல்லவந்து கடைசியில் சமயல் குறிப்புதான் எழுத முடிஞ்சது. சின்னஞ்சிறு வயதில் இதுபோன்ற நிகழ்வுகளை அனுபவிக்காதவர்கள் உண்மையிலேயே அபாக்கியசாலிகள் தான்.
கௌபி, ஆசிய, ஆபிரிக்க மற்றும் சில ஆபிரிக்க நாடுகளிலும் விளைகின்றது. அதிகமாக மனிதர்களும் மிருகங்களும் இதனை உணவாகக் கொள்கின்றனர். எங்கள் ஊரில் கௌபியில் தேங்காய்ப் பால் விட்டு குழம்பு மாதிரி ஒரு உணவு வகையும் பிரபலம்.
கனாக்காலம்
by nirujah on Jul.26, 2011, under அனுபவங்கள், ஈழம், விளையாட்டு
அப்போது காலை ஏழு எழரை இருக்கும். நான் பொட்டிக்கோவில் மூலைக் குந்தில் இருந்து சோம்பல் முறித்துக்கொண்டிருந்தேன். தம்பியும் தங்கையும் இன்னும் எழும்பவில்லை என நினைக்கிறேன். அம்மா காலைச் சாப்பாட்டுக்காக குசினியில் சமைத்துக்கொண்டிருந்தார். முத்ததில் இருந்த பூக்கண்டுகளுக்கு அப்பா தண்ணி விட்டுக்கொண்டிருதார்.
படலயைத் திறந்து கொண்டு ஊர் பெரியவர் இருவரும் கூடவே நான்கு இளம் பெடியளும் வந்தார்கள். வாளியும் கையுமாக நிண்ட அப்பாவிடம் ஏதோ கதைத்து விட்டு போனார்கள். இது நடக்கும் போது எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும். என்ன கதைத்தார்கள் என்றெல்லாம் தெரியாது. அது ஒரு பள்ளி விடுமுறைப் பருவம். அதிகமாக சித்திரை விடுமுறையாகவோ அல்லது ஆடி விடுமுறையாகவோ இருந்திருக்க வேண்டும்.
ரண்டு நாளுக்கு பிறகு, என்னையும் தம்பி, தங்கச்சியையும் ஊருக்கு புறத்தே உள்ள வயல் வெளிக்கு கூட்டிக்கொண்டு போனார். அங்க பாத்த காட்சி எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்தது. எங்கட ஊரில உள்ள ஏல்லா சின்னஞ்சிறுசுகளும் அங்கை நிண்டுச்சினம்.
எல்லாத்துக்கும் முதல் ஒன்டைச் சொல்லவேணும். எங்கட அம்மா அப்பா எங்களை வெளியால பெரிசா கூட்டிக்கொண்டு போறேல்ல. அது சின்ன வயசு என்டதாலயோ தெரியாது. நாட்டுப் பிரச்சனை தொடங்கும் வரைக்கும் பள்ளிக்கூடத்துக்கு காரில போனாங்கள். பிறகு, மாட்டுவண்டில்ல எண்டு, வீட்டில இருந்து போனா பள்ளிகூடம். வந்தா வீடு. அதால எங்கட ஊரில இருந்த ஆக்களோட பெரிசா கதைக்கவோ விளையாடவோ சந்தர்ப்பம் கிடைக்கேல்ல. போதாக்குறைக்கு, எங்களை ஊர் பள்ளிக்குடத்திலயும் விட்டு படிப்பிக்கேல. சுழிபுரத்தில இருந்ந்து வட்டுக்கோட்டை யாழ்பாணக்கல்லூரிக்கு அனுப்பி படிப்பிச்சவை.

காரநகர் வீதியில போகேக்க, சங்கானை, சித்தங்கேணி தாண்டி போக வடக்கம்பரை அம்மன் கோயில் வரும். அதையும் தாண்டி போனா விக்டோரியா கல்லூரி என்டு ஒரு பள்ளிக்கூடம் இருக்கு. அதுக்கு பக்கத்தில இருக்கிற குச்சொழுங்கைக்கால போகேக்க இருக்கிற ஊர் தான் சுழிபுரம். அதிலையும் பறாளாய் கோயிலுக்கு போற பாதை எல்லாம் தாண்டிப்போக கல்லை வேம்படி என்டு ஒரு குக்கிராமம் இருக்கு. அது தான் எங்கட ஊர்.
அப்ப, அண்டைக்கு எனக்கெண்டா பெரிய சந்தோசம். கோயில்களிலையும், ரோட்டில போகேக்க வரேக்கையும் பாத்த என்ட வயச ஒத்த சின்ன பிள்ளைகள் எல்லாம் அந்த வயலில நிக்கினம். அப்ப தான் அப்பா சொன்னார், ஊரில உள்ள எல்லாரும் சேந்து வருசம் வருசம் விளையாட்டுப் போட்டி எல்லாம் வைக்கிறவையாம்.
எங்கள் எல்லாரையும் 5 குழுவா பிரிச்சு விளையாட்டு எல்லாம் பழக்கிச்சினம். முதல் ஒரு கிழமைக்கு எல்லாம் பயிற்சி தான். நான் ஊராக்களோட சேந்து திரிஞ்சு பழகாததால எனக்கு எல்லாமே புதிசாப் பட்டிச்சு. கிளித்தட்டு, ஓட்டப்போட்டி, கபடி மாதிரி ஒரு விளையாட்டு ( பெயர் ஞாபகத்தில இல்லை. கபடியில நீள் சதுரமா இருக்கிற இடத்துக்கு பதிலா இங்க வட்டமா இருக்கும். பிடிக்கிற ஆக்கள் உள்ள நிப்பினம்) இப்பிடி எல்லாத்துக்கும் பயிற்சி குடுத்து கடைசியா ஒரு நாள் போட்டி நடந்திச்சு.
போட்டி பறாளாய் கோயில் சுற்று வட்டத்தில தான் நடந்தது. அதில சின்ன பிள்ளையள் எங்களுக்கு மட்டுமில்ல பெரியாக்களுக்கு மெதுவா சைக்கிள் ஓடுற போட்டி, விநேத உடைப் போட்டி எல்லாம் நடந்திச்சு. இது எல்லாமே நான் முதல் முறையா பாத்ததால எல்லாமே புதுசா இருந்திச்சு. இன்னொரு பெருமை என்னெண்டா, போட்டி நடக்கேக்க எங்கட அப்பாவும் ஒரு நடுவர். அவருக்கும் பெரிசா நிறைய கலரில ஒரு பட்ச் எல்லாம் குத்த குடுத்திருந்திச்சினம்.

அடுத்த வருசமும் இப்பிடி ஒரு நிகழ்வு நடந்ததா ஞாபகம். ஆனா பிறகு அதுக்கு அடுத்த அடுத்த வருசங்கள் நடக்கேல்ல. ஆமிக்காரன் மாதகல்ல இருந்து அடிக்கடி செல் அடிக்கிறதால நிப்பாட்டிப் போட்டினம். பிறகு நான் இடம்பெயர்ந்து வந்திட்டன். அதுக்கு பிறகு நடந்திச்சோ தெரியேல்ல.
கவியரங்கம் – மறுபடியும் பாரதி…
by nirujah on Jul.22, 2011, under ஈழம், கவிதைகள், வேறு
பால்குடி என்று செல்லாமாக அழைக்கப்படும் தனஞ்சயனின் அழைப்பின் பெயரில் கடந்த சனிக்கிழமை ( 16 – 07 – 2011 ) பருத்தித்துறை, புற்றளை விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான அன்று மறுபடியும் பாரதி எனும் தலைபின் கீழ் ஒரு கவியரங்கம் ஒன்று இடம்பெற்றது.
அரங்கத் தலைவராக லோஷன் அண்ணாவும், “வல்லமை தாறாயோ…” எனும் உப தலைப்பில் எங்கள் திருமலை பவனும், “நெஞ்சு பொறுக்குதில்லையே…” எனும் உப தலைப்பில் நானும், “ஜயமுண்டு பயமில்லை மனமே…” எனும் உப தலைப்பில் சுபாங்கனும், “காதல் போகில் சாதல்…” எனும் உப தலைப்பில் ஆதிரையும் கவியாற்றியிருந்தோம். இதன் வரி, ஒலி மற்றும் ஒளி வடிவங்கள் அவர் அவர் தளங்களிலே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
லோஷன் அண்ணாவின் தொடக்கக் கவி, அறிமுகக்கவி மற்றும் தொகுப்புக் கவிக்கு அவருடைய வலைத்தளத்தையும், பவனின் வல்லமை தாறாயோ எனும் கவிக்கு பவனின் தளத்தையும், சுபாங்கனின் ஜயமுண்டு பயமில்லை மனமே கவிக்கு சுபாங்கனின் தளத்தையும், ஆதிரையின் காதல் போகில் சாதல் கவிக்கு ஆதிரையின் தளத்தையும் நாடுங்கள்.
இனி எனது தலைப்பான நெஞ்சு பொறுக்குதில்லையே தொடர்பான கவி:
நெஞ்சு பொறுக்குதில்லையே…
நெஞ்சு பொறுக்குதில்லையே!
ஏ…! தமிழின் பெருங்கவியே…!
புரட்சியை மட்டுமே
சுவாசித்து மரித்தவனே…!
இந்த வரிகளை எழுதுகையில்
நீ என்னவெலாம் நினைத்தாயோ – நானறியேன்
என்னையும் பொறுத்துக்கொள்
சைக்கிள் ஓடத்தெரிந்த குற்றத்திற்காக
இங்கே எனை விமானம் ஓட்ட
அழைத்திருக்கிறார்கள்…!
தலைப்பைத் தெரிவு செய்து
மூன்று நாட்களாகியும்
தலைப்புக்கூட எழுத்தப்படாமல்
புதிதாய் வாங்கிய பேனாவின்
கன்னியும் கழியாது
காகிதங்கள் நிறைந்த மேசை
வெறித்த படியே கிடந்தது.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று
என்னத்தை எழுதலாம் என்று
யோசித்து யோசித்தே – என்
நெஞ்சு பொறுக்கவில்லை…!
அண்ணார்ந்து… முகடு பார்த்து….
இறுதிவரை ஒன்றுமே வராமல்
முகடு களன்று விடுமென்றெண்ணி
இடத்தை மாற்றி வெளியே அமர்ந்தேன்
ஆஹா…! அருமையான ஓர் காட்சி
அது என் தந்தை வளர்க்கும்
அழகான வீட்டுத்தோட்டம்
ரோஜா முதல் செம்பருத்தி வரை
அனைத்துமே அட்டகாசமாய்…!
தப்பாக விளங்காதீர்…!
முன்னையது நடிகையும் அல்ல
மற்றையது அவர் படமும் அல்ல…!
என்றோ ஒரு நாள் பார்த்த
காகமொன்று எதிர்வீட்டுக் கூரையில்
தன் சொந்த பந்தங்களுடன்
மாம்பழவிருந்தில் திளைத்திருந்தது.
சற்றே எழுந்து
தோட்டத்துள் செல்கின்றேன்.
ஈரம் குழைந்த மண்..!
செழுமையிலும் குறைவில்லை
ஆங்காங்கே நகர்ந்தன
நாக்கிளிப்புழுக்கள்
ஒன்றோ.. இரண்டோ…
வண்ணத்துப்பூச்சிகள்
கனிந்து சிவந்த
தக்காளி, மிளகாய் கூடவே
வெண்டிச்செடியும்…!
ஓரமாய் மணக்கும்
மல்லிகைப் பூங்கொடி
இன்றுதான் புரிந்து கொண்டேன்
தள்ளாத வயதில்லாவிட்டாலும்
சூரியனுக்கு முன்னே எழுந்து
ஊர் உறங்கியபின்னே
உறங்கும் என் அப்பரின்
இளமை இரகசியம்…!
இயற்கையுடன் வாழ்ந்து
இயற்கையை இரசித்து
வாழுதலிலும் மேலுண்டோ
இவ்வுலகில்…?
ம்ஹ்…! உண்மையிலேயே
நெஞ்சு பொறுக்கவில்லைத் தான்…!
வீட்டிலே உள்ளோர்
வேலைக்குச் சென்றபின்
எனை எழுப்ப யாருமே இல்லாமல்,
நானாக எழும்ப எனக்கு தெரியாமல்
காலைப் பண்பலையில் அலாரம் வைத்து
அறக்கப் பறக்க எழும்பி
அவசரமாய்க் குளித்து
முகத்துக்கு சவர்காரம்
தேய்க்கையிலே தான்
சவரம் செய்யாதது
ஞாபகத்துக்கு வரும்…!
முழுச்சவரத்துக்கு
நேரமில்லாட்டியும்
அங்கை, இங்கை
கொஞ்சம் எடுத்தா….
மேலதிகாரியின் கேள்விக்கு
style என்று சொல்லிவிடலாம் என்று
எல்லாம் முடித்து
வீதிகடந்து
பேரூந்தில் ஏற
ஒரு மென்பொருளாலனின்
நாள் தொடங்கும்…!
சரியான சில்லறை
கொடுத்தால் முறைத்துக்கொண்டும்
கொடுத்த பணத்துக்கு மீதி கேட்டால்
கண்டுக்காமலும் நிற்கும்
நடத்துனரைச் சமாளிப்பதோ – அல்லது
சின்ன மினிக் குடிலாகக் காட்சி தரும்
சோடிகளைச் சமாளிப்பதோ என்று
யோசித்து முடிக்கமுதல்
அலுவலகம் வந்துவிடும்….!
புத்தன், நபி விழுமியமும்,
மறை சைவம் தரு ஒழுக்கங்களும்
மீட்பராய் பார்வந்து
இயேசு சொன்ன சீர்வழியும்
சிந்தியுள்ள திருநாட்டில்
தெருநாய்கள் தரத்துக்கு
தெணவெடுத்து அலைகிறார்கள்
இத்தனை அவசரமாய்
முதலிரவு ஒத்திகைகள்
வெட்டவெளிப் பேரூந்தில்
முகஞ்சுழிக்க செய்துவிடும்…!
வேலை எமைச் சுமந்தாலும்
நாமே வேலையைச் சுமந்தாலும்
ஒன்பது மணிக்கெல்லாம்
அப்பிளிலோ, விண்டோசிலோ
நேரங்கள் கரைக்கவேண்டும்
இடையிடையே facebookக்கும்
தவறாமல் twitter ரிலும்
மூழ்கிவிட்டு வந்தால் தான்
சற்றே மூச்சுவரும்.
தேனீர், உணவு, சிற்றுண்டி
நாளிகை தப்பாமல் மேசை வரும்.
ஆனாலும் என்ன,
கொள்ளையில போகும்
அமெரிக்கன் காரன் போ
என்றால் தான் பெட்டியைக்
கட்ட முடியும்!
ஊரடங்கி…
தெருவோரப் பிச்சைகாரன்
உறவும் அடங்கி
நாய்கள் கூட கத்திக் களைத்து
தூங்குகின்ற வேளை தான்
வீடு போய்ச் சேரமுடியும்…!
எல்லாம் முடித்து
படுக்கையைத் தட்டும் போது
கண்டிப்பாய் மணி இரண்டை தாண்டிவிடும்
இப்படி ஓர் வேலைக்குத்தான்
வெளியே software engineer என்று
அதகளப்படுத்துகின்றார்.
இதுகூடப் பரவாயில்லை…!
கணணிக் கலைஞனுக்கு
கலியாணச் சந்தையில்
இருப்பதோ பெரும் கிராக்கி…!
பெண் குடுக்க பொன்னுடனே
விலையும் வைத்துள்ளார்.
வேலை இருக்கோ இல்லையோ,
எஞ்சினியர் மாப்பிள்ளையா
50 லச்சத்தில் சீதனம் தயாராகும்…!
கொழும்பிலே ஒரு தொடர்மாடி,
எப்போதாவது வந்து தங்க
ஊரிலே ஓர் வீட்டுக்காணி!
ஏனையா இந்த அநியாயம்….!
வேலை என்ற பேரிலே
வெள்ளைக்கு மூளை விற்க…
சடங்கு எனும் பேரிலே
இருப்பதையும் விற்கின்றீரே…!
செத்த பிணம் புணர்ந்த
அரிய இத் திருநாட்டில்
விற்ற ஒன்றை மீண்டும் விற்று
தேசியம் கெடுக்காதீர்….!
அன்னையோ, தந்தையோ…
அன்பு உடன்பிறப்போ…
பள்ளிப்பருவம் முதல் கூடவந்த
நட்புகளோ…!
ஒன்றோ இரண்டோ வார இறுதிகள்
மூன்று மாத இடைவெளியில்
கிடைத்தால் பெரும் பாக்யம்
கூடி நலன்கேட்டு
ஒன்றாய் சாப்பிட்டு
மாலைப் பொழுதொன்றை இனிதாய்க்
களித்திடலாம்…!
இப்படித்தான் அன்றொருநாள்…
அப்பருடன் அளவளாவ
அருமையாய்க் கிடைத்ததொரு நாள்
உங்கெப்படியோ நானறியேன்
எம்மிருவர் சந்திப்புக்கள்
வாக்குவாதத்திலிருந்து
என்றுமே தப்பியதில்லை
வடக்கின் வசந்தம்
எப்பூடி என்றேன்…!
இதுவரை மிஞ்சியிருந்த
பெற்றோலிலும் கலந்து விட்டோம்
என்றார்…!
சும்மா சொல்லக்கூடாது….,
மாமாவின் காதலன் அவர்…!
“நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் – ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?
அஞ்சுதலைப் பாம்பென்பான் – அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் – பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார்”
என்ற தமிழ்க்கவியே…!
தமிழின் புரச்சியைப் பறைசாற்றி உரைத்தவனே…!
நெஞ்சு பொறுக்குதில்லையே
என்று அன்று எதையோ சொல்லிவைத்தாயே?
அதற்கே உனக்கு நெஞ்சு பொறுக்கவில்யென்றால்
இன்று நீ மீண்டும் வந்தால்
எவ்வாறு குழறியிருப்பாய்?
எனக்கோர் ஆசையுண்டு…!
மீண்டும் நீ வரவேணும்…!
துனீசியா முதல்
மத்தியகிழக்குவரை
வெடித்திருக்கும் புரட்சியில்
சிறிதேனும் எம்மவர்க்கு நீ
மீண்டும் ஊட்டவேண்டும்…!
ஃபக்கோடா [04-02-11]
by nirujah on Feb.04, 2011, under அனுபவங்கள், ஈழம், பதிவுலகம்
என்னடா இவன் புதுசா ஃபக்கோடாவோட ஆரபிச்சிருக்கிறானே எண்டு யாரும் திட்டாதீங்க. அப்பப்ப போடுற பதிவுகளுக்கு ஏதாவது தலைப்பு வைக்க வேணும் என்டு கன நாலா யோசிச்சு கொண்டு இருந்தனான். நூடுல்ஸ், பர்கர், பாஸ்ட்டா என்டு எல்லா பெயரும் போய்விட, கடைசியில் கடந்த பதிவர் சந்திப்பில் பிரபலமான ஃபக்கோடா தான் மிஞ்சியது. சரி, ஒருத்தரும் அதற்கு இதுவரை சொந்தம் கொண்டாடாதபடியால் இனி அப்பப்ப ஃபக்கோடா வரும். பல நாட்களாக எழுத நினைத்தும், அதற்கும் அதிகமாக ஆணிபுடுங்க வேண்டியிருந்ததால் எழுத முடியவில்லை.
#tnfisherman
இந்த விடயம் பற்றி நான் கீச்சுவில் ஏற்கனவே சொல்லியிருந்ததால், இது பற்றி நிகழ்ந்த எந்தவிதமான விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. தனிப்பதிவும் போடவில்லை.
- இலங்கை மீனவர்களின் வளம் சுரண்டப்படுகின்றது.
- இந்திய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி உள்ளேவருகின்றார்கள்.
- பாரிய ரோலர்களில் வருகின்றவர்களினால் இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுகின்றன.
- இலங்கைக் கடற்படை பலவேளைகளில் இந்திய மீனவர்களைக் கைது செய்தும், சிலவேளைகளில் அவர்களைக் கொலைசெய்தும் கொண்டிருக்கின்றது.
- கொல்லப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் வெறும் படகுகளில் வந்து தம் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிப்பவர்கள்.
- இதற்கெல்லாம் முடிவு கச்சதீவை திரும்பப் பெறுவது மட்டும் தான்
- நிருபமாராவ் வருகை.
- தமிழருக்கு பிரச்சனை வரும்போது எப்போதும் ஒரு மலையாளியே இலங்கைக்கு அனுப்பப்படுகின்றார்
இப்படியாக பல கருத்துக்கள் உலாவின. சற்று முன்னர் நான் கேட்ட ஒரு செய்திக்குறிப்பில் வடபகுதி மீனவர்களுக்கு இன்னமும் கடலில் மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படாதவிடத்து, தென்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் வடபகுதிக் கடல்களில் மீன் பிடிக்கிறார்கள் என்பது தான்.
இப்படிப் பல விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில், #tnfisherman என்று இணையத்தில் ஏற்பட்டுள்ள ஒரு அலையைப் பற்றி சிலர், அது ஒரு கண்துடைப்பு, தமிழகத்தின் அரசியல் பின்புலத்தில் உருவானது என்று பல்வேறு வகையாக விமர்சிக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, இந்தப்பிரச்சனையிலாவது இணையத்தில் ஒரு அலை உருவாகியிருக்கின்றது. இதற்கு பின் என்ன நடக்கின்றது என்பதை ஆராய்கின்ற சந்தர்ப்பத்தில், அதன் வலிமை வரவேற்கப்படவேண்டியது. ஒரு விடயம் கவனித்தீர்களா, இதுவரை சுமார் 500 வரையான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்திய(தமிழக), இலங்கைப் பத்திரிகைகளில் இது ஒரு செய்தியாக போடப்பட்டது. ஒரு கட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள் தொடர்ந்து தொழிலுக்கு போகாமல் பகிஷ்கரிப்பும் உண்ணாவிரதமும் இருந்தார்கள். 2003 – 2004 பகுதியில் சன் தொலைக்காட்சி இதை பூதாகாரப்படுத்தியது. இருந்தும் அன்று, இப்போது நாம் விவாதிப்பது போல் நம் இலங்கை மீனவர்களைப் பற்றி பேசவே இல்லை.
ஆக, #tnfisherman என்ற அலை, பலவிடயங்களைப் பற்றி எம்மைப் பேசத்தூண்டி இருக்கின்றது. நாமும் நமது மீனவர்களைப் பற்றி கொஞ்சமாவது பேச முற்பட்டிருக்கின்றோம். இது வெறும் காலமாற்றத்தால் உருவானதாகக்கூட இருக்கலாம். இதனை ஆதரிப்பதோ விமர்சிப்பதோ அவரவர் புரிந்துணர்தலுக்கு இயல்பானது.
சுதந்திர தினம்
இன்று இலங்கைக்கு சுதந்திர தினமாம். நல்லது. அதுவும் 63வது சுதந்திரதினமாம். அது மட்டுமல்ல, 2வது சுதந்திர தினமும் கூடவாம். கடந்த வருடம் சுதந்திர தினம் கண்டியில் கொண்டாடப்பட்டதாம். இம்முறை கதிர்காமம் என்று அழைக்கப்பட்ட கதரகமவில் கொண்டாடப்படுகின்றதாம். ஏனென்றால் இது ஒரு அனைத்து மக்களுக்கும் பொதுவான(?) வழிபாட்டுத் தலமாம்.
இயற்கை
மீண்டும் கிழக்கில் மழையும் குளிர்காலநிலையும் அதிகரித்து விட்டன. கிழக்கின் நீரேந்து பிரதேசங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மீண்டும் மக்கள் அவலங்களை எதிர்நேக்கத் தொடங்கி விட்டார்கள். இன்று காலையில் தான் மன்னர் தனது உரையில், துரித கதியில் முழு அளவில் மக்களுக்கு உதவுவோம் என்று. பாப்பம்.
இது இப்படி என்றால், ஒஸ்ரேலியாவின் குயின்ஸ்லாட் பகுதியை தாக்க ஆரம்பித்த, யாசி என்று பெயர்வைக்கப்பட்ட சூறாவளி இதுவரை பல கோடி மதிப்பான பொருட்சேதத்தை ஏற்படுத்தி உள்ளதோடு இது வரை ஒருவர் இறந்தும் இருவர் காணாமலும் போயுள்ளனர். யாசி தற்போது தொடர்ந்து ஒஸ்ரேலியாவின் குறுக்காக பயனித்துக்கொண்டிருக்கிறது. இது குயின்ஸ்டான்டை தாக்கும் போது, மணிக்கு சுமார் 290 கிமீ வேகத்தில் இருந்தது. இதன் குறுக்களவானது மிகவும் பெரியதாக கிட்டத்தட்ட முழு ஐக்கியராட்ச்சியத்தையே அதற்குள் கொள்ளும் அழவு பெரிதாக உள்ளது.

