கௌபியும் திருவிழாக்களும்
by nirujah on Nov.20, 2011, under அனுபவங்கள், ஈழம்
கௌபி – இது தான் இதன் சரியான எழுத்துக்கூடலாக இருக்க முடியும். இன்று நீண்ட காலத்துக்கு பிறகு வீட்டிலே கௌபி சாப்பிடச் சந்தர்ப்பம் கிடைத்தது. நீண்டகாலம் என்றால் ஒன்று இரண்டு வருடம் இல்லை; குறைந்தது ஒரு 10 வருடமாவது இருக்கும் நான் இரச்சிச்சு கௌபி சாப்பிட்டு.
இன்று கௌபி சாப்பிட்டு இதைப்பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று இணையத்தை துலாவினால் ஒன்றுமே அகப்படவில்லை. தமிழ், தெரிந்த ஆங்கில பதங்கள் எல்லாம் போட்டு தேடிக்களைத்துப் போய் இருந்தேன். பின்னர் எமது பச்சிளம் பாலகர் வந்தியின் உதவியுடன் அது கௌபிக்கு ஆங்கிலத்திலும் Cowpea தான் பெயர் என்றும் அது அப்படியே தமிழிலும் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிந்து கொண்டேன்.
இன்னும் நினைவிருக்கிறது. பறாளாய் விநாயகர் அல்லது முருகன் திருவிழாக்களிலும் கம்பனை அம்மன் கோவிலின் செவ்வாய் மற்றும் வெள்ளி மாலைப்பூசைக்கு பின்னரும் வெறும் 7, 8 வயதே நிரம்பிய அந்த பிஞ்சுக் கரங்களால் கொட்டாமல் கௌபி வாங்கி சாப்பிட்டது. பின்னர் வவுனியாவில் பாடசாலை சரஸ்வதி பூசை, மார்கழி மாதத்து அதிகாலையில் குளக்கட்டு பிள்ளையார் கோவிலின் திருவெம்பாவை பூசைகள், வைத்தியசாலைப் பிள்ளையார் என ஒரு வயது வரைக்கும் அடிபட்டு பிரசாதம் வாங்கும் வன்முறைக்கலாச்சாரம் எனக்குள்ளேயும் இருந்தது. கடவுளைப் பார்க்க ஒருகாலமும் கோவிலுக்கு போகாவிட்டாலும், குறைந்த பட்சம் பிரசாதத்துக்கும் அதிகபட்சம் எமது வகுப்பு தோழிகளின் சமூகம் கண்டிப்பாக கோவில்களில் இருந்ததாலும் தவறாது போனோம்.

சின்னவெங்காயத்தை மிகவும் சின்னதாக வெட்டி, அதனுடன் பெருஞ்சீரகம், நற்சிரகம், கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு எண்ணையில் வதக்கி, குறைந்தது ஒரு அரைமணிநேரமாவது தண்ணீரில் ஊறவைத்து பின்னர் அளவாக உப்புச்சேர்த்து அவித்த கௌபியை அந்த வதங்கலுக்குள் போட்டு நன்றாக தாழித்து எடுத்தால் எழுகின்ற கமகம வாசனை வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. இதை கோவிலில் வெறும் ஒரு கைப்பிடியளவு மட்டுமே வாங்கி சப்புக்கொட்டி சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்று வருகின்ற அந்த உள்ளுணர்வுக்காகவே தினமும் கோவிலுக்கு போகலாம்.
அட, கௌபியைப் பற்றி சொல்லவந்து கடைசியில் சமயல் குறிப்புதான் எழுத முடிஞ்சது. சின்னஞ்சிறு வயதில் இதுபோன்ற நிகழ்வுகளை அனுபவிக்காதவர்கள் உண்மையிலேயே அபாக்கியசாலிகள் தான்.
கௌபி, ஆசிய, ஆபிரிக்க மற்றும் சில ஆபிரிக்க நாடுகளிலும் விளைகின்றது. அதிகமாக மனிதர்களும் மிருகங்களும் இதனை உணவாகக் கொள்கின்றனர். எங்கள் ஊரில் கௌபியில் தேங்காய்ப் பால் விட்டு குழம்பு மாதிரி ஒரு உணவு வகையும் பிரபலம்.

November 20th, 2011 on 8:12 am
//பின்னர் எமது பச்சிளம் பாலகர் வந்தியின் உதவியுடன் அது கௌபிக்கு ஆங்கிலத்திலும் Cowpea தான் பெயர் என்றும் அது அப்படியே தமிழிலும் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிந்து கொண்டேன்.//
பிள்ளைகாள்ஸ்,
தமிழ் விக்சனரியில்:
http://ta.wiktionary.org/wiki/cowpea
>>
cowpea
தாவரவியல். காராமணி
வேளாண்மை. காராமணி = தட்டைப்பயறு = மொச்சை
உசாத்துணை
தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cowpea
<<
வெவேறு வட்டார வழக்குகளுக்கு இடையே வேறுபாடுகள் பற்றி கண்டறிந்ததில்லை.
ஆனால் புலம் பெயர்ந்த ஈழத்தமிழிரிடையே இப் பயறுக்கு, காராமணி மற்றும் தட்டைப்பயறு எனக் குறிப்பிடும் வழக்கமும் இருக்கலாம் எனத் தெரிகிறது:
http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=2186:2011-05-07-14-26-18&catid=83:middle-east&Itemid=460
http://thooyaskitchen.blogspot.com/2009/04/blog-post.html
தமிழகத்தில் கூடுதலாகப் பாவிக்கும் சொற்கள் மெச்சைக்கொட்டை மற்றும் தட்டைப்பயறு என எண்ணுகிறேன். சிவப்பு நிறத்தில் சற்று பெரிதாக, வட இந்தியர் ரஜ்மா அல்லது ரஷ்மா குறிப்பிடும் kidney beans ஐ தமிழகத்தில் (குறிப்பாக சென்னை போன்ற நகர் பகுதிகளில்) ராஜ்மா எனவே தமிழிலும் குறிப்பிடுவதைக் காணலாம்.
இத்தகைய உணவாக உட்கொள்ளக்கூடிய பயிர் விதை வகைகளுக்கு பொதுமைப் பெயர்கள் பல : legume ( அவரையம்), peas (பட்டாணி, கடலை), beans (அவரை)
கா. சேது
November 20th, 2011 on 8:55 am
ஆகா , நான் விக்சனரியை மறந்து விட்டென். இருதாலும் மொச்சை என்பது தவறு என்றே நினைக்கிறேன். தவிர ஈழத்தில் குறிப்பாக நான் வாழ்ந்த பழகிய பிரதேசங்களில் கௌபி என்ற சொல்லே அதிகம் பாவனையில் உள்ளது. தவிர, உசாத்துணையாக கொடுக்கப்பட்ட சுட்டியில் ஒரு பின்னூட்டத்தில் காராமணி = cowpea என்றும் மொச்சை = Dolichos bean என்றும் ஒருவர் பரிந்துரைத்திருக்கிறார். தமிழகத்தில் இருந்தபோது மொச்சை என்ற சொல்பிரயோகம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதன் கௌபியைத் தான் அவ்வாறு அழைத்தார்களா என்பது சரியாகத் தெரியவில்லை.