செவ்வானச் சிதறல்கள்…

கனாக்காலம்

by on Jul.26, 2011, under அனுபவங்கள், ஈழம், விளையாட்டு

அப்போது காலை ஏழு எழரை இருக்கும். நான் பொட்டிக்கோவில் மூலைக் குந்தில் இருந்து சோம்பல் முறித்துக்கொண்டிருந்தேன். தம்பியும் தங்கையும் இன்னும் எழும்பவில்லை என நினைக்கிறேன்.   அம்மா காலைச் சாப்பாட்டுக்காக குசினியில் சமைத்துக்கொண்டிருந்தார்.  முத்ததில் இருந்த பூக்கண்டுகளுக்கு அப்பா தண்ணி விட்டுக்கொண்டிருதார்.

படலயைத் திறந்து கொண்டு ஊர் பெரியவர் இருவரும் கூடவே நான்கு இளம் பெடியளும் வந்தார்கள்.  வாளியும் கையுமாக நிண்ட அப்பாவிடம் ஏதோ கதைத்து விட்டு போனார்கள். இது நடக்கும் போது எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும். என்ன கதைத்தார்கள் என்றெல்லாம் தெரியாது. அது ஒரு பள்ளி விடுமுறைப் பருவம். அதிகமாக சித்திரை விடுமுறையாகவோ அல்லது ஆடி விடுமுறையாகவோ இருந்திருக்க வேண்டும்.

ரண்டு நாளுக்கு பிறகு, என்னையும் தம்பி, தங்கச்சியையும் ஊருக்கு புறத்தே உள்ள வயல் வெளிக்கு கூட்டிக்கொண்டு போனார். அங்க பாத்த காட்சி எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்தது. எங்கட ஊரில உள்ள ஏல்லா சின்னஞ்சிறுசுகளும் அங்கை நிண்டுச்சினம்.

எல்லாத்துக்கும் முதல் ஒன்டைச் சொல்லவேணும். எங்கட அம்மா அப்பா எங்களை வெளியால பெரிசா கூட்டிக்கொண்டு போறேல்ல. அது சின்ன வயசு என்டதாலயோ தெரியாது. நாட்டுப் பிரச்சனை தொடங்கும் வரைக்கும் பள்ளிக்கூடத்துக்கு காரில போனாங்கள். பிறகு, மாட்டுவண்டில்ல எண்டு, வீட்டில இருந்து போனா பள்ளிகூடம். வந்தா வீடு. அதால எங்கட ஊரில இருந்த ஆக்களோட பெரிசா கதைக்கவோ விளையாடவோ சந்தர்ப்பம் கிடைக்கேல்ல. போதாக்குறைக்கு, எங்களை ஊர் பள்ளிக்குடத்திலயும் விட்டு படிப்பிக்கேல. சுழிபுரத்தில இருந்ந்து வட்டுக்கோட்டை யாழ்பாணக்கல்லூரிக்கு அனுப்பி படிப்பிச்சவை.

காரநகர் வீதியில போகேக்க, சங்கானை, சித்தங்கேணி தாண்டி போக வடக்கம்பரை அம்மன் கோயில் வரும். அதையும்  தாண்டி போனா விக்டோரியா கல்லூரி என்டு ஒரு பள்ளிக்கூடம் இருக்கு. அதுக்கு பக்கத்தில இருக்கிற குச்சொழுங்கைக்கால போகேக்க இருக்கிற ஊர் தான் சுழிபுரம். அதிலையும் பறாளாய் கோயிலுக்கு போற பாதை எல்லாம் தாண்டிப்போக கல்லை வேம்படி என்டு ஒரு குக்கிராமம் இருக்கு. அது தான் எங்கட ஊர்.

அப்ப, அண்டைக்கு எனக்கெண்டா பெரிய சந்தோசம். கோயில்களிலையும், ரோட்டில போகேக்க வரேக்கையும் பாத்த என்ட வயச ஒத்த சின்ன பிள்ளைகள் எல்லாம் அந்த வயலில நிக்கினம். அப்ப தான் அப்பா சொன்னார், ஊரில உள்ள எல்லாரும்  சேந்து வருசம் வருசம் விளையாட்டுப் போட்டி எல்லாம் வைக்கிறவையாம்.

எங்கள் எல்லாரையும் 5 குழுவா பிரிச்சு விளையாட்டு எல்லாம் பழக்கிச்சினம். முதல் ஒரு கிழமைக்கு எல்லாம் பயிற்சி தான். நான் ஊராக்களோட சேந்து திரிஞ்சு பழகாததால எனக்கு எல்லாமே புதிசாப் பட்டிச்சு. கிளித்தட்டு, ஓட்டப்போட்டி, கபடி மாதிரி ஒரு விளையாட்டு ( பெயர் ஞாபகத்தில இல்லை.  கபடியில நீள் சதுரமா இருக்கிற இடத்துக்கு பதிலா இங்க வட்டமா இருக்கும். பிடிக்கிற ஆக்கள் உள்ள நிப்பினம்) இப்பிடி எல்லாத்துக்கும் பயிற்சி குடுத்து கடைசியா ஒரு நாள் போட்டி நடந்திச்சு.

போட்டி பறாளாய் கோயில் சுற்று வட்டத்தில தான் நடந்தது. அதில சின்ன பிள்ளையள் எங்களுக்கு மட்டுமில்ல பெரியாக்களுக்கு மெதுவா சைக்கிள் ஓடுற போட்டி, விநேத உடைப் போட்டி எல்லாம் நடந்திச்சு. இது எல்லாமே நான் முதல் முறையா பாத்ததால எல்லாமே புதுசா இருந்திச்சு. இன்னொரு பெருமை என்னெண்டா, போட்டி நடக்கேக்க எங்கட அப்பாவும் ஒரு நடுவர். அவருக்கும் பெரிசா நிறைய கலரில ஒரு பட்ச் எல்லாம் குத்த குடுத்திருந்திச்சினம்.

அடுத்த வருசமும் இப்பிடி ஒரு நிகழ்வு நடந்ததா ஞாபகம். ஆனா பிறகு அதுக்கு அடுத்த அடுத்த வருசங்கள் நடக்கேல்ல. ஆமிக்காரன் மாதகல்ல இருந்து அடிக்கடி செல் அடிக்கிறதால நிப்பாட்டிப் போட்டினம். பிறகு நான் இடம்பெயர்ந்து வந்திட்டன். அதுக்கு பிறகு நடந்திச்சோ தெரியேல்ல.

:, , , , , , , ,

2 Comments for this entry

  • priyam

    i love the way of ur writings…. very very nice one.

  • kanthsamy

    ///காரநகர் வீதியில போகேக்க, சங்கானை, சித்தங்கேணி தாண்டி போக வடக்கம்பரை அம்மன் கோயில் வரும். அதையும் தாண்டி போனா விக்டோரியா கல்லூரி என்டு ஒரு பள்ளிக்கூடம் இருக்கு.//இடையில பண்ணாகம் என்ற ஊரை விட்டிட்டிங்களே பாஸ். நானும் சுழிபுர பக்கம் தான் ;-)
    எழுத்துநடை சூப்பர் ,அந்தக்காலம் மீண்டும் திரும்பி வர்றது ((

1 Trackback or Pingback for this entry

  • Indli.com

    கனாக்காலம் « செவ்வானச் சிதறல்கள்……

    அப்போது காலை ஏழு எழரை இருக்கும். நான் பொட்டிக்கோவில் மூலைக் குந்தில் இருந்து சோம்பல் முறித்துக்கொண்டிருந்தேன். தம்பியும் தங்கையும் இன்னும் எழும்பவில்லை என நினைக்கிறேன். அம்மா காலைச் சாப்பாட்டுக்காக குசினியில் சமைத்துக்கொண்டிருந்தார். முத்ததில் இருந்த ப…

Leave a Reply

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

வந்தவர்கள்

free counters