கவியரங்கம் – மறுபடியும் பாரதி…
by nirujah on Jul.22, 2011, under ஈழம், கவிதைகள், வேறு
பால்குடி என்று செல்லாமாக அழைக்கப்படும் தனஞ்சயனின் அழைப்பின் பெயரில் கடந்த சனிக்கிழமை ( 16 – 07 – 2011 ) பருத்தித்துறை, புற்றளை விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான அன்று மறுபடியும் பாரதி எனும் தலைபின் கீழ் ஒரு கவியரங்கம் ஒன்று இடம்பெற்றது.
அரங்கத் தலைவராக லோஷன் அண்ணாவும், “வல்லமை தாறாயோ…” எனும் உப தலைப்பில் எங்கள் திருமலை பவனும், “நெஞ்சு பொறுக்குதில்லையே…” எனும் உப தலைப்பில் நானும், “ஜயமுண்டு பயமில்லை மனமே…” எனும் உப தலைப்பில் சுபாங்கனும், “காதல் போகில் சாதல்…” எனும் உப தலைப்பில் ஆதிரையும் கவியாற்றியிருந்தோம். இதன் வரி, ஒலி மற்றும் ஒளி வடிவங்கள் அவர் அவர் தளங்களிலே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
லோஷன் அண்ணாவின் தொடக்கக் கவி, அறிமுகக்கவி மற்றும் தொகுப்புக் கவிக்கு அவருடைய வலைத்தளத்தையும், பவனின் வல்லமை தாறாயோ எனும் கவிக்கு பவனின் தளத்தையும், சுபாங்கனின் ஜயமுண்டு பயமில்லை மனமே கவிக்கு சுபாங்கனின் தளத்தையும், ஆதிரையின் காதல் போகில் சாதல் கவிக்கு ஆதிரையின் தளத்தையும் நாடுங்கள்.
இனி எனது தலைப்பான நெஞ்சு பொறுக்குதில்லையே தொடர்பான கவி:
நெஞ்சு பொறுக்குதில்லையே…
நெஞ்சு பொறுக்குதில்லையே!
ஏ…! தமிழின் பெருங்கவியே…!
புரட்சியை மட்டுமே
சுவாசித்து மரித்தவனே…!
இந்த வரிகளை எழுதுகையில்
நீ என்னவெலாம் நினைத்தாயோ – நானறியேன்
என்னையும் பொறுத்துக்கொள்
சைக்கிள் ஓடத்தெரிந்த குற்றத்திற்காக
இங்கே எனை விமானம் ஓட்ட
அழைத்திருக்கிறார்கள்…!
தலைப்பைத் தெரிவு செய்து
மூன்று நாட்களாகியும்
தலைப்புக்கூட எழுத்தப்படாமல்
புதிதாய் வாங்கிய பேனாவின்
கன்னியும் கழியாது
காகிதங்கள் நிறைந்த மேசை
வெறித்த படியே கிடந்தது.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று
என்னத்தை எழுதலாம் என்று
யோசித்து யோசித்தே – என்
நெஞ்சு பொறுக்கவில்லை…!
அண்ணார்ந்து… முகடு பார்த்து….
இறுதிவரை ஒன்றுமே வராமல்
முகடு களன்று விடுமென்றெண்ணி
இடத்தை மாற்றி வெளியே அமர்ந்தேன்
ஆஹா…! அருமையான ஓர் காட்சி
அது என் தந்தை வளர்க்கும்
அழகான வீட்டுத்தோட்டம்
ரோஜா முதல் செம்பருத்தி வரை
அனைத்துமே அட்டகாசமாய்…!
தப்பாக விளங்காதீர்…!
முன்னையது நடிகையும் அல்ல
மற்றையது அவர் படமும் அல்ல…!
என்றோ ஒரு நாள் பார்த்த
காகமொன்று எதிர்வீட்டுக் கூரையில்
தன் சொந்த பந்தங்களுடன்
மாம்பழவிருந்தில் திளைத்திருந்தது.
சற்றே எழுந்து
தோட்டத்துள் செல்கின்றேன்.
ஈரம் குழைந்த மண்..!
செழுமையிலும் குறைவில்லை
ஆங்காங்கே நகர்ந்தன
நாக்கிளிப்புழுக்கள்
ஒன்றோ.. இரண்டோ…
வண்ணத்துப்பூச்சிகள்
கனிந்து சிவந்த
தக்காளி, மிளகாய் கூடவே
வெண்டிச்செடியும்…!
ஓரமாய் மணக்கும்
மல்லிகைப் பூங்கொடி
இன்றுதான் புரிந்து கொண்டேன்
தள்ளாத வயதில்லாவிட்டாலும்
சூரியனுக்கு முன்னே எழுந்து
ஊர் உறங்கியபின்னே
உறங்கும் என் அப்பரின்
இளமை இரகசியம்…!
இயற்கையுடன் வாழ்ந்து
இயற்கையை இரசித்து
வாழுதலிலும் மேலுண்டோ
இவ்வுலகில்…?
ம்ஹ்…! உண்மையிலேயே
நெஞ்சு பொறுக்கவில்லைத் தான்…!
வீட்டிலே உள்ளோர்
வேலைக்குச் சென்றபின்
எனை எழுப்ப யாருமே இல்லாமல்,
நானாக எழும்ப எனக்கு தெரியாமல்
காலைப் பண்பலையில் அலாரம் வைத்து
அறக்கப் பறக்க எழும்பி
அவசரமாய்க் குளித்து
முகத்துக்கு சவர்காரம்
தேய்க்கையிலே தான்
சவரம் செய்யாதது
ஞாபகத்துக்கு வரும்…!
முழுச்சவரத்துக்கு
நேரமில்லாட்டியும்
அங்கை, இங்கை
கொஞ்சம் எடுத்தா….
மேலதிகாரியின் கேள்விக்கு
style என்று சொல்லிவிடலாம் என்று
எல்லாம் முடித்து
வீதிகடந்து
பேரூந்தில் ஏற
ஒரு மென்பொருளாலனின்
நாள் தொடங்கும்…!
சரியான சில்லறை
கொடுத்தால் முறைத்துக்கொண்டும்
கொடுத்த பணத்துக்கு மீதி கேட்டால்
கண்டுக்காமலும் நிற்கும்
நடத்துனரைச் சமாளிப்பதோ – அல்லது
சின்ன மினிக் குடிலாகக் காட்சி தரும்
சோடிகளைச் சமாளிப்பதோ என்று
யோசித்து முடிக்கமுதல்
அலுவலகம் வந்துவிடும்….!
புத்தன், நபி விழுமியமும்,
மறை சைவம் தரு ஒழுக்கங்களும்
மீட்பராய் பார்வந்து
இயேசு சொன்ன சீர்வழியும்
சிந்தியுள்ள திருநாட்டில்
தெருநாய்கள் தரத்துக்கு
தெணவெடுத்து அலைகிறார்கள்
இத்தனை அவசரமாய்
முதலிரவு ஒத்திகைகள்
வெட்டவெளிப் பேரூந்தில்
முகஞ்சுழிக்க செய்துவிடும்…!
வேலை எமைச் சுமந்தாலும்
நாமே வேலையைச் சுமந்தாலும்
ஒன்பது மணிக்கெல்லாம்
அப்பிளிலோ, விண்டோசிலோ
நேரங்கள் கரைக்கவேண்டும்
இடையிடையே facebookக்கும்
தவறாமல் twitter ரிலும்
மூழ்கிவிட்டு வந்தால் தான்
சற்றே மூச்சுவரும்.
தேனீர், உணவு, சிற்றுண்டி
நாளிகை தப்பாமல் மேசை வரும்.
ஆனாலும் என்ன,
கொள்ளையில போகும்
அமெரிக்கன் காரன் போ
என்றால் தான் பெட்டியைக்
கட்ட முடியும்!
ஊரடங்கி…
தெருவோரப் பிச்சைகாரன்
உறவும் அடங்கி
நாய்கள் கூட கத்திக் களைத்து
தூங்குகின்ற வேளை தான்
வீடு போய்ச் சேரமுடியும்…!
எல்லாம் முடித்து
படுக்கையைத் தட்டும் போது
கண்டிப்பாய் மணி இரண்டை தாண்டிவிடும்
இப்படி ஓர் வேலைக்குத்தான்
வெளியே software engineer என்று
அதகளப்படுத்துகின்றார்.
இதுகூடப் பரவாயில்லை…!
கணணிக் கலைஞனுக்கு
கலியாணச் சந்தையில்
இருப்பதோ பெரும் கிராக்கி…!
பெண் குடுக்க பொன்னுடனே
விலையும் வைத்துள்ளார்.
வேலை இருக்கோ இல்லையோ,
எஞ்சினியர் மாப்பிள்ளையா
50 லச்சத்தில் சீதனம் தயாராகும்…!
கொழும்பிலே ஒரு தொடர்மாடி,
எப்போதாவது வந்து தங்க
ஊரிலே ஓர் வீட்டுக்காணி!
ஏனையா இந்த அநியாயம்….!
வேலை என்ற பேரிலே
வெள்ளைக்கு மூளை விற்க…
சடங்கு எனும் பேரிலே
இருப்பதையும் விற்கின்றீரே…!
செத்த பிணம் புணர்ந்த
அரிய இத் திருநாட்டில்
விற்ற ஒன்றை மீண்டும் விற்று
தேசியம் கெடுக்காதீர்….!
அன்னையோ, தந்தையோ…
அன்பு உடன்பிறப்போ…
பள்ளிப்பருவம் முதல் கூடவந்த
நட்புகளோ…!
ஒன்றோ இரண்டோ வார இறுதிகள்
மூன்று மாத இடைவெளியில்
கிடைத்தால் பெரும் பாக்யம்
கூடி நலன்கேட்டு
ஒன்றாய் சாப்பிட்டு
மாலைப் பொழுதொன்றை இனிதாய்க்
களித்திடலாம்…!
இப்படித்தான் அன்றொருநாள்…
அப்பருடன் அளவளாவ
அருமையாய்க் கிடைத்ததொரு நாள்
உங்கெப்படியோ நானறியேன்
எம்மிருவர் சந்திப்புக்கள்
வாக்குவாதத்திலிருந்து
என்றுமே தப்பியதில்லை
வடக்கின் வசந்தம்
எப்பூடி என்றேன்…!
இதுவரை மிஞ்சியிருந்த
பெற்றோலிலும் கலந்து விட்டோம்
என்றார்…!
சும்மா சொல்லக்கூடாது….,
மாமாவின் காதலன் அவர்…!
“நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் – ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?
அஞ்சுதலைப் பாம்பென்பான் – அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் – பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார்”
என்ற தமிழ்க்கவியே…!
தமிழின் புரச்சியைப் பறைசாற்றி உரைத்தவனே…!
நெஞ்சு பொறுக்குதில்லையே
என்று அன்று எதையோ சொல்லிவைத்தாயே?
அதற்கே உனக்கு நெஞ்சு பொறுக்கவில்யென்றால்
இன்று நீ மீண்டும் வந்தால்
எவ்வாறு குழறியிருப்பாய்?
எனக்கோர் ஆசையுண்டு…!
மீண்டும் நீ வரவேணும்…!
துனீசியா முதல்
மத்தியகிழக்குவரை
வெடித்திருக்கும் புரட்சியில்
சிறிதேனும் எம்மவர்க்கு நீ
மீண்டும் ஊட்டவேண்டும்…!
6 Comments for this entry
1 Trackback or Pingback for this entry
-
Indli.com
July 22nd, 2011 on 11:08 amகவியரங்கம் – மறுபடியும் பாரதி… « செவ்வானச் சிதறல்கள்……
கடந்த சனிக்கிழமை ( 16 – 07 – 2011 ) பருத்தித்துறை, புற்றளை விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான அன்று மறுபடியும் பாரதி எனும் தலைபின் கீழ் ஒரு கவியரங்கம் ஒன்று இடம்பெற்றது….

July 22nd, 2011 on 10:55 am
முழுமையான கவிதையை பதில் பகிர்ந்தமைக்கு நன்றிகள்… மீண்டுமொருமுறை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது… மகிழ்ச்சி..
July 22nd, 2011 on 11:53 am
July 22nd, 2011 on 2:09 pm
சற்றே பிந்தினாலும் அனைவரும் ஒரே நேரத்தில் தந்தமைக்கு நன்றிகள். ஏற்கனவே பால்குடியின் தயவில் நேரடியாக கொஞ்சமும் பின்னர் நெட்டில் முழுமையும் எனக் கேட்டேன். ஆணிகள் அலவாங்குகள் இருப்பதால் முழுமையான பின்னூட்டம் பின்னர் வரும் (ஆனால் வராது).
July 22nd, 2011 on 8:20 pm
நேரலையில் கேட்டு + பார்த்து இரசித்தேன்.
அழகாக இருந்தது.
July 22nd, 2011 on 11:04 pm
October 2nd, 2011 on 9:54 am
சாட்டையடி கொடுத்துள்ளீர்கள். ஆனாலும் ரொம்ப நல்ல சமூகம் நம்ம சமுகம்.. என்னதான் அடிச்சாலும் தாங்கிகும். ஆனா திருந்த மாட்டைன்க..!