கரப்பான் பூச்சிக் கொத்து
by nirujah on Jun.29, 2011, under அனுபவங்கள், பதிவுலகம்
இந்த சமுதாயத்தில் பலவகையான மனிதர்களைச் சந்திக்கிறோம். பலர் மிகவும் நல்லவர்களாக இருக்கின்றார்கள். சிலர் கெட்டவர்களாக இருக்கின்றார்கள். சிலர் நல்லவர்களாகத் தெரிவார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள். சிலர் கொடூரமாகத் தெரிந்தாலும் யதார்த்தத்தில் நல்லாவர்களாக இருப்பார்கள். நான் இப்போது சொல்ல வந்த விடயம் சற்றே வித்தியாசமானது.
இன்றைய இயந்திர உலகில் ஹோட்டலில் சென்று சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நட்ச்சத்திர ஹோட்டல்களாக இருந்தாலும் சரி, சிறிய கையேந்திபவன்களான தெருவோரக்கடைகளாக இருந்தாலும் சரி நாம் சுத்தமான உணவை உண்ணவே விரும்புகின்றோம். நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்பவர்கள் ஆடம்பரம், ரம்யமான சூழல், சமூக அந்தஸ்து என்பவற்றைத் தாண்டி சுகாதாரமான உணவை உண்பதற்காகவும் செல்கின்றார்கள்.
அதிகமானவ நேரங்களில் எமக்கு சிறந்த உணவு கிடைக்கின்றது. எப்போதாவது சில சந்தர்பங்களில், சமையல்காரரின் கவலையீனத்தாலோ அல்லது அவதானக் குறைவாலோ உணவுக்குள் தலைமுடி போன்றன வரவும் தவறுவதில்லை. சிலவேளைகளில் களஞ்சியப்படுத்தலில் உள்ள குறைபாடுகளால் கரப்பான் பூச்சிகள் போன்றவை கூட வருவதாக கேள்விப்படுகின்றோம். உணவு உண்ணும் சந்தர்பத்திலோ அல்லது பரிமாறப்படும் போதோ முடியோ அல்லது அழுக்குகள் காணப்படும் இடத்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டால், தவறை அவர்களே பொறுப்பேற்று புதிய உணவு வகை மட்டுமல்லாது, எம்மைக் குஷிப்படுத்த இலவசமாக இன்னும் சிலவற்றை தருவதும் உண்டு. இல்லாவிட்டால் வாடிக்கையாளர் நீதிமன்றம் வரைக்கும் கொண்டு சென்று விடுவார்கள் என்ற பயம் தான் இதற்கு முக்கிய காரணம்.
ஒரு முறை டுப்ளிகேஷன் வீதியில் உள்ள Coffe Bar ல் நண்பர் ஒருவருடன் உணவு உண்ணும் போது, ஒரு சிறிய முடி ஒன்று இருந்து விட்டது. அதன் அளவு வெறும் ஒரு அங்குலத்தை விடக்குறைவு. வீட்டில் நாம் சாப்பிடும்போதோ, அல்லது ஒரு உறவினர் வீட்டில் சாப்பிடும் போதோ அதை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிட்டிருப்போம். ஆனால் என்னுடன் வந்த நண்பரோ அங்கிருந்த உணவு பரிமாறுபவரை அழைத்து அவருடன் மல்லுக்கட்டினார். இறுதியில் மீண்டும் நமக்கு அதே உணவு புதிதாகக் கிடைத்தது மட்டுமல்லாது அன்றைய முழு உணவுக்கான செலவும் எங்களிடம் அறவிடப்படவில்லை. அந்தக்கடையின் வாடிக்கையாளரான நான், அதன் பின் மூன்று நான்கு வருடங்களாகியும் போனது இல்லை. ஒரு குற்ற உணர்வு தான்.
அதன் பின்னர் ஒரு நாள் எனது பல்கலைகழக நண்பர்களுடன் MCயோடு உள்ள KFCயில் சாப்பிட போயிருந்தோம். அங்கே நாம் வாங்கிய கோழிப் பொரியலுடன் ஒரு கோழியின் இறகு ஒட்டியிருந்தது. எம்முடன் இலண்டனில் படித்திவிட்டு வந்திருந்த ஒரு நண்பர் அந்தச் சிறிய இறகை எடுத்துக்கொண்டு KFC மேலாளரிடம் ஏதோ பேசி, இலவசமாக மேலும் சில கோழிப்பொரியல்களுடன் வந்தார். இப்படியான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்களின் முறையீடும் அதற்கு அந்த ஹோட்டல்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் நியாயப்படுத்தக்கூடியவையும் வேடிக்கையானவையும் தான்.
இதே போல் தான் தெகிவளை, காலி வீதிக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில் வேடிக்கையான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருவர் ஆட்டுக்குடல் (பாபத் என்று அழைப்பார்களாம்) போட்டு ஒரு கொத்து ஒன்று பொதியாகக் கட்டி வீட்டுக்கு எடுத்துப் போயிருக்கிறார். ஒரு மணிநேரம் கழித்து, முக்கால் வாசிக்கும் மேலான கொத்து உண்ணப்பட்டநிலையில், அதனுள் கரப்பான் பூச்சி இருந்ததாக மீண்டும் அந்த உணவுப் பொதியைக் கொண்டுவந்திருந்தார். அந்த உணவக ஊழியகள் அதைத் திறந்து பார்த்தபோது, அதனுள் ஒரு கரப்பான் பூச்சி ஒன்று குற்றுயிரும் குலையுயிருமாக துடித்தவண்ணம் இருந்தது. பாபத் போட்டு கொத்திய கொத்தில் எப்படி கால்கள் இயங்கிய வண்ணம் கரப்பான் பூச்சி இருந்தது என்று அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். குறித்த அந்த நபரே பாதிக்கு மேற்பட்ட கொத்தை சாப்பிட்டு விட்டு, ஒரு கரப்பானை அடித்து போட்டுக்கொண்டு வந்ததாக ஊழியர்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். எது எப்படி இருந்தாலும், அவருக்கு மீண்டும் ஒரு புது பாபத் கொத்து போட்டு கொடுக்கப்பட்டது.
நாளை பாம்பு ஒன்றை அடித்து போட்டுகொண்டு குறித்த நபர் வருவார் என அந்த ஊழியர்கள் தமக்குள் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார்கள். ம்ஹ்…! இப்படியும் இவ்வுலகில் ஆட்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
2 Comments for this entry
1 Trackback or Pingback for this entry
-
Indli.com
June 29th, 2011 on 12:33 amகரப்பான் பூச்சிக் கொத்து « செவ்வானச் சிதறல்கள்……
இன்றைய இயந்திர உலகில் ஹோட்டலில் சென்று சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நட்ச்சத்திர ஹோட்டல்களாக இருந்தாலும் சரி, சிறிய கையேந்திபவன்களான தெருவோரக்கடைகளாக இருந்தாலும் சரி நாம் சுத்தமான உணவை உண்ணவே விரும்புகின்றோம். நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்பவர…

July 7th, 2011 on 10:16 pm
அட இன்று மூக்கு முட்ட சாப்பிட்ட பிறகு தான் இதைப் பார்க்கக் கிடைத்தது..
சுவார்சய்மான இதே போன்ற சாப்பாட்டுக் கடைக் கதைகள் நிறையவே இருக்கின்றன..
நூடுல்ஸுக்குள் நாக்கிளிப் புழு இருந்த கடையும் கேள்விப்பட்டேன்..
எங்கள் மது இசம் மதுவிடம் கேட்டால் இடியப்பம் -சொதிக் கதை சொல்வார்
July 7th, 2011 on 10:40 pm
மூக்கு முட்டச் சாப்பிட்டது நீங்கள். மூக்க்கையும் தாண்டி, கண், காது நெற்றி எல்லாம் முட்டச் சாப்பிட்டது யார் என்று தெரியும் தானே!