செவ்வானச் சிதறல்கள்…

அனுராதபுரத்தின் தமிழ் எச்சங்கள்

by on Jan.11, 2011, under அனுபவங்கள், பதிவுலகம்

நீண்ட நாட்களாக எழுத நினைத்து இருந்த ஒரு விடயம் இது. கடந்த வருடம் தீபாவளிக்கு முதல் நாள், எனது உறவினர் ஒருவருடன் அனுராதபுரம் செல்ல நேர்ந்தது. அவர் பிறந்தது முதல் திருமணம் முடிக்கும் வரை, கிட்டத்தட்ட சுமார் 25 வருடங்களுக்கு மேல் அனுராதபுரத்திலேயே வாழ்ந்தவர். அது நாள் வரைக்கும் அனுராதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற கதையே எனக்கு தெரியாது. வேண்டுமென்றால் யாராவது ஓரிரு குடும்பகங்கள் தொழில் நிமிர்த்தமாக அங்கு வாழ்ந்திருக்கலாம் என்றே எண்ணியிருந்தேன்.

ஆனால் அங்கே எனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதல் அதிர்ச்சி, அங்கே இருந்த இரு இந்து ஆலயங்கள். ஒன்று முருகன் ஆலயம். இன்னொன்று பிள்ளையார் கோவில். முருகன், பிள்ளையார் போன்ற இந்துக் கடவுள்களை அனுராதபுரத்தில் செறிந்து வாழும் சிங்கள் மக்களும் வணங்குவது பொதுவான ஒன்று எண்டு வைத்துக்கொண்டாலும், அதை விட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருந்தது. அங்கே பெரிய தமிழ் பாடசாலை ஒன்றும் உள்ளது. விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயம் என்பது இதன் பெயர். அது மட்டுமல்லாமல், விவேகானந்த சொசைட்டி போன்ற பல நிறுவனங்களும் இருந்துள்ளன; இருக்கின்றன.

1950 களின் இறுதிக்கால கட்டத்தில் இருந்து விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களே கல்வி கற்று வந்துள்ளனர். இந்த பாடசாலை அனுராதபுர நகரின் மையப்பகுதியில் இருந்து வெறும் 1கிலோ மீற்றர் சுற்றுவட்டத்துக்குள்ளேயே இருக்கிறது. 1970களின் இறுதிக் காலப்பகுதியில் நடைபெற்ற இனக்கலவரங்களால், இங்கு வாழ்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் அன்றைய காலகட்டத்திலேயே வெளியேறிவிட்டனர்.  தற்போதும் இந்த பாடசாலை இங்கு செயற்படுகின்றது. ஆனால் தற்போது அதிகமாக முஸ்லிம் சமூகத்தவர்களே கல்வி கற்கின்றனர்.

இதைவிடக் கொடுமையான விடயம், அங்கு இருந்த ஆலயங்களில், கதிரேசன் கோவில் என அழைக்கப்படும் முருகன் ஆலயம் இந்த விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்துக்கே சொந்தமானதாம். ஆனால் 1985க்கும் பின்னர் இந்த ஆலயம் முற்றாக மூடப்பட்டிருந்ததாக அறியப்பெற்றேன்.  2000ம் ஆண்டுக்கு பின்னர், ஓய்வுபெற்ற ஒரு வான்படை உத்தியோகத்தரும், பிறப்பிலே தமிழ் சைவரும் மற்றும் சிறுவயதிலிருந்தே அவர் அனுராதபுரத்திலே வசித்து வந்த ஒருவரின் ஊக்கத்தினால் மீண்டும் இக்கோயில் திறக்கப்பட்டு, பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் ஆலயமும் இவராலேயே தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதை விட, இன்னும் நகருக்கு வெளியே ஓர் அம்மன் கோவில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் போக அவகாசம் கிடைக்கவில்லை. இது தவிர, நகருக்குள்ளே பல தமிழ்க்கடைகள் தமிழ்ப் பெயர்பலகையுடன் இருந்ததையும் நான் ஆச்சரியத்துடன் பார்க்கத் தவறவில்லை.

இவை அனைத்தும் வரலாறுகள். ஒரு புராதன நகரிலே, அதுவும் இந்த நாடு விடுதலை அடைந்த பின்னர், இங்கே ஒரு தமிழ் பள்ளிகூடம் அமைக்க வேண்டிய அளவுக்கு இங்கே தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். தற்போது நாம் கொழும்பில் வெள்ளவத்தையிலோ, கொட்டகெனாவிலோ அல்லது சொய்சா புரவிலோ வாழ்ந்து கொண்டிருப்பது போன்று சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்திருக்க சாத்தியங்கள் குறைவு. ஆகவே, தற்போது, வவுனியாவின் ஜோசப் காம்ப்க்கு அருகாமைசார்ந்த கற்குழியின் எல்லையுடனான பகுதியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசம் கண்டிபாக அனுராதபுரம் வரை ஓர் தொடர்பினை கொண்டிருந்திருக்க வேண்டும். இது தவிர, நான் அங்கு சிலருடன் கதைத்த வேளை, இப்போதும் பல தமிழ்க்குடிகள் அனுராதபுரத்திலிருந்து, மிகிந்தலை வரையான பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தமது அடையாழத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினார்கள். அது தவிர, நகருக்குள் இருந்த பல வீடுகளை காண்பித்து, இவை அந்த நாட்களில் தமிழ்ர்களுக்கு சொந்தமாக இருந்ததாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

நான் அதிகம் வரலாறு சார்ந்த புத்தகங்களை வாசிக்க தவறியதால் எனக்கு இவை தெரியாமல் போனதோ, அல்லது புத்தகங்களிலும் இவை இல்லையோ நான் அறியேன். ஆனால், இவை முடிந்த வரலாறுகளாக பார்க்க முடியாது. இது ஓர் தொடர்ச்சி. இடையே ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் இது சற்றே மந்த கதியில் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது மீண்டும் வரலாறு வளைக்கப்பட முயலப்படுகின்றது. என்ன செய்ய, எனது உணர்வுகள் பலகாலமாகவே விரல் நுனிக்கும், தட்டச்சு விசைகளுக்கும் இடையே தற்கொலையுறுகின்றன.

:, , , , , ,

9 Comments for this entry

  • வதீஸ்

    //அது நாள் வரைக்கும் அனுராதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற கதையே எனக்கு தெரியாது//

    யோவ் நீர் தரம்9,10,11 ல் சமூகக்கல்வி, வரலாறு பாடங்கள் படிக்கலையா…

  • nirujah

    படிச்சனான், ஆனா, மறந்து போச்சு.

  • கன்கொன் || Kangon

    சில தகவல்கள் எனக்குப் புதிது தோழர்.
    தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவ்வளவு அருகான காலத்தில் வாழ்ந்திருப்பார்கள் அடர்த்தியாக என்பது தெரியாது.

    தகவல்களுக்கு நன்றி தோழர்.

  • nirujah

    ஆமாம் தோழரே, எனக்கும் இவை புதுசு தான். எல்லாளனின் ஆட்சி, மாகனின் படையெடுப்பு மற்றும் அவ்வபோது நிகழ்ந்த சோழப் படையெடுப்புக்கள் போன்றன தமிழர்கள் வாழ்ந்ததற்கான காரணங்களாக அமைந்திருக்கலாம். ஆனால் 1950க்கு பின்னர் இப்படியான ஒரு சமூகம் இருப்பதென்பது நிட்சயமாக ஆச்சரியமான ஒன்றே…

  • ஜனகன்

    காலம் மாறினாலும் வரலாறுகள் மாறாது…

    என்ன செய்ய….அடுத்த தலைமுறை இதை ஏற்குமா தெரியவில்லை….விடுவார்களா??

  • parthy

    ஆச்சரியமான தகவல் தான்..
    இலங்கை அரசுக்கு இந்த தகவல் தெரியுமா??? :)

  • nirujah

    மன்னருக்கு நீ கோல் போட்டு சொல்ல வேண்டியது தானே….!

  • Jana

    தகவல்களுக்கு நன்றி. எனது பெரியதந்தையாரும் பிறந்தது அனுராதபுரத்தில்த்தான். என் பாட்டனார் தாங்கள் குறிப்பிட்ட அந்த பாடசாலையில் கல்வி கற்பித்தபோது.

  • atputhan

    Hi,
    read the book by prof Indira Bala.History of Tamils in ceylon.Its both in Tamil and english, you will learn a lot.
    http://aatputhan.blogspot.com/2007/02/blog-post_17.html

2 Trackbacks / Pingbacks for this entry

Leave a Reply

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

வந்தவர்கள்

free counters