செவ்வானச் சிதறல்கள்…

புரட்டிப் போட்ட தொலைபேசி அழைப்பு

by on Oct.25, 2010, under அனுபவங்கள்

Accidentவாழ்க்கை எப்போதுமே இன்பமும் துன்பமும் கலந்தது தான். அதை நான் எப்போதுமே விந்தையாக நோக்கியதில்லை. இத்தனை வருடங்களில் பல ஏற்றங்களும் இறக்கங்களுமாகத்தான் எனது வாழ்க்கை இருந்தது. எத்தனை இறக்கங்கள் வந்த போதும் அவை என்னை பெரிதாக கலங்கவைத்திருக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை காலை நண்பர்களுடன், அதுவும் பதிவுலகத்திம் மூலம் அறியக்கிடைத்த சிலருடன் விளையாடிவிட்டு அலுவலகத்தில் சில ஆணிபிடுங்கும் வேலைகள் இருந்ததால், பேரூந்தில் அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தேன். வெள்ளவத்தையை தாண்டி பயணித்துக்கொண்டிருந்த வேளை வீட்டிலிருந்து அந்த தொலைபேசி அழைப்பு. எதிர்முனையில் அம்மா. குரலில் வழமையான கம்பீரம் இருக்கவில்லை.

“அப்பன், இப்பதான் தம்பி கதைச்சவன். ரொக்ஸிக்கு முன்னால ரோட்டை குறொஸ் பண்ணேக்க, ஒரு அக்சிடண்டாம்…..!”
….
….

“யார் உங்களுக்கு சொன்னது?”

“தம்பிதான் போன் பண்ணினவன்; பெரிசா ஒண்டும் இல்லையாம். இப்ப களுபோவில ஆஸ்பத்திரியில இருக்கிறானாம்…! நான் வெளிக்கிட்டு கொண்டு நிக்கிறன். நீ எங்க ஒபிசிலையோ…? உனக்கு வரஏலுமோ?”

“ம்…, நீங்கள் ஆஸ்பத்திரிக்கு போங்கோ.. நானும் வாறன்.”

அழைப்பு துண்டிக்கப்பட்டது. கண்டிப்பாக முடிக்கவேண்டிய வேலைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு, இடைவழியிலேயே பேரூந்திலிருந்து குதித்தேன். வீதியைக் கடக்கும் நேரத்தில், மனதில் பலவிடயங்கள் வந்து மறைந்தன. தம்பிக்கு பெரியாக என்ன, ‘பெயர் என்ன?’ என்று கேட்டால் கூட சொல்லும் அளவுக்கு சிங்களம் தெரியாது. வைத்தியசாலைக்கு கொண்டுசென்றிருக்கிறார்கள் என்றால் விடயம் கொஞ்சம் பெரிதாகத்தான் இருக்க வேண்டும். அம்மா பயந்துவிடுவார் என்பதற்காக தான் பெரிசா ஒண்டும் இல்லை எண்டு சொல்லியிருப்பான் ஆனால் என்ன நடந்திருக்குமோ என்று நினைக்க சற்றே மனம் பயந்தது.

Brotherதம்பி வீட்டில் கடைசி பிள்ளை. அனேகமான கடைசிப்பிள்ளைகளைப் போல் எப்போதும் அம்மாவின் சேலைக்குள்ளே வளர்ந்தவன் என்று சொன்னால் மிகையாகாது. சிறிதாய் ஒரு பொருளை எடுத்து தரச்சொன்னால் கூட நாலு கதை சொல்லாமல், அலுத்துக்கொள்ளாமல் எடுத்துத் தரமாட்டான். அந்த அளவுக்கு அவனுக்கு செல்லம்.

சரி என்ன நடந்ததோ தெரியாது எவ்வளவு வேகமாக வைத்தியசாலைக்கு செல்லமுடியுமோ அவ்வளவு வேகமாக செல்வோம் என நினைத்துக்கொண்டு ஒரு முச்சக்கரவண்டியை பிடிப்போம் என்றால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒன்றையும் காணவில்லை. எனது நண்பன் ஒருவனுடன் தொடர்புகொண்டேன். அவன் அதிகமாக வெள்ளவத்தை பகுதியில் தான் தனது காரில் ஏதாவது வேலையாக இருப்பவன். அவனும் ஏதோ அலுவலாக இருப்பதாக சொல்ல விசயம் இது தான் என்று சொல்லிவிட்டு, ஒரு முச்சக்கரவண்டி பிடித்து வைத்தியசாலைக்கு சென்றேன். அதற்குள் எனது நண்பன், வைத்தியரான தனது மனைவியுடனும், தம்பியின் நண்பர் ஒருவரும் வந்திருந்தனர்.

நான் என்ன நடந்தது என்று அறிய முற்பட, ஒரு சகோதர இனத்தவர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தனது தம்பி தான் காரை ஓட்டி வந்ததாகவும் ரொக்ஸிக்கு முன்னால் வீதி திருத்தப்பணிகள் நடப்பதால் மற்றை பக்க வீதியை இரண்டாக பிரித்து அதில் இரு பக்கமாகவும் வாகனங்கள் விடப்பட்டதாகவும், எனது தம்பி ஒரு பக்கத்தை பார்த்துக்கொண்டு வீதியைக் கடக்கும் போது மற்றைய பக்கத்தால் வந்த இவர்களது வாகனத்தில் தட்டுப்பட்டதாகவும், நடந்த விடயத்தையிட்டு தான் மிகவும் வருந்துவதாகவும் சொன்னார். அதற்குள் தம்பி உள்ளே இருந்து கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் காயங்களுடன் அடுத்த சிகிச்சைக்காக வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அவனை அந்த நிலையில் பார்க்க மனம் சற்றே கலங்கியது. ஒருவாறு நிலமையை உணர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டியதைப் பற்றி நினைக்கையில் அம்மாவும் வந்து சேர்ந்தார். அதற்குள் நண்பனின் மனைவி உள்ளே சென்று அனைத்து நிலவரங்களையும் அறிந்து வர நிலமை கட்டுக்குள் வந்தது.

x-கதிர் சோதனையில், எழும்பு முறிவுகள் எதுவும் இல்லை எனவும், ஆனால் தம்பி 10 நிமிடங்களுக்கு மேலாக சுயநினைவு அற்று இருந்ததால் தலையில் ஏதாவது பலமாக அடிபட்டிருக்கலாம் எனவும் அதற்கு C.T சோதனை செய்யவேண்டும் எனவும் சொன்னார்கள். அதை விட மற்றையவை எல்லாம் வெட்டுக்காயங்களும் வீதியில் விழுந்ததால் உண்டான உராய்ப்புக் காயங்களும் தான். பின்னர் C.T பரிசோதனைக்காக கொழும்பு வைத்திய சாலைக்கு தம்பியை மருத்துவ ஊர்தியில் கொண்டு சென்றார்கள்.

அங்கே தம்பிக்கு C.T பரிசோதனை செய்யப்பட்டு நரம்பியல் நிபுணர்களால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லப்பட்டு விட்டது. இருந்தாலும், அங்கு நான் கண்ட காட்சிகள், புத்தர் நோய்வாய்ப்பட்டோரை முதல் முதலில் பார்க்கும் போது எப்படிப்பட்ட ஒரு மனநிலையை அடைந்திருப்பார் என உணர்ந்துகொண்டேன். நான் சென்றதோ விபத்து அவசரசிகிச்சை பிரிவு. பார்க்கும் இடமெல்லாம் வெட்டுக்காயங்களும், அழுகைக்குரல்களும் முனகல் ஒலிகளும். இதுவே இப்படி இருக்கின்றதென்றால் இறுதிக்கட்டத்தில் வன்னிப்போர்க்களம் எப்படி இருந்திருக்கும்.

எப்படியோ, தம்பி சற்றே குணமடைந்து வீட்டுக்கும் வந்துவிட்டான். ஆனால் இன்னும், வைத்தியசாலைக் காட்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்தனைக்கும் நான் ஒன்றும் பிணங்களையோ, இரத்தத்தையோ கண்டு அஞ்சுபவன் அல்ல. சிறிய வயதில் வவுனியாவில் நான் வாழ்ந்ததே வைத்தியசாலை பிண அறைக்கு அருகாமையில் தான். சின்ன வயதில் குடியிருப்பில்(வைத்தியசாலைக்கு பின்சுற்றுவீதி பகுதி பிரதேசத்தின் பெயர்)  இருந்த காலத்தில் யாருக்கும் தெரியாமல், பிரேத பரிசோதனை செய்வதை எல்லாம் நான் நேரிலே பார்த்திருக்கின்றேன். இல்லையில்லை. இரசித்திருக்கின்றேன். பிரேதத்துக்கும், உயிருள்ள மனிதர்களின் துன்பத்துக்கும் நிறைய வேறுபாடுண்டுதான். ஆனாலும், கடந்த இரு தினங்களாக நான் கண்ட காட்சிகள் எல்லாம் வாழ்க்கையின் அர்த்தங்களை நிறம்பிரித்துக்காட்டுவது என்னவோ உண்மைதான்.


4 Comments for this entry

  • priyaa

    malz dont wory bro will be alright soon.if CT is clear just gv him enaf bed rest.
    and for the last paragraph of u made me to think of a incident in my life..
    during my second yr..we were trained to put our diagnose..
    there is a gret copetiton for the acurate diagnose always..
    and wen i draft a corect diag.i always feel proudy hapy and satisfied..
    one day among 23 students my diagnose was the corect one.i was damn happy and tld yes thats it!!! with hapiness.my friend was beside me he just tld me.just for one mint fix any of ur close ones fac instead of the patients one and thn try to tel YES THATS IT!!!!!!
    I WAS DEAD!!!!!!!!!

  • கன்கொன்

    தம்பி விரைவில் குணமடையட்டும்.

    // ஆனாலும், கடந்த இரு தினங்களாக நான் கண்ட காட்சிகள் எல்லாம் வாழ்க்கையின் அர்த்தங்களை நிறம்பிரித்துக்காட்டுவது என்னவோ உண்மைதான். //

    ஒவ்வொருவருக்கும் இப்படியான ஏதாவதொரு சம்பவங்கள் இப்படியான உணர்வுகளைக் கொண்டுவருவது தான். :-(

  • nirujah

    @கன்கொன்: நன்றி.
    //ஒவ்வொருவருக்கும் இப்படியான ஏதாவதொரு சம்பவங்கள் இப்படியான உணர்வுகளைக் கொண்டுவருவது தான்

    :)

  • mathistha

    அருமை சகொதரி.. இதைத் தான் வாழ்க்கை ஒரு (போ)பொதி மரம் என்று சொல்லி வைத்தார்களோ தெரியல…

1 Trackback or Pingback for this entry

  • Indli.com

    புரட்டிப் போட்ட தொலைபேசி அழைப்பு – செவ்வானச் சிதறல்கள்……

    அழைப்பு துண்டிக்கப்பட்டது. கண்டிப்பாக முடிக்கவேண்டிய வேலைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு, இடைவழியிலேயே பேரூந்திலிருந்து குதித்தேன். வீதியைக் கடக்கும் நேரத்தில், மனதில் பலவிடயங்கள் வந்து மறைந்தன. தம்பிக்கு பெரியாக என்ன, ‘பெயர் என்ன?…

Leave a Reply

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

வந்தவர்கள்

free counters