Archive for June, 2010
கறுப்பு வெள்ளை
by nirujah on Jun.12, 2010, under கவிதைகள்

ஏனோ தெரியவில்லை…
சிலகாலமாக தொடுவதில் எல்லாம்
வர்ணங்கள் வற்றிப்போகின்றன…
காலைச் சூரியன் கூட
கறுப்பு வெள்ளையாகவே
கடந்து மறைகின்றான்…!
தோட்டத்து பூக்களின்
தேனுக்கு பதில் வெறும்
பாலே வடிந்து தொலைக்கின்றது…!
வருடிச் செல்லும்
தென்றலின் நறுமணம்
தொலைத்து பலகாலம்…!
இப்போதெல்லாம் பகல்கள்
இரவாகின்றன;
இரவுகள் கனவாகின்றன…!
என்று முளைக்கும்
தேன்வீசும் ரோஜா…?
எப்படி நான் இரவிக்கு
வண்ணமடிப்பது…?
என் இரவுகள் தொலைத்து
தண்நிலா தேடுகின்றேன்…
கால்கள் தேய்ந்து ஓய்ந்தது
தான் மிச்சம்…
ஆனால்…
காற்றைப் பிடித்து
தண்மை சேர்த்து
காரியம் ஆற்றும்
வண்மை உண்டு…!
தேன்னிலா கொய்து
தோட்டத்தில் கட்டி
இருட்டைப் போக்கும்
இயலுமை உண்டு…!
எனக்கும் ஒருநாள்
காலம் வரும்…!
பொறுத்திரு கனவே
தொலைந்துவிடாதே…!
பூ + நதி + rude
by nirujah on Jun.09, 2010, under கிறிகட், விளையாட்டு
பூ -> குஷ்பு
பிறப்பிலே இஸ்லாமியரான எங்கட குஷ்பு அக்கா, முதல் முதலில் 1980ல் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ரஜனி, கமல், பிரபு, சத்தியராஜ், மம்முட்டி, மோகன்லால் என அனைத்து பிரபல சோடியாக நடிச்சவா. (கடைசிய விஜயிண்ட படத்திலயும் வந்தவா) ஒரு காலகட்டத்தில அவருக்கு கோயில் கட்டி கடவுளா கும்பிடுமளவுக்கு மக்களிட்ட இவருக்கு மதிப்பும் வரவேற்பும் இருந்திச்சு. அந்த கோயில் கூட பாதிகட்டின படி வச்சிருந்தவ கனகாலமாய். சின்னத்தம்பி படத்தில இவா எடுத்து நடிச்ச பாத்திரத்துக்காக பிறகு குஷ்புவுக்கு தமிழ்நாட்டு பொம்பிளைகள் கனபேரிட்டையும் நல்ல வரவேற்பு கிடைச்சுது.
இதற்கிடையில ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில எண்டு நினைக்கிறன், பெண்கள் கலியாணத்துக்கு முதல் பாதுகாப்ப உடலுறவு கொள்வதில எந்த தவறும் இல்லை எண்டு சொன்னா. அவ்வளவு தான் தமிழ் நாட்டு சனம் முழுக்க அவாவுக்கு எதிரா நிறைய கதைச்சினம். சும்மா தண்ணி எடுக்கிற இடத்திலயோ, ரேசன் கடையிலையோ கதைச்சுட்டு விட்டிருந்தா பரவாயில்லை தமிழ் நாடு முழுக்க கிட்டத்தட்ட 20 வழக்கு குஷ்புக்கு போட்டுச்சினம். இப்ப கிட்டடியில தான் இந்திய உயர்நீதிமன்றத்தில குஷ்பு உந்த எல்லா வழக்குகளையும் தள்ளுபடிசெய்யச் சொல்லி போட்ட வழக்கை எழுத்து நடத்தினவை.
என்ன இருந்தாலும் குஷ்புவுக்கு இருந்த அந்த பிரபலம் மட்டும் குறையேல்ல. ஏன் இன்னும் சொல்லப் போனா, இவா செஞ்ச ஜாக்போட் நிகழ்ச்சி எண்டாலும் சரி, கல்கி போன்ற தொடர்களாக இருந்தாலும் சரி இவாவுக்கு சனத்திட்ட இருந்த வரவேற்பால கிடைச்ச வெற்றி தான். அவா ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உடுத்துக்கொண்டு வாற புடவையையும் (கதவு வச்ச) இரவுக்கையையும் பாக்கிறதுக்காக ஒரு கூட்டம் ஜாக்போட் பாத்தவை தான். அது வேற கதை. பிறகு அவா தி.மு.க வில போய் சேர ஜெயா தொலைக்காட்சி அவாவை ஒரேயடியா நிகழ்ச்சியில இருந்து தூக்கீட்னம். கெதியா, கலைஞர் தொலைக்காட்சியில புதிசா ஒரு நிகழ்ச்சியோட வந்தாலும் வரலாம்.
ஆனா இப்ப என்ன கதைக்கினம் எண்டா, அவா தி.மு.க தயவோட திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நிக்கப்போறாவாம். சரி எப்பிடியோ நல்லா இருந்தா சரி; நாங்கள் அடுத்த விசயத்துக்கு போவம்.
நதி -> நதியா
அந்தக்காலத்தில நதியா படத்தில நடிக்கேக்கையே, நதியா ஸ்டைல் எண்டு நதியா செருப்பு, நதியா கிளிப், நதியா கொண்டை அது இது எண்டு நதியாவால பாதிக்கப்பட்ட ஆக்கள் நிறைய. பிறகு அவா கலியாணம் கட்டி அமெரிக்காவில இருந்திட்டா. திரும்ப சில வருசத்துக்கு முதல் வந்து திரும்ப முதல் படம் நடிக்கேக்க ( எம்.குமரன்) அப்ப பாத்த மாதிரியே இப்பவும் இருக்கிறா எண்டு அவாவிண்டை அழகை வர்ணிக்காதோர் இல்லை. இப்ப என்ன விசயம் எண்டா, ஜெயா தொலைக்காட்சி மறுபடியும் ஜாக்போட் நடத்திறதுக்கு ஒரு ஆளைத் தேடி, கடைசியா போய்க் கேட்ட இடம் இந்த என்றும் வற்ற நதி தானாம். சாரி நதியா தான். அவாவும் ஓமெண்டுடாவாம். இப்ப என்ன கவலை எண்டா, முந்தி யெண்டாலும் பரவாயில்லை, விதம் விதமா இரவுக்கை தான் போட்டு கொண்டு வந்தவா குஷ்பு. இவா இனி என்ன எல்லாம் போடப்போறாவோ. இன்னும் எத்தின ஸ்டைல்களை உருவாக்க போறாவோ. குடும்பத்தலைவர்களே… உசார்… உசார்…
rude -> Rude Koertzen
கிரிக்கட் பாக்கிற யாருமே இந்தால மறக்க மாட்டினம். ஒரு கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு, தலையில ஒரு வட்ட தொப்பி போட்டுக்கொண்டு, சிலோ மோஷன்ல இந்தால் எப்ப ஒற்றை விரல்லை தூக்கி காட்டும் எண்டு தெரியாது. ஆனா நடுவர்களிலையே இந்தால் இரு சிங்கம் தான். இவர் ஆட்டமிழந்ததை காட்டும் விதமே சொல்லும், நீ காலால விக்கட்டை மறச்சிட்ட கெதியா வெளிய போ…, இந்த போட்டியில் இனி நீ விளையாட ஏலாது எண்டு. அப்பிடி தனக்கு எண்டு ஒரு தனி முறையை வைச்சிருந்தவர்.

இப்ப சிங்கத்துக்கு 61, வயசு; 106 டெஸ்ட் போட்டியிலயும், 200 க்கு மேற்பட்ட ஒருநாள் சர்வதேச போட்டிகளிலையும் நடுவராய் இருந்தவர். 1992 மார்கழி 9ம் திகதி இந்தியாவுக்கும் தென்னாபிரிக்கவூகும் போர்ட் எலிசபத்தில நடந்த போட்டி தான் இவர் நடுவரா போன முதல் போட்டி. பிறகு, அந்த கிழமையே டெஸ்ட் போட்டியிலையும் நடுவரா போனவர் இந்த மனிசன். ஆனா இந்தால் தொப்பியை களட்டிடா இந்தாளை அடையாலம் கண்டுபிடிக்கிறது பயங்கர கஷ்டம்.
இப்ப என்ன விசயம் எண்டா, இவர் இண்டைக்கு இலங்கை சிம்பாவே விளையாடின இறுதிப் போட்டி தான் இவருக்கு கடைசி ஒருநாள் சர்வதேச போட்டி. அடுத்து பாக்கிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் நடக்கிற டெஸ்ட் போட்டி தான் இவருக்கு கடைசி போட்டி.
என்னைப் பொறுத்தவரை, மனிசன் ஒரளவுக்கு நல்லா தான் நடுவர் வேலை செஞ்சது. எங்கட அசோக டீ சில்வா போல இல்லாமல், ஓரளவுக்காவது சரியா தீர்ப்பு சொல்லியிருக்கு. இண்டைக்கு நேர்முக வர்ணனையில சொன்ன மாதிரி, இனியாவது போய் மீன் பிடிக்கட்டும்; கோல்ப் விளையாடட்டும். மனிசன் கிட்டத்தட்ட 20 வருசம் மைதானத்தில நிண்டே வெறுத்திருக்கும்.
வாழ்த்துக்கள் தலைவரே…
by nirujah on Jun.05, 2010, under பதிவுலகம்
1990வது தசாப்த்ததின் இறுதி வருடங்கள். அப்போது நான் வவுனியாவில் பதின்ம வயதை எட்டியிருந்த பருவம். அதுவரைக்கும் இலங்கை வானொலியில் ஓரேமாதிரியானதாகவே இருந்த நிகழ்ச்சிகளை மாத்திரமே கேட்டுக் கேட்டு சலிப்புற்றிருந்த நேரம். சக்தி, சூரியன் போன்ற தனியார் வானொலிகளின் வருகையால் இலங்கையில் தமிழ் வானொலிப் படைப்புகள் சற்றே இளமை பாய்ச்சப்பட்டன. அதுவும் வவுனியாவில் 105.1ல் சக்தி மாத்திரமே வரும். அதுவும் இரண்டு மர உயரத்துக்கு வானொலி வாங்கிகளை ஏற்றிக்கட்டி அதன் மூலம் சற்றே இரச்சலுடன் கூடியதாகவே ஆரம்ப காலகட்டம் இருந்தது. வீட்டிலே தேனீர் கடைபோல் எப்போதும் வானொலி பாடியவாறே இருப்பதால் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரளவுக்கு என் காதில் விழும்.
அப்போது தான் வணக்கம் தாயகத்தில் ஓர் கணீர் குரலுடன் ஓர் அறிவிப்பாளர் எனக்கு அறிமுகமானார். இதற்கு முன்னர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலே என்னை அதிகம் கவர்ந்திருந்தது. அடுத்த படியாக திரு அப்துல் ஹமீது அவர்களின் குரலும் அவரது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பையும் அதிகம் வியந்து இரசித்ததுண்டு.
ஆம் சக்தி வானொலியின் வணக்கம் தாயகம், ஆனந்த இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேயர்களின் கருத்து மடல்களை வாசிக்கும் நிகழ்ச்சியிலும் அவ்வப்போது நான் லோஷன் அண்ணாவின் குரலுக்கும் அவரது திறமைக்கும் அடிமையானேன். நான் மட்டுமல்ல, என்னைபோல் பலர்; ஏன் என் நண்பர்கள் பலரே லோஷன் அண்ணாவின் நிகழ்ச்சிக்கு அடிமைகள். இரண்டாயிரமாம் ஆண்டுவரை எப்பொழுதெல்லாம் லோஷன் அண்ணா நிகழ்ச்சி செய்வாரோ அப்போதெல்லாம் அதற்காகவே நேரம் ஒதுக்கி வீட்டில் அடைப்பட்டு இருந்த காலங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன.
பின்னர் நான் மேற்படிப்புக்காக இந்தியா சென்ற பின் எனக்கு அவருடைய நிகழ்ச்சிகளை கேட்கும் சந்தர்ப்பம் இல்லாமலே போயின. இருந்தும் சக்தி வானொலி இணையத்தில் ஒலிபரப்ப ஆரம்பித்த பின்னர் கூட நான் அந்தக் காலத்து வேகம் குறைந்த இணைய இணைப்பின் மூலம் சக்தி வானொலி கேட்க முயல்வதுண்டு. ஆனால் லோஷன் அண்ணா செய்யும் நிகழ்ச்சிகளை ஒரு போதும் கேட்க சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. அந்த நேரம் அவர் சக்தியில் இருந்தாரோ என்றே எனக்கு தெரியாது. இந்தியாவில் நான் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்ட வேளை, (அங்கும் அரச வானொலி மட்டும் தான் அப்போது திருச்சியில் இருந்தது) நான் இலங்கையில் இருந்த வேளை இரசித்த அந்த சுவாரசியம், ஒரு கவர்ச்சி, இலாவகத்தன்மை… எப்படிச் சொல்வது அந்த உணர்வை… எனக்கு தெரிந்த தமிழ் வார்த்தை ஒன்றும் இப்போது வருவதாய் இல்லை….! அது எதுவுமே இல்லாமல் தான் இருந்தது.
மீண்டும் இலங்கை வந்த போது 2004 நான்கில் முதல் முதலாக நான் கேட்ட வானொலி நிகழ்ச்சி சூரியனில் லோஷன் அண்ணா செய்த நிகழ்ச்சி தான். மீண்டும் பலவருடங்களுக்கு பிறகு அவரின் குரலைக் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி. அந்த சந்தோசத்துக்கு அளவே கிடையாது. பின்னர் விமல் அண்ணாவுடன் சேர்ந்து இவர் செய்த அட்டகாசம் நிகழ்ச்சி ( அட்டகாசம் படம் வந்த பிறகு தான் அந்த நிகழ்ச்சி சூரியனில் ஆரம்பித்தது என நினைக்கின்றேன்) என எப்போதும் அவருரைய வானொலித்தொகுப்புக்களை கேட்க தவறுவதே இல்லை.

- No comments
அவருக்கு என்னை நினைவிருக்கோ தெரியாது… ஆனால் 2005ல் என்று நினைக்கின்றேன், அவரை அவரின் வீட்டிலேயே சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று எனக்கு கிடைத்தது. அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒருவர் எனது உறவினர் ஒருவரின் நண்பர் என்ற முறையில் அங்கு சென்றிருக்கும் போது ஒரு முறை சந்தித்தேன்.
வானொலியில் எவ்வாறு நிகழ்ச்சி செய்வது, எவ்வாறு ஒலிபரப்புவது போன்ற விடயங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாளாகவே இருந்தது. அதை நான் அன்று அவரிடம் “வந்தா சூரியனைச் சுற்றிக்காட்டிவீங்களா?” என்று கேட்க… அவரும் சிரித்துக்கொண்டே இப்போது ஒருவரையும் நாம் பார்க்க அனுமதிப்பதில்லை என்றும் இருந்தாலும் எனக்கு சனிக்கிழமை தொலைபேசச்சொல்லியும் சொன்னார். அதன் பின் எனக்கும் நேரம் வரவில்லை. அது அப்படியே களிந்து விட்டது. அதன் பின்னரும் ஒரு முறை கொன்கோட்டில் ஒரு திருமண விழாவிலும் பல சமயங்கள் கம்பன் விழாவிலும் சந்தித்து பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த கல்யாண வீட்டிலும் அவரிடம் நான் கேட்ட கேள்வி…, சூரியனைச் சுத்திக்காட்டுவீங்களா என்பது தான்
அவரின் பதிலும் அதே பழைய பதில் தான். என்னால் அடுத்த சனிக்கிழமையும் போக முடியவில்லை
பிறகு ஒரு முறை சூரியன் அலுவலகத்திலேயே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எமது கல்லூரி நிகழ்வு ஒன்றுக்கு ஊடக அனுசரணை ஒன்றுக்காககவும் இன்னும் சில விளம்பர அலுவலுவல்களுக்காகவும். நாம் எமது நிகழ்ச்சிக்கு முதல் நாள் சென்ற படியால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அப்போது தான் காலை நிகழ்ச்சி முடித்துவிட்டு வந்தவர் என்ற ஒரு களைப்போ, சலிப்போ இல்லாமல் எமக்கு, ஒரு ஊடக அனுசரணை பெறுவது என்றால் என்ன செய்ய வேணும் எண்டு ஒரு விளக்கமே குடுத்தார். இது தான் சமயம், எப்படியாவது இவருடைய கைத்தொலைபேசி எண்ணை வாங்கிவிட வேணும் என்று நினைத்து கேட்டேன். எவ்வளவு பெரிய ஆள்; குடுப்பாரோ குடுக்க மாட்டாரோ என்று ஒரு பயம் வேற; சகோதர மொழி நண்பர்கள் கூட என்னுடன் வந்திருந்தார்கள். அதனால் கொஞ்சம் மெதுவாகவே கேட்டேன். அவரும் சாதாரணமாகவே எனக்கு அவரது கைப்பேசி எண்ணைத் தந்தார். அந்த சந்திப்பு அவர் மேல் வைத்திருந்த மரியாதையை இன்னும் பலமடங்கு உயர்த்தியது.
இவை எல்லாவற்றுக்கும் பின்னர் சூரியன் நிண்டது. பின்னர் வெற்றி ஆரம்பித்தது… அதிலையும் விடியல் கேக்கிறது என்று நான் அவரைத் தொடர்ந்து கொண்டே இருந்தேன். 3 முறை விடியலில குறுஞ்செய்தி அனுப்பி பிட்சா சான்றுச்சீட்டும் கிடைத்தது. என்ன பிட்சா தான் சாப்பிட முடியல. அதுக்கு முதல் இங்க வந்திட்டன். அதற்கிடையில் பதிவுலகத்திலயும் அவருடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. எனக்கு முதலாவது பதிவர் சந்திப்பைப் பற்றி அவர் தான் தெரியப்படுத்தி இருந்தார்.

- ஒரு வேளை கலைஞரிட்ட வாங்கியிருப்பாரோ, கண்ணாடியை சொன்னன்
இப்படி அவரைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒரு மனிதர், சாகித்ய விருது பெற்ற ஒரு கலைஞன், எந்த ஒரு உயர்வு தாழ்வும் பாராமல் சாதாரணமான என்னுடனும் பழகியவர் என்பதை நான் இங்கே பதிவதன் மூலம் அவரது பெருந்தன்மையை கூற விளைகின்றேன். அவ்வளவு தான்.
இந்த நன்நாளில், அவரை பல்லாண்டு வாழ வாழ்த்துவதோடு, அவருடைய ஊடகத்துறைப் பயணம் சாதனை மிகுந்ததாக அமைய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா.
இசை(யின்) அரசனை எல்லோரும் மறந்துவிட்டார்களா…!
by nirujah on Jun.02, 2010, under பதிவுலகம்
இராமசாமி டானியல் இராசையா என்ற இயற்பெயரைக் கொண்ட இளையராஜா….! தமிழ் சினிமாவில் இவர் அதிகம் பேசப்பட்டாலும் தமிழ் இசையுலகம் தவமிருந்து பெற்ற பிள்ளை. 1943 ஆனி 2ம் திகதி தேனி மாவட்டத்திலே பிறந்த இவரின் கலைப்பயணம் வியப்புக்குரியது.
தனது பதின்நான்காவது வயதில் பாவலர் வரதராஜனின் இசைக்குழுவிலே சேர்ந்து, தென்னிந்தியா முழுவதும் இசைக்கச்சேரிகள் செய்வதிலேயே பொழுதைக் களித்தார். பின்னர் 70 களில் சென்னைக்கு சென்று அங்கும் ஓர் இசைக்குழுவில் பகுதி நேரமாக வேலை செய்த போதே, சித்தார், ஆர்மோனியம் போன்றவாத்தியங்களை திரைஇசைப்பாடல்களில் வாசித்து வந்தார்.
இவர் ஆரம்ப காலத்தில் Silil Chowdhury, G.K Venkadesh போன்றவர்களின் கீழ் இசைக்கருவிகளை மீட்டுவதில் வல்லவார இருந்தார். இந்த காலகட்டத்தில் தான் இவருக்கு 1976இல் “அன்னக்கிளி” படத்துக்காக பஞ்சு அருநாச்சலத்தினால் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். தனது நாற்பது வருடத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பயணத்தில் சுமார் ஆயிரம் படங்களுக்கு மேலாகவும் குறைந்தது ஐயாயிரம் பாடல்களுக்கு மேலாகவும் தமிழ், மலையாளம், கன்னடம், தெழுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் இவர் இசையமைத்துள்ளார்.
இளையராஜாவைப் பற்றிச் சொல்லும் போது இன்னும் எத்தனையோ விடயங்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அவருக்கு சித்தாரின் மேல் இருந்த ஆர்வம் சிறப்பாக சொல்லப்படவேண்டியது. இவர் இலண்டன் ரிடினி இசைக் கல்லூரியில் சித்தார் இசைக்கருவியில் டிப்ளோமா படிப்பை முடித்தவர் மட்டும் அல்லாது அதில் தங்கப்பதக்கமும் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர்.
நான் இந்த பதிவினை எழுத ஆரம்பித்த நேரம் இலங்கை இந்திய நேரப்படி அந்தி சாய்ந்து பொழுது மறைந்து கொண்டிருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் இவ்வளவு நேரமும் எம் பதிவர் யாருமே இசைஞானியின் பிறந்த நாளைப்பற்றி ஒரு பதிவையும் எழுதவில்லை. ஏன் தமிழிஷ் இல் கூட ஒரே ஒரு பதிவு தான் இசைஞானியைப் பற்றி இருந்தது. இலங்கையைச் சேர்ந்த மூத்த பதிவர்கள், மொக்கைப் பதிவர்கள், சீரியஸ் பதிவர்கள் என்று யாருமே எழுதவில்லை. நேற்று குழுமத்தில் நடந்த கும்மியால் ( சீரியஸ் ஆனவிசயம் தான் ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அது கும்மியானதான நான் உணருகின்றேன்) எல்லாரும் சேர்வடைது விட்டார்களோ என்று தான் எண்ணத் தோன்றியது. சரி நாங்களாவது எழுதுவமே என்று ஒரு முயற்சியில் வருவது தான் இந்த பதிவு. இதற்கும் முன்னர் இப்பிடி எழுதிப் பழக்கமில்லை. தப்பா இருந்தா மன்னிச்சுக் கொள்ளுங்கோ…
இசைஞானியின் பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடிய திரையுலகமே இன்று அவரைக் கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டது என்று நினைக்கும் போது தான் சற்று வருத்தமாக இருக்கின்றது. எப்போதும் பிறந்தநாள் அன்று அமைதியாக களிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை செல்லும் இசைஞானி, இம்முறை அவரின் பிள்ளைகளின் விருப்பத்துக்கேற்ப சென்னையில் ஒரு நட்ச்சத்திர விடுதியில் மதிய உணவு விருந்துடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினாராம்.
இந்த நன்னாளில் அவரது புகழ் மேன்மேலும் ஓங்கவும், அவரது இசைப்பயணம் மேலும் பல சாதனைகளை தமிழ் இசைக்கும், தமிழுக்கும் படைக்கவும் வாழ்த்துகின்றேன்.

