செவ்வானச் சிதறல்கள்…

Archive for February, 2010

தமிழ் மாணவர்களும் வெளிநாட்டு கனவும்….!

by on Feb.15, 2010, under பதிவுலகம்

எம்மவர் வீடுகளில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தால் ஊரில் உள்ளவர்களின் கதையை கேட்டு சகிக்காது. அதுவும் பிள்ளை ஐக்கிய இராட்ச்சியத்தில் என்றால் சொல்லவும் தேவை இல்லை.

“உங்களுக்கின்ன நீங்கள் வெளிநாட்டுக்காறர்” என்பவர்களும், “நீங்கள் ஹலோ என்றால் உங்களுக்கு கிலோ கணக்கில் வரும்” என்பவர்களும் தான் அதிகம்..

முன்பு ஒரு காலத்தில் இது உண்மையாக இருந்திருக்கலாம்; ஆனால் தற்போதைய யதார்த்தமோ முற்றிலும் வேறுபட்டது. இந்த யதார்த்தம் விளங்காத பலர் மற்றோரின் தூண்டுதலாலும் வெளிநாடு என்கின்ற ஒரு மாயத்தின் அவாவினாலும் தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப முயல்கின்றார்கள். நாட்டில் காணப்படும் பாதுகாப்பு இன்மை ஒரு காரணமாக கருதப்பட்டாலும், இவர்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதோ மிகவும் அதிகமானது.

Goden Brown ( அவர்தாங்க நம்ம ஐக்கிய இராச்சிய பிரதமர்) புதிய பொருளாதார மேப்பாட்டுக் கொள்கையின் கீழ் T4 எனும் விசா முறை மூலம் ஐ.இ க்குள் திறந்து விடப்பட்டிருக்கும் மாணவர் கூட்டத்தோடு எம்மவரும் தமது கனவுலகை நோக்கி பயணிக்கின்றார்கள்.

IELTS முதல் அனைத்து கல்வித்தகமைகளையும் ஒரு மாத அதி கடுகதி வகுப்புகளில் பெற்றுத்தருவதாக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒரு தொகை பணத்தை அள்ளி இறைக்கின்றார்கள். பின்னர் விசாவுக்காக வங்கி கணக்கில் காட்டுவதற்கு பணம் இல்லாத போது அதற்காகவும் இடைத்தரகர்களுக்கு ஒரு தொகைப்பணம். வங்கிக்கணக்கில் ஒரு மாதம் இருபது இலட்சம் இருப்பதாக காட்டுவதற்கு ஒருவரிடம் 1.5 முதல் 2 இலட்சங்கள் வரை வாங்குகின்றார்கள். இதற்கு பல பிரபல வங்கி மேலாளர்களும் உடந்தை. என்ன ஒரு பகற்கொள்ளை…!

இப்படி அப்படி என்று எல்லாம் முடிந்து ஒரு தொகைப்பணம் செலவழித்து விசாவும் பெற்றுவிட்டால் அது ஒரு தனிச் சந்தோசம் தான். இருந்தாலும், இதற்குப்பின் இருக்கின்ற பல ஆபத்துக்கள் எமக்கு தெரியாது. விமான நிலையத்துக்கு  சென்று விமானத்தில் ஏறும் வரை யாரும் கனவு காணாதீர்கள். நீங்கள் தமிழ்ர் என்ற ஒரே காரணத்துக்காகவே இலங்கை உளவுப்படையினரால் நீங்கள் எந்நேரமும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

அங்கு அவர்கள் கேட்கின்ற கேள்விகளே ஐரேப்பாவில் எம்மை அப்படி மாற்றமடையச் செய்கின்றதோ என்னவோ? இங்கே எல்லாவற்றையும் முடித்து விட்டோம்; இனி அங்கு மட்டும் தான். அதையும் விரைவில் முடித்துவிடுவோம் என்பார்கள். இனி யாரும் வாலாட்ட முடியாது என்பார்கள். அங்கு சென்று அந்தத்தமிழ் இந்தத்தமிழ் என்று கொண்டாடக் கூடாது என்பார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் நாம் இப்போது தெற்காசியாவிலேயே மிக்ச்சிறந்த உளவுப்படை என்பார்கள். இன்னும் எத்தனையோ எத்தனையோ…, வார்த்தைகளில் வடிக்க முடிந்தது இவ்வளவு தான். இத்தனைக்கும் நாம் எமது சிரிப்பை அடக்கிக்கொண்டு, உணர்வை அடக்கிக்க் கொண்டு, சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு நிற்க வேண்டும். இதில் அவர்களுக்கு சந்தேக்கம் ஏதும் வரக்கூடாது. வந்தால் உங்கள் கனவுக்கோட்டை மணற்கோட்டை ஆகவேண்டியது தான்.

இதையெல்லாம் தாண்டி வெளிநாட்டில் காத்திருக்கின்றது பேரதிர்ச்சி. படிப்புக்காக என்று வெளிக்கிட்டு உழைப்புக்காக சென்ற எம்மவர்களை ஐரோப்பாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மிகவும் இறுக்கமாகவே பற்றிக்கொள்கின்றது. எப்படியாவது உழைத்து பெற்றோரின் கனவை நனவாக்க விளைவோர் ஒரு புறம், கேளிக்கை கும்மாளதுக்காகவே வருவோர் மறுபுறம், வந்தவுடன் ஒரு வேலை எடுக்கலாம்; எப்படியாவது வந்த கடனை கட்டிவிடலாம் என்று கடைகடையாக ஏறி இறங்கும் இளைஞ்ர்கள் ஒருபுறம் என பல தரப்பட்டோராக எம்மவர்கள் மாற்றம் பெறுகின்றார்கள். இதில் நெருங்கிய உறவினர் யாரோ ஐ.இ இல் இருக்க அவரை நம்பி வந்தவர்கள் ஒரு வழியாக தப்பித்து விடுகின்றார்கள். மற்றவர்களின் நிலையோ பரிதாபமாகின்றது. வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் வேலை இல்லாமல் அல்லற்படும் பலர் இருக்கின்றார்கள். இவர்கள் தமது உறவினர்களையோ அல்லது இலங்கையில் இருக்கும் தமது பெற்றோரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் உச்சக்கட்டமாக, இலங்கையில் சிறந்த மென்பொருள் நிறுவனத்தில் நல்ல ஊதியத்துடன் வேலைசெய்த பலர் கூட இங்கே வேலை இல்லாமலோ, பாதி ஊதியம் கூட இல்லாத வேலை செய்பவர்களாகவோ இருக்க்கின்றார்கள்.

வேலை விடயம் இப்படி என்றால் கல்வி விடயமோ இன்னும் தலை கீழ். பல்கலைக்கழகத்துகுக் என்று நேரடியாக வந்தவர்கள் பரவாயில்லை; ஆனால் இலங்கையில் உள்ள முகவர்கள் மூலம் இங்குள்ள கல்லூரிகளுக்கு(colleges) வருபவர்களின் நிலைதான் அந்தோ பரிதாபம்! சில மாடிகளை உடைய ஒற்றைக்கட்டடங்களாகவே காணப்படும் பல கல்லூரிகள் கொழும்பின் பிரபல கல்லூரிகளை விட தரங்குறைந்தே காணப்படுகின்றது. கல்வித்தரமும் சரி, ஏனைய உபகரண வசதிகளும் சரி, அனைத்தும் வியாபாரமாகவே பார்க்கப்ப்டுகின்றது.

எனவே, என்னருமை தமிழ் சமூகமே…, கனவு காணுங்கள். ஆனால் உங்கள் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக நிதானமாக ஆழ்ந்து யோசித்து எடுத்து வையுங்கள். வெளிநாட்டு வாழ்க்கை வெறும் விளையாட்டாக எண்ணி உங்களை நீங்களே ஊனமாக்கி விடாதீர்கள்

5 Comments more...

நீ…. நான்…. அது….!

by on Feb.13, 2010, under கவிதைகள்

நீ நினைத்திருக்கலாம்
நான்
அதுபற்றி கதைக்காமலே
இருந்திருக்கலாம் என்று…!

ஒரு வகையில் நீ
நினைப்பது சரியாகப்
பட்டாலும்…!

ஒருவகையில் நான்
பேசியதும் சரியாகத்தான்
படுகின்றது….!

ஒருவகையில் அது
விழிச் சந்திப்புகளில்
வெளிப்பட்டிருக்கலாம்…!

அது புனிதமானது
புனிதத்தின் நிழலைக்கூட
தீண்டும் தகுதி எனக்கில்லை

நீ….
இத்துணை ஆண்டுகளில்
நான் கண்டெடுத்த அழகு
பொக்கிசம்…!

நானாக நினைத்தாலும்
உன்னை இழக்கும்
சக்தி…
எனக்கில்லை…!

இருந்தாலும்…
விளக்கைக் காதலித்து
அதன்நூடே மரணிக்கும்
ஈசல் வாழ்க்கை
என்னுடையது….!

கடலைப் பார்த்திருப்பய்…!
எத்துணை முயன்றாலும்
கரைகடக்க முடிவதில்லை அதனால்

அலை கரை கடக்கும்
வரையுமே
அதனை இரசிக்க
ஒண்ணும்…

கரைகடந்த
அலை – ஆழிப்பேரலை
நீயும் நானும்
சுற்றமும் சேர்ந்து
காணாமல் போய்விடுவோம்.

சிறு தென்றலாய்….
மர ஸ்பரிசங்களை
வருடிச்செல்லத்தான்
உரிமை உண்டு
எனக்கு – அதன் கனிகளை
திருடிச்செல்ல அல்ல…!

ஆக…,
நாளை மரணிக்கும்
ஈசல் எங்கே…?
நாளும் ஒளிதரும்
வெண்ணிலா
நீ எங்கே..?

நீயும் நானும் அதுவும்
சுற்றிக்கொண்டிருப்போம்
அது…
அதுவாகவே இருக்கும்
நீயும் நானும் தான்
மாற வேண்டும்…!!!
மாறுதல் மாற்றமாக
மட்டுமல்ல
புரட்சியாகவும்
இருக்கலாம்….!

Leave a Comment more...


வந்தவர்கள்

free counters