செவ்வானச் சிதறல்கள்…

Archive for November, 2009

எனைப்பெற்ற பெற்றோரே…, வளர்த்து விட்ட தாய்த் தமிழே…, போதைனை புரிந்த தாய்மண்ணே… சமர்ப்பணம்…!

by on Nov.25, 2009, under பதிவுலகம்

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் பல மைல் கற்களைக்கொண்டது. பல திருப்பு முனைகளைக்கொண்டது. இது ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப, தகுதிக்கு ஏற்ப மாறுபடக்கூடியது. அப்படித்தான் என்னுடைய வாழ்க்கையும்….! நான் எதிர்பார்த்து பயனித்த வாழ்க்கை வேறு. ஆனால் திடீர் திருப்பங்களாலும் திடீர் விபத்துக்களாலும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கை வேறு.

நான் நினைத்த படி என்னது வாழ்க்கை அமைந்திருந்தால் நான் தற்போது பெற்றுள்ள, பெற்றுக்கொண்டிருக்கின்ற சுவாரசியமான அனுபவங்களை எல்லாம் தவறவிட்டிருபேன். யாருக்குத் தெரியும்…!!! வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்திருக்கலாம். இருந்தாலும் தற்போதைய அனுபவங்கள் அழகாகவே இருக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் கல்வி எவ்வளவு முக்கியம் என்று நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். அந்த வகையில் தான் நான் எனது பாடசாலை வாழ்க்கையை, யாழ் வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரியில் ஆரம்பித்து பின்னர் 93-94 பருவத்தில் இடம்பெயர்வுக்கு முன்னரே வவுனியா சென்று அங்கே 5ம் வகுப்பு வரை சைவபிரகாச வித்தியாசாலையிலும் ( தற்போது அது சைவபிரகாச மகளீர் கல்லூரி ) பின்னர் 6ம் வகுப்பு முதல் சாதாரண தர பரீட்சை வரை வ/தமிழ் மத்திய கல்லூரியிலும் பின்னர் காலச் சக்கரத்தால் தூக்கிச்செல்லப்பட்டு உயர் கல்வியினை இந்தியாவில் தமிழ்நாட்டில் திருச்சி மாநகரிலும் கற்றேன். மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கிடைத்தும் கிடைக்காமலும் இருந்த 2003 காலப்பகுதியில் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்தால் ( கலைஞர் போய் ஜெயலலிதா வந்தவா) இலங்கையைச் சார்ந்த ஒருவரும் அங்கு மருத்துவம் பயில முடியாதவர்களாக்கப்பட்டோம். மீண்டும் இலங்கை வந்து, வெள்ளவத்தையில் உள்ள் IITஇல் மென்பொருள் பொறியிலில் பட்டப்படிப்பு படித்தேன்.

நான்கு ஆண்டுகள் முடிந்து கடந்த 23 – 11 – 2009 படித்த பல்கலைக்கழகத்திலேயே ( University of Westminster ) பட்டம் பெறும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த வேளை நான் கடந்து வந்த பாதையையும் என்னை எப்படி எல்லாம் தம்மை ஏணிகளாக்கி சுமந்தவர்களையும் சற்றே நினைத்து பார்க்க முனைகின்றேன்.

சொந்த ஊர் சுளிபுரம் என்பதால் வட்டுக்கோட்டைக்கு சொகுசூர்ந்து ஒன்றில் தான் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்தேன். இன்னும் நினைவிருக்கின்றது… வாகனம் எங்களது வீட்டுக்கு வரமுடியாது. அந்த அழவுக்கு மிகவும் ஒடுக்கிய ஒரு ஒழுங்கையில் தான் எமது வீடு இருந்தது. என்றாலும் 2 நிமிடத்தில் நடக்கக்கூடிய தூரத்தில் வீடு இருந்தும் அம்மா ஈருருளி கொண்டு வந்து அதில் என்னை இருக்க வைத்து உருட்டிச் செல்வார். இல்லாவிட்டால் அந்த ஒழுக்கையில் இருந்தே அழுவேன். இத்தனைக்கு அம்மாவுக்கு ஈருருளி ஓடத்தெரிந்திருக்கவில்லை.

இந்த காலப்பகுதியில் தான் எங்கள் ஊரில் இருக்கும் சுமதி அக்காவிடம் ஆங்கிலம் படிக்க போனேன். இப்பவும் என்னைபற்றி ஆங்கிலத்தில் எழுதச் சொன்னால் அவா எழுதித் தந்து பாடமாக்கின myself தான் நான் எழுதுவன். அதுக்கு பிறகு வேணும் எண்டா எதாவது அதிகமாக சேர்க்கலாம். எனக்கு 2ம் ஆண்டில் படிக்கும் போது பள்ளியில் poem பாடமாக்கி சொல்ல சொன்னவை. அப்ப சுமதி அக்கா தான் சொல்லி தந்தவா. அதில பள்ளி மட்டத்தில் முதல் பரிசு கிடைந்தது தான் எனக்கு நினைவில் உள்ள, நான் வாங்கிய முதல் பரிசு. அதற்குப் பின் எத்தனையோ எத்தனையோ…! இருந்தாலும் சுமதி அக்கா எனது வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான ஒரு நபர். எந்த நேரத்தில் எனக்கு ஆங்கிலத்தில் பிரச்சனை எண்டாலும் சொல்லித்தருவா. ஒரு முறை ரொட்டிக்கு மா குழைச்சுக்கொண்டு எனக்கு படிப்பிச்சவா. இன்னும் ஊரிலேயே இருப்பதாக கேள்விப்பட்டேன். சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு முறை சந்திக்க வேண்டும்.

பின்னர் நாட்டு பிரச்சனை தொடங்கிய பின்னர் சிறிது காலம் பேபி அண்ணாவின் மாட்டு வண்டியில் பள்ளிக்கு போனோம். ( அவர் தான் முன்னர் எங்களை சொகுசூர்ந்தில் பாடசாலைக்கு அழைத்துச் செல்பவர். ) பின்னர் தந்தைக்கும் வேலை இல்லாமல் போகவே அவரே எங்களை பாடசாலைக்கு ஈருருளியில் கூட்டிச் செல்வார். பின்னர் 3ம் ஆண்டு படிக்கத் தொடங்கியதும் நானே ஈருருளியில் தனியாக பாடசாலை சென்றேன். இந்த காலத்தில் தான் ஒரு முறை நான் திறப்பை தொலைத்து விட்டு பள்ளி அண்ணாமார் உதவியுடன் பூட்டை உடைத்துக்கொண்டு வீடு வந்த சந்தர்ப்பமும் நிகழ்ந்தது. அது தான் எனது வாழ்நாளில் மிகவும் கவலைப்பட்ட, வீட்டில் அடிப்பார்களோ என்று பயந்த முதல் சந்தர்ப்பம். இடையிடையே நடக்கும் cricket போட்டிகள் இன்னும் நினைவில் இருக்கிறது ( அப்ப தொடங்கியது தான் )

பின்னர் 4ம் ஆண்டில் நான் முதல் முதலாக எனது குடும்பத்தை, எனது வீட்டுத் தோட்டத்தை, நான் பார்த்து வைக்கோல் போட்ட மாடுகளை, என்னருமை ஆட்டுக்குட்டியை எத்தனை பெரிய மழை பெய்தாலும் ஒரு துளிகூட உட்புக விடாத அடர்ந்த புளியமரத்தை…, வீட்டின் பின்புறம் இருந்த கோழிகள் இரவிலே அடையும் பெரிய பூவரச மரத்தை…, கிணற்றில் வளர்ந்த ஒரு சோடி பாலாமைகளை… இன்று கூட நினைத்தாலே நெகிழ்ச்சி தரும் என் மண்ணை வருடி வரும் தென்றலை… இப்படி எத்தனையோவற்றை பிரிய நேர்ந்தது.

பத்து வயதுக்கு முதல் வவுனியாவுக்கு என்னை அனுப்பி வைத்தார்கள். (வயதுக்கட்டுப்பாட்டுக்கு முதல்) வித்தியாசமான வாழ்வொன்று ஆரம்பித்தது. ஓராண்டுக்குள் குடும்பதவர் அனைவரும் வந்து விட்டார்கள் தான். இருந்தாலும் அந்த ஒரு வருடத்தில் நிறைய கற்றுக்கொண்டேன் இத்தனைக்கும் அப்போது எனக்கு வெறும் 10 வயது தான்.

வவுனியாவில் பலரது சந்திப்பும் அனுபவமும் கிடைத்தாலும்…, மறக்கவே முடியாதது, 5ம் ஆண்டு படிக்கும் போது தமிழ் தின போட்டிக்காக மாகாண மட்டத்தில் கல்முனை சென்று முதலிடம் பெற்றதும், பின்னர் அகில இலங்கை மட்டத்தில் கலந்து கொள்ள பதுளை சென்றதும். ( அதில எத்தினயாவது இடம் கிடைச்சது எண்டு ஞாபகம் இல்லை)

பின்னர் மகாவித்திலாயல வாழ்க்கை. எப்போதுமே கலந்து கொள்ளும் ஆங்கில தின போட்டிகள். ஒரு போதும் தவற விடாத தமிழ்தினம். எப்போதாவது பரிசு பெற்றுத் தரும் ஒலிவிழா பேச்சுபோட்டிகள், நவராத்திரி விழாக்கள், தினமும் முழுப்பள்ளியையும் வதைக்கும் அளவுக்கு காலைப்பிரார்த்தனை முடிய நான் முன்னின்று நடாத்திய உடற்பயிற்ச்சி நிகழ்வுகள், வெள்ளிக்கிழமை என்றால் சிவபுராணம் படிக்க சென்ற சிந்தாமணிப்பிள்ளையார் கோயில்.. பின்னர் பள்ளிக்கு உள்ளேயே எழுப்பப்பட்ட வித்தியா விநாயகர் கோயில், பாடவேளை க்கு செல்லாமல் செய்யும் நாடக ஒத்திகைகள், 9ம் ஆண்டு முதல் ஆங்கில இலக்கியம் படிக்க வெளிக்கிட்டு ஒவ்வொரு பாடவேளையும் நூலகமே கதியாக ஒளித்துத்திரிந்த பொழுதுகள்…, சின்னச் சின்ன சண்டைகள்…, பல தோல்விகள்…, அதை மறக்கும் அளவுக்கு அமைந்த சில வெற்றிகள்… வீனஸ் கல்வி நிலையத்தின் புதிய இடமாற்றம்…, அமரரான சந்திரன் ஆசிரியருடன் சேர்ந்து நாம் செய்த சிரமதானம்…, சிறுவர் பூங்கா… கண்முன்னேயே தறிக்கப்பட்ட ஆழமரம்…, யங்ஸ் ஸ்டார் விளையாட்டுக்கழகம்…, முதல் முதலை விளையாடிய மேசைப்பந்து…, தாண்டிக்குளத்தில் இருந்து கற்குழி வரைக்கும் பாவற்குழத்தில் இருந்து சாந்தசோலை வரையான நன்பர்களுடன் செய்த சேட்டைகள்…., 1994ல் பல வருடங்களுக்கு பிறகு வான் பாய்ந்த முதல் முதலாய் நான் பார்த்த வவுனியா குளம்…., குடியிருப்பு பீலிக்கரை…, வைத்திய சாலை பின்புறம் இருந்த கூழாம் மரம்… அதில் கடிவாங்கிய முசுரு (எறும்பு) கூடுகள்…. பின்பக்க வயல்வெளி…, விளையாடிய பந்தாட்டம்…, ஏற்றிய பட்டங்கள்…அறுந்து தொலைந்த பட்டங்கள்….அடிக்கடி நிகழும் குண்டு வெடிப்புகள்… அடிக்கடி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்க செல்லும் brown company…. சாதாரண தர பரீட்சை காலத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள்…., அடிதடிகள்…, சாலை ஓர நக்கல்கள்… தீபாவளி கொண்டாட்டங்கள்…, வாணிவிழா உற்சாகங்கள்…! தேடிச்சென்று கேட்கும் தமிழருவியின் சொற்பொழிவுகள்… பட்டிமண்டபங்கள்…, கதிர் ஆசிரியரின் பட்டிமண்டபப் பேச்சு…, பேச்சிலே என்னை அதிகம் கவர்ந்த கார்திகேயன் அண்ணா…, அவர் கடைசியாக நிகழ்த்திய ஆசிரியர் தினம்…, முத்தையா மண்டபம்… சாதாரண தர பரீட்சையில் விஞ்ஞான பாட பதில்கள் நண்பனுக்கு அனுப்ப முயன்று பிடிபட்ட சந்தர்ப்பம்…., இறுதியாய் மகாவித்தியாலயத்தில் நான் தலைமை வகித்து நடாத்திய இறுதி விருந்து… அப்படா மூச்சு முட்டுகின்றது…! இன்னும் எத்தனையோ எத்தனையோ…!

பின்னர் உயர்கல்விக்காக இந்தியா சென்றேன். புதிய இடம் இருந்தாலும் சுதந்திரமான ஒரு அனுபவம்…! முழுக்க முழுக்க ஆங்கில மொழிமூலக் கல்வி. தெப்பைக்குளம்…! அருகில் இருந்த SSI நிறுவனம். கணணிக்கு என்னைப்பிடிக்கவும் எனக்கு கணணியைப் பிடிக்கவும் பயன்பட்ட இடம் தான் இந்த SSI. கரூர் by pass வீதியில் அடிக்கடி நிகழும் கண்காட்சிகள்…, நண்பர்களோடு நண்பர்களாய் சென்று சுட்ட பொருட்கள்…! இறுதிப் பரீட்ச்சை…! மலைக்கோட்டை பிள்ளையார் கோயில்….! முதல் முதலாய் பள்ளிக்கு செல்லாமல் சென்று பார்த்த ‘தில்’ படம். மாரீஸ் திரையரங்கு…, பின்னர் சிறிது காலம் விளையாட்டாய் பிஷப் ஹீபர் கல்லூரியில் தாவரவியல் படிப்பு.

இத்தனைக்கும் பின் மீண்டும் இலங்கை என்னை அழைத்தது. இங்கு தான் மீண்டும் எனது கல்வி வேறொரு திசையில் செல்ல ஆரம்பித்தது. நான் சற்றும் எதிர்பார்க்காத மென்பொருள் பொறியியல். ஒரு வழியாக பட்டமும் பெற்றாகி விட்டது.

என்ன தான் நான் படித்து முடித்திருந்தாலும் இந்த பட்டத்தில் பங்கு உடையவர்கள் எனது தாய் தந்தையும், அம்மா வழி மாமன் மாரும் அப்பா வழி பெரியப்பாக்களும் தான். விதி வசத்தால் அனைத்தும் இழந்து இது தான் எங்களிடம் இருக்கின்றது என்று சொல்லிகொள்ள ஒன்றுமே இல்லாமல் வெறும் கற்ற கல்வியோடு நின்றிருந்த வேளை என்னை படிக்கவைத்தவர்களை இந்த இடத்தில் நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

எனது அம்மாவும் அப்பாவும் சாதாரண தரம் வரை படித்தவர்கள். குடும்ப சூழ்நிலை அவர்களது படிப்பை நிறுத்தியிருந்தது. அதனாலோ என்னவோ நான் படிப்பதற்கு அவர்கள் எடுத்த அக்கறை சொல்லில் அடங்காது. சாதாரண தரம் படிக்கும் காலத்தில் என்னோடு சேர்ந்து அவர்களும் நித்திரை முழித்திருப்பார்கள். படிப்பதற்காக என்ன கேட்டாலும் இல்லை என்றே சொன்னது கிடையாது. நான் இந்தியாவில் படிக்கும் போது எனது வகுப்பில் படித்து கிட்டத்தட்ட 180 மாணவர்களுக்கு கணக்கு போதிக்கும் அளவுக்கு என்னை உயர்த்தியவர்கள் என் பொறோர்கள். அப்படி ஒரு திறமை எனக்கு வளர காரணமாக இருந்தவர்கள் என் பெற்றோர்கள். எத்தனை பண நெருக்கடி இருந்தாலும் அவர்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாது செய்து முடிப்பார்கள். அவர்கள் எனக்கு சொல்லாவிட்டாலும் எனக்காக அவர்கள் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் எனக்கு தெரியும். அவர்கள் ஒரு போதும் என்னிடம் காட்டிக்கொண்டது கிடையாது. என்னால் அவர்களை போல் ஒரு சிறந்த பெற்ரோராக இருக்க முடியுமோ எனக்கு தெரியாது. இருந்தாலும் அவர்களுடைய தியாகம் என்னால் மறக்க முடியாது ஒன்று.

நேற்று பிறந்த நாளை கொண்டாடிய( 24 – 11 2009 ) என் அப்பாவுக்கும் இன்று பிறந்த நாளைக்கொண்டாடும் (25 – 11-2009 ) எனது அம்மாவுக்கும் நான் வாங்கிய இந்த பட்டத்தை சமர்ப்பிக்கின்றேன்….!

5 Comments more...

விண்டோஸின் அடுத்த இயங்குதளம் (Windows 8)

by on Nov.24, 2009, under கணணி

நீங்கள் தற்போது விண்டோஸ் 7 பாவனையாளரா அல்லது அதனை பயன்படுத்துவது பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கின்றீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான். விண்டோஸின் அடுத்த் இயங்கு தள் வெளியீடாக விண்டோஸ் 8 வருகின்ற 2012ல் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது ஒண்டும் ஆச்சரியம் தருகின்ற விடயம் இல்லைத் தான்.

வழக்கமான திட்டமிடல்களுடன் கூடிய வேலைப்பாடாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைகளின் படி, விண்டோஸ் நிறுவனம் தனது அடுத்த முக்கியமான வெளியீடாக விண்டோஸ் 8 வெளியிடப்பட இருக்கின்றது.

Leave a Comment more...

லண்டனும் தொழில் தர்மமும்…!

by on Nov.21, 2009, under பதிவுலகம்

“செய்யும் தொழிலே தெய்வம்” என்றார்கள். அதையே நம்ம ரஜனிகாந் கூட தன்னுடைய படத்தில ஒரு பாட்டு மூலமாகவும் மிக அழகாக சொல்லியிருப்பார்.

உண்மைதான். எந்த தொழில் செய்தாலும் செய்கின்ற தொழிலை நாம் தெய்வமாக போற்றாவிட்டாலும் தொழிலாக ஆவது மதிக்க வேண்டும்.

நான் இலங்கையில் இருந்த காலத்தில் பல சிறிய நடுத்தர கடைகளில் பார்த்திருக்கின்றேன். அவர்களுடைய முதலாளிகளுக்கு இருக்கின்ற அக்கறை அளவுக்கு அவர்களும் அக்கறையாக இருப்பார்கள். எடுத்துக்காட்டாக, தெகிவளையில் உள்ள “ஹொட்டல் இம்பாலாவில்” ஒரு நாள் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அங்கே இருந்த இரு ஊழியர்கள் தமக்குள்ளே பேசிக்கொண்டிருந்தார்கள். சில நாட்களுக்கு முன்னர் அதற்கு அருகாமையில் திறக்கப்பட்ட ஒரு சாப்பாட்டுக்கடையால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுவிட்டது என்றும், குறைந்தது பத்து கொத்துக்களாவது இன்றைக்கு தமக்கு இல்லாமல் போய்விட்டது என்றும் தமக்குள்ளே பேசிக்கொண்டார்கள். உண்மையிலேயே அவர்களுடைய பேச்சிலே அவர்களுடைய வருத்தம் தெரிந்தது.

இதில் ஆச்சரியம் தரும் விடயம் என்னவென்றால் இம்பாலா இருபத்து நான்கு மணிநேர கடை என்பதாலும் மிகவும் அதிகமான மிகவும் நீண்டகால வாடிக்கையாளர்களைக் கொண்ட கடை என்பதாலும் அங்கு எப்போதுமே வியாபாரம் அமர்களமாகத் தான் இருக்கும். சொல்லப்போனால் இவர்களால் தான் அந்த பகுதில் வரும் சாப்பாட்டுக்கடைகள் எல்லாமே குறைந்த மூன்று மாதங்களுக்கு மேல் நிலைத்து நிற்பது குறைவு.

அன்று அவர்கள் அந்த பத்து கொத்துகளை நினைத்து வருந்தியது மிகவும் ஆச்சரியமாகவும், மிகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. சொல்லப்போனால், இதனால் அவர்களுக்கு எந்தவித இலாபமும் நேரடியாக வரப்போவது இல்லை.

(காட்சி மாற்றம்)

தற்போது லண்டனில் ஒரு கடையில் நான் வேலை செய்கின்றேன். நான் செய்கின்ற வேலையை எவ்வளவு தூரம் விரும்பிகின்றேன் நேசிக்கின்றேன் என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நான் வேலை செய்யும் போது ஒரு ஈடுபாட்டுடன் தான் செய்கின்றேன்.

அது ஒரு புறம் இருக்கட்டும். இங்கு என்னுடன் பலர் வேலை செய்கின்றார்கள். இருந்தாலும் சிலருக்கு வார இறுதி நாட்களில் வேலை செய்யத்தான் விருப்பம். ஏனின்றால் லண்டன் மாநகரமே வெள்ளி இரவு தொடக்கம் கேளிகை, களியாட்டங்கள் என்று குடித்து கும்மி அடித்துவிட்டு வார இறுதியில் கடைகளுக்கு செல்வது குறைவு. அதற்காக அவர்கள் வார இறுதியில் கடைக்கு வருவதே இல்லை என்று இல்லை. நான் வேலை செய்வது ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் ஆதலான் இங்கு வருவது மிகக்குறைவு.

அது மட்டுமல்ல. அதிக கூட்டம் வந்தால் சலித்துக்கொள்வார்கள். எரிந்து விழுவார்கள். நான் எல்லோரையும் குறைகூற வில்லை. இவர்கள் தான் என்று குறிப்பிட்டு சொல்லவும் இல்லை. என்னதான் இருந்தாலும் செய்கின்ற தொழில்களை மனமகிழ்வோடு செய்வது மனிதர் நம் கடமை அல்லவா…? வேலைக்கு வரும்போது நீங்கள் எல்லோரும் உங்களுடைய மனிதத்தன்மையை வீட்டிலேயே வைத்துவிட்டா வருகின்றீர்கள்….!!! இதை நாம் ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்…?

1 Comment more...

அமைதி

by on Nov.21, 2009, under கவிதைகள்

நாம் அமைதியை நேசிப்பவர்கள் தான்….!
ஆனால் அதை விட அதிகமாக
நம் மண்ணை நேசிக்கின்றோம்….!

அமைதிக்கு இலக்கணம் படைத்தவரே
நாம் தான்….!
சுதந்திர சுவாசத்துக்காக நாம்
யாசித்தபோது எங்கே சென்றீர்கள்
இந்த அமைதி விரும்பிகள்…???

ஓ…! அமைதி வேண்டிகளே…
எங்கே சென்றீர்கள் நாம்
கொத்துக்கொத்தாய் செத்து
மடியும்போது….!

எமக்கு மௌனத்தின் வலிமையும்
தெரியும்….!
கண்ணீரின் கனமும் தெரியும்…!
இதை பிறக்கும் போதே வரமாய்
பெற்றவர் யாம்…!

நேரம் வந்தால்…
அமைதி வேண்டி
அமைதியைச் சுட்டெரிக்கவும்
தெரியும்…!

1 Comment more...

தலைப்பே இல்லாத ஒரு கவிதை

by on Nov.03, 2009, under கவிதைகள்

ஏனோ தெரியவில்லை…!
ஏதாவது எழுதவேண்டும்
போல் இருந்தது.

கண்ணை மூடிச்
சிந்தித்தேன்…!
விண்ணைக் கூர்ந்தும்
சிந்திதேன்…!
என்னைக் கொண்டு
முடியுமான வரை
எண்ணிப்பார்த்தேன்…!

கார் இருட்டில்
ஊசி தேடுவதைப் போல…
நார் உரிக்க
கல்லை எடுத்தது போல…
ஏர் எடுத்த
முடவன் போல…

வார்த்தை வர
மறுத்தே தொலைத்தது…!
காற்றைக்கேட்டேன்
உதவி நில்லென்று…!
பார்த்துச் சிரித்து
ஏளனம் செய்தது…!

எங்கே போவேன்
வார்த்தை தேடி
எங்கே கிடைக்கும்
நற்றமிழ் பள்ளி
இங்கே வாழ்ந்தால்
இருப்பதும் மறக்கும்

வேண்டும் எனக்கோர்
மணித்திரு நாடு
ஆண்டும் அவையும்
தமிழே செய்யனும்..!
வாண்டும் வாழையும்
தமிழே பாடனும்…!

என்று நிறைவுறும்
நான் காணு சொற்பனம்..???
இன்றே உரைத்திடு
உறுதியாய் உரைத்திடு…!!!

3 Comments more...

வந்தவர்கள்

free counters